RECENT POSTS

உலகப் பற்று ![அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]

உலகப் பற்று ![அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....................
தாமரை தண்ணீரில் தான் இருக்கும் , ஆனால் அந்த தண்ணீர் தாமரை மீது படாது. ஒரு முஃமின் இந்த உலகத்தில் வாழ்வான், ஆனால் அவன் தாமரைப் போன்று இந்த உலகத்தில் வாழ்வான்.
இவ்வுலக வாழ்க்கையின் ஆடம்பரத்தை விரும்பாத மனிதனே கிடையாது! உலக ஆசைதான் மனைதனைத் திருடவும் பொய் பேசவும் ஏமாற்றவும் வாக்கு மாறவும் செய்கிறது. இதற்கு விதிவிலக்கான எந்த மனிதரையும் நாம் பார்க்க முடியாது.  உங்களின் செருப்பாக உழைப்போம்,, உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி என்றெல்லாம் தேன்சுவை வார்த்தைகளைக் கொட்டும் தலைவர்களைக் கூட இதற்கு விதி விலக்காகக்  கூற முடியாது.


சின்ன பதவி கிடைத்துவிட்டாலே  அவர்கள் அதை பயன்படுத்தி, குடிசையைக் கோபுரமாக்கி, வளமான வாழ்க்கையாகத் தம் நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். சின்ன பதவி கிடைத்தவர்கள் சில வருடங்களில் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரராக மாறும் வித்தையை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆனால் உலக வரலாற்றில் மாபெரும் இராஜ்ஜியத்திற்கு அரசராக வந்த முஹம்மது [ஸல்] அவர்கள் மட்டுமே இந்த ஆசைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவர்கள். உலக ஆசாபாசங்களை உத்தரித் தள்ளியவர்கள். தாம் நாடியிருந்தால் கோடி கோடியாகக்  குவிக்க  வழியிருந்தும்  தம் குடும்பத்திற்குச் சின்ன சொத்தைக்கூட வைக்காமல் சென்ற மாமனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களாவர்.

ஒரு கீழாடையும் கனமான துண்டையுமே  எங்களுக்காக முஹம்மது [ஸல்] அவர்கள் விட்டுச்  சென்றார்கள் என்று அவர்களது துணைவியார் அன்னை ஆயிஷா [ரலி] கூறுகிறார்கள்.
நூல்..புகாரி]

மேலும் அவர்கள் குறிப்பிடும்போது முஹம்மது [ஸல்] அவர்கள் இறந்த சமயம் அவர்களின் கவச ஆடை ஓர் யூதரிடம் முப்பது ஸாவு [அளவு] கோதுமைக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்தது.
நூற்கள்.. புகாரி, முஸ்லீம்]

கவனியுங்கள் ! மக்கா, மதீனா வை வெற்றி கண்டு, இரண்டிற்கும் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தும்  அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மீது மோகம் கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களின் சொத்து ஒரு துண்டு, ஒரு கைலியாக  இருக்க நேரிட்டது. மேலும் அடமானம் வைக்கப்பட்ட பொருளைக் கூடத்  திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட நிலையைத் தேர்வு செய்த எந்த மனிதரையும் நீங்கள் வரலாற்றில் காண முடியாது.

அவர்களின் குடும்பம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நல்ல உணவை உண்டதில்லை. இதமான படுக்கையில் படுத்ததில்லை. மொத்தத்தில் இன்பத்தையே கண்டதில்லை.
பெரும் கூட்டத்தைத் தம் பின்னால் வைத்திருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட வேதனையான வாழ்க்கையைத் தேர்வு செய்ய மாட்டார். ஆனால் அம்மாமனிதர் உலக ஆசையை உதறித்  தள்ளி மறுமையின் வாழ்க்கையையே தேர்வு செய்தார்கள்.

நம்மில் எத்தனை பேர்கள் வசதி குறைவாக இருக்கிறார்கள், அன்றாடம் தேவைகளைக் கூட பூர்த்திக் செய்ய முடியாமல்  இருக்கிறார்கள் . வாழ்க்கையில் பல சோதனைகள் , கஷ்ட்டங்கள், இப்படி வாழ்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து  படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்..  '' அல்ஹம்துலில்லாஹ்'' என்று மனதுக்குள் திருப்தி கொள்ளலாம்.. மற்றவர்களுக்கு இருக்கும் வசதியை பார்த்து பொறாமையும், ஏக்கமும் படாமல் இருக்க  அண்ணல் நபியின் வாழ்க்கையை பார்த்து படித்து திருப்தி படலாம். இன்ஷாஅல்லாஹ் மறுமையில் ''நமக்கு  நிறைய கிடைக்கும் என்று மகிழ்ச்சி கொள்ளலாம்.  வசதியாக இருப்பவர்கள்  ''அல்ஹம்துலில்லாஹ்! '' போதும் என்ற மனதை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். இன்னும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது . அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் நமக்கு பாடமும், படிப்பினையும், நல்லுணர்வு பெற்று  நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு வழி  இருக்கிறது!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்