அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஜூலை 24, 2017

மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!



மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

ஒருவனுக்கு திருமண வாழ்வு என்பது எவ்வளவு சந்தோசத்தையும் அவனுடைய வாழ்வில் உற்சாகத்தைத் தந்து அவனுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதோ அதுபோலவே அதே திருமணம் ஒருவனுடைய வாழ்வையே கேலிக்குரியதாக ஆக்கி, அவனுடைய முன்னேற்றத்தையே முடக்கி ஒருவனை செயலற்றதாகவும் ஆக்குகிறது. அதற்காக மனித இனம் பல்கிப்பெருகுவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருமண உறவுமுறையை ஒருவன் புறக்கணித்து வாழவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை!


ஒருவனுடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவது அல்லது நரக வாழ்க்கையாக மாறுவது என்பது ஒருவர் தேர்வு செய்கின்ற மணமகள் அல்லது மணமகனைப் பொறுத்ததாகும். ஒரு முஸ்லிம் இஸ்லாம் காட்டித்தந்த முறையில் சந்தோசமான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான அழகான வழிமுறைகளையும் காட்டுகின்றது.

மணமகளைத் தேர்வு செய்யும் வழிமுறைகள்!

மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துக்கொள்ள வேண்டும்!

பொதுவாக மக்களின் இயல்பு என்னவெனில், பணக்காரர்களாக இருந்தால் தம் குடும்பப் பாரம்பர்யத்திற்கு சமமாகவோ அல்லது அதை விட அந்தஸ்தில் கூடுதலோகவோ பார்த்து மணப்பெண் அழகிய தோற்றமுடையவராகவும் இருக்கவேண்டும் என்று பார்ப்பார்கள். நடுத்தர மற்றும் ஏழை மக்களும் இதற்கு பெரும்பாலும் விதிவிலக்கல்ல! வேறு வழியின்றிதான் தங்களுக்கு அந்தஸ்தில் சமமானவர்களை மணமக்களாக தேர்வு செய்வார்களே தவிர வாய்ப்புக் கிடைத்தால் மேற்கூறியவாறே இவர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளுடைய செல்வத்திற்காக
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி.

குடும்ப கவுரவம், அந்தஸ்து செல்வாக்கு மிக்க குடும்பத்தில் சம்பந்தம் செய்து தம் மகன் சந்தோசமாக வாழவேண்டும் என்று கருதுபவர்கள், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருக்கும் ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது இவ்வுலகில் மனைவி, மக்களோடு சந்தோசமான வாழ்வை அமைத்துக் கொள்வது மட்டுமல்ல என்பதை நன்கு உணரவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இந்த அழகிய வழியில் ஒருவர் மணமகளை தேர்ந்தெடுக்கும் போது அவள் தன் கணவனுக்கு அவனுடைய மார்க்க விசயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்வதோடு அவன் தவறுகிறபோதெல்லாம் அவனுக்கு அறிவுரையும் கூறி அவனை நல்வழிக்குத் திருப்புவாள். அதே நேரத்தில் மார்க்கம் என்றால் என்னவென்றே அறியாத, மேலை நாகரீக கலாச்சாரத்திலும், தற்கால சினிமா, கூத்து போன்ற சீர்கேடுகள் போன்றவற்றில் அதிக ஆர்வமுடைய பெண்ணைத் தேர்ந்தெடுப்பின் அவன் அவளின் நிர்பந்தங்களுக்கு பணிந்து அவள் கோருகின்ற அத்தனை ஆபாசங்களுக்கும் அநாச்சாரங்களுக்கும் இவனும் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு உட்பட நேரிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்

மேலும் அழகு மற்றும் செல்வத்திற்காக மட்டுமே ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி நபி (ஸல்) கூறுகிறார்கள்:

“பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள்” என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

குடும்ப பொறுப்புள்ள பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்தல்!

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்து “நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே” அல்லது “நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே” ” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் “ஒன்பது” அல்லது “ஏழு” பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு “வளத்தை அளிப்பானாக” என்று, அல்லது “நல்ல வார்த்தையை” என்னிடம் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது விரும்பத்தக்கதாகும்:

நமது தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே உள்ள மற்றொரு தவறான பழக்கம் மணமகளைத் தேர்வுசெய்யும் போது மணமகளைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது தான். இஸ்லாமிய திருமணம் என்பதே மணமகன் மற்றும் மணமகளிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதேயில்லையெனில் அவர்களின் ஒப்பந்தம் எந்த வகையில் சரியானதாகும்? நம்மில் பலபேர்கள் முதலிரவு அன்று தான் தம் வாழ்க்கைத் துணையை முதன்முதலாகப் பார்த்திருப்பார்கள். அந்த அளவிற்கு மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மை நம் மக்களிடம் இருக்கிறது. இதன் காரணமாக திருமணமான மறு நாள் அல்லது சில நாட்களிலேயே ஏற்பட்ட விவாகரத்துகளும் அதிக அளவில் நம் சமூகத்திலே நடைபெற்றிருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு” என்று சொன்னார்கள். ஆதராம்: முஸ்லிம்

ஒருவர் பெண் பேசிக்கொண்டிருக்கையில் நாம் குறுக்கே புகுந்து பெண் கேட்கக்கூடாது.

அடுத்ததாக நம்மவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, ஒருவர் ஒரு இடத்தில் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே இடையில் புகுந்து அந்தப் பெண்ணை தமக்காகப் பேசுவது!. இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்; “ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்)” என்றும் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!

மணமகளை தேர்வுசெய்வதில் எவ்வாறு கவனனம் செலுத்த வேண்டுமோ அதுபோலவே நாம் மணமகனைத் தேர்வுசெய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் தவறிழைப்பதால் தான் நம் முஸ்லிம் பெண்களில் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.

மணமகன் படித்தவரா, நிறை சம்பாதிப்பவரா என்றெல்லாம் பார்க்கும் நாம் அவரிடம் இருக்கும் மார்க்கக் கல்வி, மார்க்கத்தில் பேணுதல் போன்றவற்றை கவனிக்கத் தவறுகிறோம். நம்முடைய பெண் வாழப்போகும் இடத்தின் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலை இஸ்லாமிய வரையறைக்குட்பட்டிருக்கிறதா? அல்லது நவநாகரீக மோகத்தின் உச்சியில் வழிகேட்டிலிருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். அடுத்ததாக மிக மிக முக்கியமாக அந்தக் குடும்பத்தவர்கள் தர்ஹா, கப்ர் வழிபாடுகள் போன்ற ஷிர்க்கைச் செய்யாமல் இருக்கிறார்களா என்றும் மவ்லிது, மரணச்சடங்குகள் போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பித்அத்களைத் தவிர்ந்தவர்களாக இருக்கிறார்களா என்பதையும் அவசியம் பார்க்கவேண்டும். ஏனென்றால் இணை வைப்பவர்களை மணந்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.” (2:221)

மணமகனைத் தேர்வு செய்வதில் செல்வத்தைக் காட்டிலும் ஒருவருடைய மார்க்கப்பற்றுதலையே பிரதானமாகக் கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்குத் தெளிவாக்குகிறது.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்:

ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள். புகாரி

1 கருத்து:

  1. அருமையான விளக்கம் மகிழ்ச்சி வாழ்த்துகள் இதுபோன்ற ஹதீஸ் களை எனக்கு அனுப்பவும் தமிழில்

    பதிலளிநீக்கு

Welcome to your comment!