அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான் ; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு .
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும் , அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும் , (அப்போது அவர்களை நோக்கி ;) "இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்கத்துச் சோலைகளாகும் ; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் -இது தான் மகத்தான வெற்றியாகும்" (என்று கூறப்படும்)
அல்குர் ஆன் :57:11-12)
சுவர்க்கத்தைப் பற்றி கேட்டுக்கும் போது ரொம்ப ஆசையாக இருக்கிறது . அதில் நாமும் நுழைய அல்லாஹ் நம் மீது கிருபை செய்யணும் .ஆமீன் ..
உங்களுக்கும் ,எனக்கும் நல்ல அமல்கள் செய்ய அல்லாஹ் தௌபீக் செய்யணும்!
அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் , வேடிக்கையும் , அலங்காரமுமேயாகும் ; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும் , சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும் ;(இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும் , (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகள் ஆனந்தப் படுத்துகிறது ; ஆனால் சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர் ; பின்னர் அது கூளமாகி விடுகிறது ; (உலக வாழ்வும் இத்தகையெதெ ; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு ) மறுமையில் கடுமையான வேதனை உண்டு (முஃமின்களுக்கு ) அல்லாஹ்வின் மன்னிப்பும் , அவன் பொருத்தமும் உண்டு -ஆகவே இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றமும் சொற்ப சுகமே தவிர (வேறு ) இல்லை .
அல்குர் ஆன் : 5
அல்லாஹ்வின் இந்த வசனத்தில் நமக்கு ஒரு அழகான படிப்பினை உண்டு . இதைவிட நமக்கு என்ன வேண்டும் , நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட .
மரணம் எப்போ ? எப்படி ? எந்த நேரத்தில் ? எந்த பூமியில் ? வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பது நாம் அறிந்த விடயம்தான் . ஆனால் , நாம் அளச்சியமாக இருந்து வருகிறோம் என்பது எதார்த்த உண்மை. திருமணம் என்றால் , வீடு கட்டுவது என்றால், பயணம் போவது என்றால் அனைத்துக் காரியத்துக்கும் நாம் முயற்சி செய்கிறோம் . ஆனால் , மறுமை விடயத்தில் நாம் கோட்டை விடுகிறோம் . அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.
இன்று உலகம் நம் கையில் இருக்கிறது . இன்டர்நெட் மூலம் நாம் உலகத்தில் நடக்கும் எல்லாத்தையும் பார்க்கிறோம் , சில தகவல்கள் அறிகிறோம் . இந்த நெட்டில் உட்கார்ந்தால் நேரம் போவது நமக்கு தெரியாது . பல வகையில் நாம் பொன்னான நேரத்தை செலவு செய்கிறோம் . இதனால் நமக்கு ஏதாவது பலன் உண்டா என்றால் ."நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்" சில விடயம் பார்க்கிறோம் அது இந்த உலகத்துக்கு பலன் உண்டு . நமக்கு பலன் தராத விஷயத்தில் நாம் விலகி இருக்க வேண்டும் அதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த உலகத்துக்கும் ,மறுமைக்கும் நன்மை பயக்கும் விஷயத்தில் மட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டும் .சில முஸ்லிம் சகோதர ,சகோதரிகள் அதிகமாக ஆபாச தளங்களைப் பார்கிறார்கள் .இச்சைகளை தூண்டும் வகையில் இருக்கும் காம கதைகள் உள்ள தளங்கள் நிறைய இருக்கிறது . இதனால் ஏற்படும் விளைவுகளை சிந்திப்பதில்லை , காம கதைகள் படிப்பதினால் உள்ளத்தில் தவறான தீய எண்ணங்கள் வரும் என்பதை உணர்வதில்லை .
உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும் . அவரால் அது முடியவில்லையெனில் அதை தமது நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லை எனில் அதை அவர் தம் மனத்தால் வெறுக்கட்டும் . இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
ஆதாரம்: முஸ்லிம்.
இன்று நம் நிலைமை அப்படிதான் இருக்கிறது. நம் ஊரில் அல்லது நாம் வசிக்கும் நாட்டில் நிறைய குற்றங்கள் , தீயச் செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது . நம்மால் என்ன செய்ய முடிகிறது ? நம் வாலிபர்களின் தீயச் செயல்களைப் பார்க்கிறோம் , சில முஸ்லிம் பெண்களின் தவறான நடவடிக்கைகள் பார்க்கிறோம் . நம் மனத்தால் ஒதுங்கி விடுகிறோம் . இதுதான் நம் ஈமானின் நிலை .
எது மகத்தான வெற்றி என்று நமக்கு தெரிகிறது , இருந்த போதிலும் இந்த உலகத்தில் பற்றில் நாம் இன்னும் இருந்து வருகிறோம் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை.
நாம் முஃமினாக மாற அல்லாஹ்விடம் துஆச் செய்வோம் . நாம் முயற்சியும் செய்வோம் . நம் உள்ளத்தில் உறுதியான இறை நம்பிக்கை இருப்பினும் , நம் முயற்சிக்கு பலன் உண்டு .அல்லாஹ்வின் உதவியும் உண்டு . அல்லாஹ் நம் உள்ளத்தையும் , செயல்களையும் தான் பார்க்கிறான் , மாறாக நம் உடைகளையோ , செல்வங்களையோ பார்ப்பதில்லை . எண்ணமும் , செயலும் சுத்தமாக இருந்தால் வாழ்வு பிரகாசம்மாக இருக்கும் . வெற்றி இஸ்லாத்தில் தான் இருக்கிறது , இஸ்லாம் நம் வாழ்வில் அமைந்தால் ; இதுதான் மகத்தான வெற்றி .
அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பது அவர்களுக்கு நாம் முழுமையாக வழிப்படுவது, அவர்களைப் பின்பற்றுவது இதில் தான் நேசம் இருக்கிறது . வெறும் வாயளவில் சொல்லி கொண்டு இருப்பதில்லை .
அல்லாஹ் மிக அறிந்தவன் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!