பெற்றோர்கள் இறந்த பிறகு பணிவிடை என்ன?

பெற்றோர்கள் இறந்த பிறகு செலுத்த வேண்டிய பணிவிடை என்ன?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
முதலில் இன்ஷாஅல்லாஹ் பெற்றோர்களுக்காக துஆ செய்வது எப்படி என்பதை நாம் அறிந்துக் கொள்வோம்.
யா அல்லாஹ் ! நான் அறவே பலஹீனனாகவும், அறியாதவனாகவும் இருந்தேன் . அந்த நேரத்திலே அவர்கள் என் தர்பியத்திற்காக வேண்டி தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். அவர்களின் நினைவுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி என் நிம்மதிக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆபத்துகளிலிருந்து தோல்விகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார்கள். என் உயர்வுக்காக வேண்டி பாடுபட்டார்கள். இன்று அவர்களுடைய பலஹீனமான நேரம் நெருங்கி விட்டது, அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு என் கையில் இருக்கிறது. நான் அவர்களுக்கு தேவையான கித்மத்தும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் என்னால் அனைத்து ஹக்கையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நான் உன்னிடம் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மீது உன் ரஹ்மத்தான பார்வையை செலுத்துவாயாக! [ஆமீன்]


பெற்றோர்கள் இறந்த பிறகு செலுத்த வேண்டிய பணிவிடை என்ன?

ஹஜ்ரத் மாலிக் இப்னு ரபியா [ரலி] அவர்கள் கூறினார்கள் ..  '' நாயகம் [ஸல்] அவர்களிடம் ஒருவர் வந்து,  'யா ரசூலல்லாஹ் ! தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார் . அதற்கு  ''ஆம்' என்று சொன்னார்கள் .

மேலும் ,  '' தொழ வேண்டும் . தாய் தந்தையருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும் . அவர்கள் யாரிடமேனும் ஏதேனும் வாக்கு கொடுத்திருந்தால் அதனை பூர்த்தி செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு யார், யார் உறவினர்கள் இருந்தார்களோ அவர்களுடன் நல்லபடி நடக்க வேண்டும். தாய் தந்தையர் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்குகெல்லாம் கண்ணியம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் தாய், தந்தையர் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அடங்கி உள்ளது .
ஆதாரம் அபூதாவூது ]

இன்று , மாறாக ... நம் சமுதாயத்தில் நிறைய காரியங்கள் மாற்றமாக தான் நடக்கிறது. நபிவழியின் முறைப்படி அல்ல . ஒருவர் வீட்டில் அவரின் தாயார் அல்லது தந்தை இறந்து விட்டால்  உடனே இறந்தவரின் சடலத்திற்கு முன்னால் குர்ஆன் ஓதப்படுகிறது . திருக்குர்ஆன் இறக்கப்பட்டது உயிர் உள்ளவர்களுக்காக ! இறந்தவர்களுக்காக அல்ல ! பிறகு ஹத்தம் தொடர்ச்சியாக  சில சடங்குகள் இப்படிதான் கால காலமாக நடந்து கொண்டு வருகிறது. பெற்றோர்களுக்கு எப்படி துஆ செய்ய வேண்டும்..? அவர்கள் இறந்த பிறகும்  செலுத்த வேண்டிய பணிவிடை என்ன என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ள விரும்புவதில்லை.  நாம் விரும்புவது பெற்றோர்கள் என்ன என்ன சொத்துக்கள் விட்டு விட்டு சென்றார்கள்  . பேங்க் இருப்பு என்ன . ஆபரணங்கள் என்ன என்பதை மட்டும் சிந்திக்கிறோம் ஒழிய  , அவர்களின் கடமைகள் பற்றி யாரும் கவலைபடுவதில்லை.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்கள் ஓர் அரபியை வழியில் சந்தித்தார்கள். அவர் அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். அவர்கள் அவரைத் தம்  சவாரி கழுதையின் மீது ஏற்றி சவாரி செய்வித்த பிறகு அவருக்கு தம் தலைப்பாகையையும் கொடுக்கிறார்கள். இதனை பார்த்த அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்களின் தோழர்கள் ஒருவர் கூறினார்,  '' இவர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் மகிழ்ச்சி அடைகிறவர்கள்'' என்று . இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்கள் கூறினார்கள்,  ''நான் நாயகம் [ஸல்] அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல பிள்ளைகளின் கித்மத் இதுதான். அதாவது தந்தை இறந்த பிறகும் தந்தையின் உறவினர்களுடன் நல்லபடி நடப்பதாகும்.

இன்னும் இதுப் போன்ற நிறைய ஹதீஸ்கள் உள்ளன. பெற்றோர்கள் விடயத்தில் அலட்சியமாக இருக்கும் அன்பு பிள்ளைகளே! இப்பொழுதே விழித்துக் கொள்ளுங்கள்! மரணம் எப்போ வரும்..? எப்படி வரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
  

கருத்துகள்