வீடு என்பது இறைவனின் அருட்கொடை!

ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.
கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.

வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.
வீடு என்பது இறைவனின் அருட்கொடை!
வீட்டை இறைவனின் அருட்கொடை என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.
அல் குர்ஆன் 16:80
வீட்டை விட்டு துரத்தப்பட்ட யூதர்கள்!
வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும். யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.
هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ ۚ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا ۖ وَظَنُّوا أَنَّهُمْ مَانِعَتُهُمْ حُصُونُهُمْ مِنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا ۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
 அல்குர்ஆன் 59:2-4
வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா?
ஆம்! நம்முடைய வீடு இறைத்தூதர் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்திருக்குமென்றால் அது நமக்கு சொர்க்க வீட்டைப் பெற்றுத் தரும். நம்முடைய வீட்டில் இறைத்தூதர் தடுத்த அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றால் அது நமக்கு நரக வீட்டைப் பெற்றுத் தரும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
இறை நினைவில் இனிய இல்லம்
ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:34
இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.
1299 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الْأَشْعَرِيُّ وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429
இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.
நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால், அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும், கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்.
இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதா? அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா? நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோ, வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றன, ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும், மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமா? நம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?
இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.

கருத்துகள்