சமூக ஊடகக் கலாச்சாரம்: நன்மைகளும் நாம் இழப்பவைகளும்




சமூக ஊடகக் கலாச்சாரம்: நன்மைகளும் நாம் இழப்பவைகளும்

இன்றைய உலகில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. தகவல் பரிமாற்றம், அறிவைப் பகிர்தல், உறவுகளைப் பேணுதல், திறமைகளை வெளிப்படுத்துதல், சமூகப் பணிகளுக்கு ஆதரவு திரட்டுதல் என இத்தளங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், இந்த வசதிகள் நம்மை எதை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்பதை சிந்திப்பது மிகவும் அவசியம்.

ஒரு சமூக ஊடகத் தளம் நல்லதா, கெட்டதா என்பது மட்டும் கேள்வியல்ல. அதை நாம் எதற்காகவும் எப்படியும் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியமான கேள்வி.

ஒரு நல்ல தகவலைப் பகிர்வதற்கும், ஒருவருக்கு உதவுவதற்கும், அறிவை வளர்ப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், உண்மை தெரியாத செய்திகளைப் பரப்பவும், ஒருவரை விமர்சிக்கவும், அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு பொய்யான தகவல் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அந்தச் செய்தியால் பாதிக்கப்படும் ஒருவரின் வாழ்க்கை, மரியாதை அல்லது மனநிலை பற்றி நாம் சிந்திக்காமல் “பகிர்” என்ற ஒரு பொத்தானை அழுத்திவிடுகிறோம்.

இதில்தான் நமது விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

நாம் பெறுவது என்ன?

சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கின்றன. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை அறியலாம். கல்வி, தொழில், அறிவியல், கலாச்சாரம் போன்ற பல துறைகளில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். தொலைவில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம். சமூக சேவைகளுக்கும் நற்பணிகளுக்கும் மக்களை ஒன்றிணைக்கலாம்.

ஆனால் இந்த நன்மைகளைப் பெறுவதற்காக நாம் செலுத்தும் விலை என்ன என்பதை மறந்துவிடக் கூடாது.

நாம் இழப்பது என்ன?

நேரம், கவனம், தனியுரிமை, குடும்ப உறவுகள், மன அமைதி போன்றவற்றை நாம் அறியாமலேயே இழக்கக்கூடும். மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து நமது வாழ்க்கையை ஒப்பிடும் பழக்கம் உருவாகலாம். “லைக்”, “வியூ”, “கமெண்ட்” போன்றவற்றின் எண்ணிக்கை நமது மதிப்பை நிர்ணயிப்பதாக நாம் நினைக்கத் தொடங்கலாம்.

அதிலும் ஆபத்தானது உண்மை சரிபார்க்கப்படாத தகவலைப் பரப்புவது.

ஒருவரைப் பற்றிய செய்தி உண்மையா என்பதை அறியாமல் அதை பகிர்வது, அவருடைய கண்ணியத்தைக் காயப்படுத்தலாம். ஒருவரை பொதுவெளியில் அவமானப்படுத்துவது, கேலி செய்வது அல்லது தனிப்பட்ட குறைகளை வெளிப்படுத்துவது வெறும் “பொழுதுபோக்கு” அல்ல. அதன் பின்னால் ஒரு மனிதரின் உணர்வுகளும் வாழ்க்கையும் இருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு

மறுமையை நம்பும் ஒரு முஸ்லிமுக்கு இந்த விஷயம் இன்னும் ஆழமான பொறுப்பை ஏற்படுத்துகிறது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் கணக்கு கொடுக்க வேண்டிய நாள் உள்ளது என்ற உணர்வு நமது இணையப் பயன்பாட்டிலும் இருக்க வேண்டும்.

ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன்பு:

“இது உண்மையா?”
“இதைப் பகிர்வதால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா?”
“இதை நான் நேரில் அந்த மனிதரிடம் சொல்லத் துணிவேனா?”
“இதற்காக அல்லாஹ்விடம் நான் பதில் சொல்ல வேண்டியிருந்தால் என்ன செய்வேன்?”

என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்கப் பொறுப்பாகும்.

உலமாக்களின் வழிகாட்டுதல் அவசியம்

இந்தச் சூழலில் உலமாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சமூக ஊடகங்களின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் நன்மை–தீமைகள் குறித்து மக்களுக்கு தெளிவான மார்க்க மற்றும் ஒழுக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு அறிஞரும் தனித்தனியாக பேசுவதைக் காட்டிலும், சமூக ஊடகப் பயன்பாடு, பொய்யான செய்தி, அவதூறு, தனியுரிமை, பிறரை இழிவுபடுத்துதல், வதந்தி பரப்புதல் போன்ற பிரச்சினைகளில் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளிகள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள், குடும்பங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலமாகவும் இளம் தலைமுறைக்கு “சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முடிவாக

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற தளங்கள் தாமாகவே நல்லவை அல்லது கெட்டவை என்று முடிவு செய்வதைவிட, அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன் சிந்திப்போம்.
ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன் சரிபார்ப்போம்.
ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அவரது மனதை நினைத்துப் பார்ப்போம்.
ஒருவரின் கண்ணியத்தைப் பாதுகாப்போம்.
நமது நேரத்தையும் மன அமைதியையும் பாதுகாப்போம்.

சமூக ஊடகம் நமது கையில் இருக்க வேண்டும்; நாம் சமூக ஊடகத்தின் கையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இதற்காக உலமாக்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கொண்ட சமூக ஊடகப் பயன்பாட்டை உருவாக்குவதே நமது அடுத்த தலைமுறைக்கான சிறந்த சமூகப் பணியாகும்.






மனிதர்களின் மானத்தோடு விளையாடும் Facebook கலாச்சாரம்!

இன்றைய சமூக வலைத்தளங்களில் பலரிடம் காணப்படும் மிக மோசமான ஒரு பழக்கம்-மற்றொரு மனிதனின் பழைய தவறுகளையும், குறைகளையும் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவது

ஒரு மனிதன் செய்த பாவத்தைக் கண்டு, அவனது மனப் புண்ணை மீண்டும் மீண்டும் கிளறி வேடிக்கை பார்ப்பது மார்க்கத்தில் மிகப்பெரிய பாவமாகும்.

இதைப் பற்றி வல்ல அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்:

"உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம்! உங்களில் எவராவது தன் மரணித்த சகோதரனின் இறைச்சியைச் சாப்பிட விரும்புவாரா? அதனை நீங்கள் வெறுப்பீர்கள்!"

(அல்குர்ஆன் 49:12)ஒரு மனிதனைப் பற்றி அவன் இல்லாத இடத்தில் இழிவாகப் பேசுவதும், அவதூறு பரப்புவதும் இறந்த தன் சொந்தச் சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்குச் சமம் என்கிறது இஸ்லாம்.

அதேபோல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒரு முஸ்லிமின் குறையை/பாவத்தை மறைக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய குறைகளை இமையிலும் மறுமையிலும் மறைக்கிறான்." (ஸஹீஹ் முஸ்லிம்)

யோசித்துப் பாருங்கள்! நாம் செய்கின்ற லைக்குகளுக்காகவும், கமெண்ட்டுகளுக்காகவும் ஒரு மனிதனின் மானத்தையும், அவரது குடும்பத்தின் அமைதியையும் சீரழிப்பது நியாயமா?

இறைவன் ஒரு அடியானின் பாவத்தை மறைக்க வாய்ப்பளிக்கும் போது, மனிதர்களாகிய நாம் அதைத் தோண்டி எடுத்து அம்பலப்படுத்த யார்? பிறரின் குறைகளைத் தேடிப் பரப்புபவர்களை அல்லாஹ் தன் வீட்டிற்குள் இருந்தாலும் கேவலப்படுத்துவான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பிறர் மனதைப் புண்படுத்துவதையும், குறைகளைத் தோண்டுவதையும் நிறுத்துவோம். மனித நேயத்தோடும் இறையச்சத்தோடும் நடந்துகொள்வோம்!











அல்லாஹ்வின் திருப்பெயரால் .. மேலும் தினசரி ஆன்மீக வழிகாட்டுதலுக்கு சத்திய பாதை இஸ்லாத்தைப் பின்தொடரவும்.
FB X

கருத்துகள்