சனி, பிப்ரவரி 15, 2020

ஆடி ,ஓடித் திரிந்தாலும் , அடங்கும் நாள் ஒன்று வருமே!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நிரந்தரமில்லாத, அற்பமான ,சொற்பமான வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கி விடுகிறோம். 50 அல்லது 70 ஆண்டு வாழ்வுப்  பயணத்தை, 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது 'நம்பிக்கை ' இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பமான ஆரம்ப நிலையையும் , இறுதியான மரணத் தருவாயையும் மறந்துவிட்டு, மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.பொய், புரட்டு, பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம் போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான்.உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி, பாவத்தில் மூழ்கும் போது  வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.  ஏன் இந்த சூழ்நிலை?!⏳👈☝

நாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டோம்? இந்த உலகம் யாருக்காக படைக்கப்பட்டிருக்கிறது?  உலகத்தில் இருக்கும் அனைத்து பொருள்களும் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளது! மனிதன், மறு உலக வாழ்க்கைக்குத் தேவையான நல்ல அமல்களைச் செய்து கொள்ளப் படைக்கப் பட்டிருக்கிறான்.

இவற்றையெல்லாம் மறந்து விட்டு , மருட்சியில் வாழ்வதால் இந்த வையகத்திற்கு என்ன பயன்? நம்மால் நமக்கே என்ன பயன்? மனிதர்களே! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! எவ்வளவு நாள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும். அப்போது பொறியில் மாட்டிய எலிக் கதைதான், சாக்கைக் கடித்து, சட்டியைச் சுரண்டி, நிலத்தில் துவாரமிட்டு, பயிர்களை நாசமாக்கி, தானிய மணிகளை வீணாக்கி ஆடி ஓடித் திரிந்தாலும், ஒரு நாள் பொறியில் சிக்கித்தானே ஆகவேண்டும். அதுபோல இப் புவியில் எங்கும் எப்படியும் மனம் போன போக்கில் நடக்க வாய்ப்பு உண்டு . ஆனால் கடைசில் மரணம் என்ற இடுக்கில் சிக்கி,  உயிர் வாங்கப்படும் .இதை யாரும் மறுக்கவோ , மறக்கவோ முடியாது. ஆரம்ப நிலையை உணர்ந்து இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும்!

உள்ளத்திற்கு தெளிவு, குடலுக்கு உணவு , உடலுக்கு மனைவி , கண்ணுக்கு வெளிச்சம், காதுக்கு நாதம் ; நாவுக்கு சுவை என்பவை மட்டுமா ? இன்னும் இவை போன்ற  எத்தனையோ இன்ப சுகங்களை இங்கு வைத்திருக்கிறான். ஒரு மாளிகையில் மனிதனுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.  அவன் விரும்பும்போது விரும்பியதை எடுத்துக்கொள்ள உரிமையும் உண்டு. ஒருவன் பேராசையால் எந்த  எந்தப்பொருள் முக்கியமானது? - எதை எதை எடுத்துக்கொள்ளலாம்? எனச் சிந்திக்காமல், ஒரேடியாக மாளிகையையே தூக்கிக் கொண்டு ஓட  நினைக்கிறான். இன்னொருவனோ, தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இதில் யார் புத்திசாலி? யார் வெற்றி பெற்றவர்? தேவைக்குப் போதுமானதை மட்டும் விரும்பியவன் தானே? எனவே, இந்த உலகம் மண்ணாசை, பொன்னாசை , பெண்ணாசை போன்ற பல்வேறு ஆசைகளால் அலங்கரித்துக் கட்டப்பட்ட மாளிகை போன்றது.

இன்னும் சொல்வதென்றால், இந்த உலகத்தை ஒரு கிழவிக்கு ஒப்பிடலாம். நூறு வயது கிழவிக்கு அழகிய பட்டாடை உடுத்தி, நவரத்தினங்களால் அலங்கரித்து, கவர்ச்சியான ''மேக்கப் செய்து நிற்கவைத்து பார்க்கும்போது , சபலபுத்தி கொண்டவன் ஆடை ஆபரணங்களை கண்டு ஏமாறுவான். புத்தியுள்ளவன் அவளுடைய சுருக்கம் விழுந்த உடலைக்கண்டு வெறுப்படைவான். தொய்ந்துபோன கிழவியின் மீது ஆசையோ, மோகமோ அவனுக்கு ஏற்படாது.

சந்தையின் வீண் வேடிக்கைகளையும் , கேளிக்கைகளையும் கண்டு ரசித்துவிட்டு, எந்த நல்ல பொருளையும் வாங்காமல் வெறுங்கையுடன் திரும்புகிறவர்கள், வீட்டில் பட்டினியாக கிடப்பார்கள். பசியால் துடிப்பார்கள். ஒரு பொருளையும் வாங்காமல் வந்துவிட்ட தவறுக்காக வருந்துவார்கள். அப்போது வேடிக்கை பார்த்து மகிழ்ந்தும், கேளிக்கையில் மூழ்கி இன்பத்தில் திளைத்திருந்தும் எல்லாம் அவர்களுக்குப் பெரும் வேதனையாக இருக்கும். இது போன்றுதான் இந்த துன்யா ' என்ற சந்தையும் என்பதாக நாம் சிந்தித்து உணரவேண்டும்!

உலக வாழ்க்கை என்ற நீர்தடாகத்தில் தாமரை போன்று இலையில் நீர் ஒட்டாமல் அதே  நீருக்கடியில் தனது வேரை ஊன்றச் செய்து வளரும் தாமரை குணத்தை ஒத்த உத்தமர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். ஒட்டியும், ஒட்டாமலும், பட்டும் படாமலும் சிலர் நடுநிலைமையோடு வாழ்கிறார்கள்! சிலர் அதிலேயே மூழ்கி அப்படியே மடிந்து விடுகிறார்கள். ஒரு நிலையான -நிம்மதியான  -மனித வாழ்க்கை வாழ விரும்பினால் இஸ்லாம் அதற்கு அழகிய வழிகளை உன்னத நடைமுறைகளை உயர்ந்த பண்பாடுகளைப் போதிக்கிறது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!