முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥
செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும்.
பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு அனுபவிக்க முடியாத அவஸ்தையை அவர்களிடம் கேட்டால் மனம் வெதும்பி அது பற்றி விவரிப்பார்கள்.

விரும்பியதை உண்டு மகிழ முடியாது என்பது மட்டுமல்ல, நோயினால் விரும்பிய செயல்களை ஆற்றவும் இயலாது போகும்.
எனவேதான் இஸ்லாமும் நோயற்ற வாழ்வை பெரும் பாக்கியம் என்று சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 6412

இன்றைக்கு நோயில்லா வாழ்க்கை என்பது பகல் கனவு என்று கருதுமளவு அரிய விஷயமாகி விட்டது.


புதிது புதிதாய் பல நோய்கள் தோன்றுகின்றன. நமது முன்னோர்கள் கண்டிராத, அறிந்திராத பல நோய்களுக்கு இன்றைய சமுதாயம் ஆளாகியிருக்கிறது. ஊரெங்கும் பெருகும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் அதில் சிகிச்சை பெறுவதற்காக மொய்க்கும் கூட்டத்தையும் காணும்போது முற்காலத்தைவிட தற்காலத்தில் நோய்கள் பெருகியிருப்பதை அறியலாம்.
நோய்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதைக் காண்போம்.

தெய்வீக(?) மருத்துவம்
இஸ்லாமும் மருத்துவமும் என்ற தலைப்பில் பலரும் இன்னின்ன வசனங்களை ஓதினால் இன்னின்ன நோய்கள் குணமாகும் என்று பொய் புரட்டுகளை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுதியுள்ளார்கள்.
குண்டானவர்கள் மெலிந்து போக, மெலிந்தவர்கள் குண்டாக என்று எல்லா நோய்க்கும் குர்ஆன் வசனங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள்.
குழந்தைப் பேறு அடைவதற்குக் கூட குர்ஆன் வசனம் உண்டாம். அந்த வசனத்தை ஓதினால் உடனே குழந்தை தரித்து விடுமாம்.
இவ்வாறெல்லாம் கதை அளக்கும் கட்டுரையல்ல இது.
நோய்களை எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதோ அதை உள்ளபடி விவரிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உடல் நலம் பேணல்
வருமுன் காப்போம் என்பதுதான் இஸ்லாத்தின் தாரக மந்திரம். எந்த ஒன்றையும் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு இஸ்லாத்தில் இல்லை.
ஆகவேதான் நோய்கள் விஷயத்தில் அது வருமுன் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.

பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் நமது உடல் சார்ந்த தேவைகளை கருத்திற் கொள்ளாமல் உடலை வருத்திக் கொள்வதே. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. இறைவணக்கத்துக்காக கூட நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலை செய்யக் கூடாது. உடலுக்கு வழங்க வேண்டிய தேவைகளை சரியாய் வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!” அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் புகாரி 1975

ஒருவன் தூங்காமல் இறைவனை வணங்கி வழிபடப் போகிறான் என்றால் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறி உடலை வருத்துவதால் இஸ்லாம் அவனை வன்மையாகக் கண்டிக்கின்றது.
இறைவணக்கத்திற்காகவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடாது எனில் இதர தீய காரணங்களான புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

அது போல தக்க காரணமின்றி சாப்பிடாமல் இருப்பது, நேரம் தவறி சாப்பிடுவது, தூங்காமை போன்ற அனைத்துக்கும் இந்தச் செய்தி பொருந்தும். ஏனெனில் இன்றைய மருத்துவ உலகம் பசிக்கும் போது சாப்பிடாமை, போதுமான தூக்கம் இல்லாமை ஆகியவை தான் பல நோய்களுக்கான காரணம் என்று பட்டியலிடுகிறது. இவ்விரண்டிலும் மனிதன் கவனம் செலுத்துவது நோய்கள் அண்டாமல் வாழ வழிவகுக்கும் என்கிறது.
எனவே எக்காரணத்தைக் கொண்டும் எந்த வகையிலும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதே இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த வழிகாட்டலின் படி நடந்தால் இறைநாட்டத்தால் பெருமளவு நோய்களைத் தவிர்க்கலாம்.

சுத்தம் சுகம் தரும்
சுத்தம் சோறு போடும் என்பார்கள், சோறுமட்டுமல்ல சுத்தம் சுகமும் தரும். ஆம் நமது உடல், உடை, இருப்பிடம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பது நம்மை அண்டவிருக்கும் நோய்களை விட்டும் காத்து நமக்கொரு பாதுகாப்பு அரணாக விளங்கும். இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தூய்மைக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
அனைத்துவித தூய்மைகளை பற்றியும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பல் துலக்குதல், குளித்தல், ஆடை சுத்தம், மற்றும் சுற்றுப்புறப் சூழலை மாசுபடுத்தாமல் சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய அனைத்தைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

பல் துலக்குதல்
பல் துலக்கி வாய் கொப்பளிப்பதால் வாயினுள் உள்ள பல நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் காய்ச்சல், வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றன.
எனவே இஸ்லாம் பல் துலக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது.
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரீ 888

பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நஸயீ 5, அஹ்மத் 23072
நவீன உலகில் காலை எழுந்ததும் பல் துலக்காமல் வாயில் உள்ள கிருமிகளுடன் காபி குடிப்பதை புதிய கலாச்சாரமாகவே வைத்திருக்கின்றனர். இதற்கு பெட் காபி என்ற பெயர் வேறு? இது அருவருக்கத்தக்க செயலாகும்.

நகம் வெட்டுதல்
அவ்வப்போது நகம் வெட்ட வேண்டும் என்றும் இஸ்லாம் பணிக்கின்றது. காரணம் நகம் நீண்டிருந்தால் அதன் இடைவெளியில் அழுக்குகள் சேரும். உணவு சாப்பிடும் வேளையில் நக அசுத்தத்தையும் சேர்த்து உண்ண வேண்டி வரும். இதுவும் நோயை ஏற்படுத்தும் என்பதால் நகம் வெட்டுதல் அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: “இயற்கை மரபுகள் ஐந்தாகும்’ அல்லது “ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்’. (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
புகாரி 429

திறந்த வெளியில் மலம் கழித்தல்
மக்கள் உலவும் பொது நடைபாதைகளில் மலம் கழிப்பதையும் இஸ்லாம் தடுக்கின்றது. அது இறை சாபத்திற்குரிய செயல் என்று எச்சரிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் 448

பொதுப்பாதையில் மலம் கழிப்பதால் மக்களுக்குண்டாகும் பாதிப்புகளை விளக்கத் தேவை இல்லை. இவ்வாறு இஸ்லாம் நோய்கள் பரவாமலிருக்க பல தற்காப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்ய பணிக்கின்றது.

மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ அக்கறை கொண்ட அரசு இவற்றைக் கவனத்தில் கொண்டு, கண்காணித்து சீர் செய்ய வேண்டும். இஸ்லாம் கூறும் இன்னும் ஏராளமான சுகாதார நடவடிக்கைகளை தனிமனிதனும் அரசும் கையிலெடுத்தால் நோயற்ற ஆரோக்கியமான மனித சமுதாயத்தை வார்த்தெடுக்க இயலும்.

மருத்துவம் செய்யுங்கள்
நமது உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் இறைநாட்டத்தால் சில வேளை நமக்கு நோய்கள் ஏற்படத்தான் செய்யும். அப்போது குறித்த நோய்க்குரிய முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
நோய்க்கான காரணிகளைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதுடன் நோய் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை செய்வது அவசியம் எனவும் அது வலியுறுத்துகின்றது.
இதை அறியாத சில மூடர்கள் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய மாட்டேன் என்று கூறி முறையான மருத்துவத்தைப் புறக்கணித்து மூடத்தனமான நடக்கின்றனர்.

இந்தத் தவறான கொள்கை கொண்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் முதலில் அவர்கள் நாடுவது தாயத்து தகடு போன்ற இணைவைப்புக் கலாச்சாரம் ஆகியவற்றைத்தான்.
அல்ஹம்து சூராவை தண்ணீரில் எழுதி அதைக் குடிப்பது போன்ற குர்ஆன் கூறாத மூட நம்பிக்கை சார்ந்த செயல்கள் சமுதாய மக்களிடையே வேரூன்றவும் இந்தத் தவறான போக்குதான் காரணம்.
இதுபோன்ற அறியா மக்களை வைத்து காசு பார்க்கும் கும்பலும் நம்மிடையே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். மனிதனுக்கு நோய்கள் ஏற்படும்போது மருத்துவம் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதை பின்வரும் செய்திகளில் அறியலாம்.
அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமாபின்ஷரீக் (ரலி), நூல்கள் :திர்மிதீ (1961),அபூதாவூத் (3357)

எல்லா நோய்க்கும் அல்லாஹ் பூமியில் நிவாரணத்தை அருளியிருக்கிறான் என்றும் அதை நாம் தேடிப் பெற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி (5678)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
முஸ்லிம் 4432

நோய்கள் ஏற்படும்போது அதற்காக மார்க்கம் கற்றுத்தந்தபடி ஓதிப்பார்த்தல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை செய்வதோடு மருத்துவம் செய்வது அவசியம் என்பதனை இலகுவாக அறியலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்