நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 1️⃣

 


நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 1️⃣
அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

நேசத்திற்குரியவர் யார் ?




தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 69′


விளக்கம்:


இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது இந்த நபிமொழியை சரியாகப் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்களிடம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.


மார்க்கச்சட்டங்கள் என்று வழக்கத்தில் இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.


ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை நிராகரித்து விட்டு, ‘எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள், என் தந்தை சொன்னார், என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.


இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக் கொள்வார்கள்


குடும்பச் செலவும் தர்மமே!


 


ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192


விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்கே செலவு செய்தாலும் அதையும் அல்லாஹ் அவர் செய்த தர்மமாகக் கணக்கிடுகின்றான் குடும்பத்தினருக்கு உழைப்பதும், அவருக்குச் செலவிடுவதும் நன்மையைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்திலும், இது படைத்தவனின் கட்டளை என்ற எண்ணத்திலும் அவர் தம் குடும்பத்திற்குச் செய்யும் செலவைக் கூட தர்மமாக அல்லாஹ் பதிவு செய்து மறுமை நாளில் நன்மையைத் தருவான்.


புகாரியின் 2742 அறிவிப்பில், “நீர் (நல்லதில்) எதை செலவு செய்தாலும் அது தர்மமாகும். நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவும் கூட தர்மமாகும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி இறை திருப்தியை எதிர்பார்த்து நாம் செய்யும் குடும்பச் செலவும் நன்மையைத் தரும் என்பதை எண்ணி, குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நியாயமான செலவுகளைச் செய்திட வேண்டும்.


மறுமை நாளின் அடையாளங்கள்




கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைத்திருப்பதும், (சர்வ சாதாரணமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடைபெறுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 80, முஸ்லிம் 5186′


விளக்கம்:


இவ்வுலகம் ஆழிக்கப்படுவதற்கு முன்னால் மார்க்கத்திற்கு முரணான பல நிகழ்வுகள் உலகில் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார்கள், அவற்றில் மேற்கூறப்பட்ட நான்கு விஷயங்களும் அடங்கும் அறியாமைக் கால பழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் நடைமுறைப்படுத்தும் நிலை உருவானால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள் இன்றைய காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிறைந்திருப்பதை நாம் காண்கிறோம்.


பெற்ற மகனையே நரபலி கொடுக்கும் கொடுமை நடப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம் மது என்பது ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு தூற்றப்பட்ட நிலை இருந்தது ஆனால் இன்று பெரிய மனிதர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இது முதலிடத்தில் இருக்கிறது. இது இல்லையானால் அது விருந்தே இல்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம்.


அடுத்து, விபச்சாரம் இன்று சர்வ சாதாரணமாக நடைபெறுவதைப் பார்க்கிறோம், மேலும் விபச்சாரத்தைத் தடை செய்ய வேண்டிய அரசே இதை ஏற்று நடத்தும் கொடுமையும், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதைத் தொழிலாக அங்கீகரித்திருப்பதும், இதைச் செய்பவர்களுக்கு நல வரியங்கள் அமைத்து அவர்களை ஆதரித்திருப்பதும் விபச்சாரம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


எனவே இதுபோன்ற காரியங்கள் பெருகி வரும் போது மறுமை நாளை எண்ணிப் பார்த்து பாவ மன்னிப்புக் கேட்டு நற்காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும்.


நல்ல விஷயங்கள் இரண்டு




இரு விஷயத்தில் தவிர மற்றதில் பொறாமைக் கொள்ளக்கூடாது. 1 ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி அதை அவர் நல்வழியில் செலவு செய்கிறார். 2 ஒரு மனிதருக்கு அல்லாஹ் அறிவாற்றலை வழங்கினான். அவர் அதன் மூலம் (சரியான) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி


நூல்கள்: புகாரி 73, முஸ்லிம் 1486


விளக்கம்: நன்மையான விஷயங்களில் போட்டி போடுவதும் அதில் அதிக அக்கறை காட்டுவதும் மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், செல்வம் அதிகம் வழங்கப்பட்டு அதை நல்ல வழியில் செலவழிப்பவரைப் பார்த்துப் பொறாமைப்படலாம். நமக்கும் இவருக்கு வழங்கப்பட்டது போல் செல்வம் இருந்தால் நாமும் அவரைப் போன்று நற்காரியங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கலாமே!


மறுமையில் அதிகமதிகம் நன்மைகளைப் பெறலாமே! என்று எண்ணுவதும் அதற்காக ஆர்வப்படுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, நல்ல அறிவாற்றல் வழங்கப்பட்டு, அதனால் அவர் ஆணவம் கொள்ளாமல் அதன் மூலம் நியாயமான, நேர்மையான தீர்ப்பை வழங்கி வருகிறார்.


மேலும் இவர் பெற்ற கல்வியின் மூலம் பலருக்கு நற்கல்வியும் கற்றுத் தருகிறார். இவரைப் போன்று நாமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது கூடும். கல்வி வேண்டும், அதன் மூலம் நற்காரியங்களைச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் ஆசைப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


06) நற்காரியங்கள் பல …




மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கட்டாயமாகும். ஒருவரை வாகனத்தில் ஏற்றி விட உதவுவதும் அல்லது வாகனத்தில் அவரது பயணச் சுமையை ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளும், தொழுகைக்காக நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும, (வழி தெரியாதவருக்கு) வழி காட்டுவதும் தர்மமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’,


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்கள்: புகாரி 2891 முஸ்லிம் 1335


விளக்கம்:


அல்லாஹ் நமது உடலை மிகப் பெரிய அதிசயமாகப் படைத்துள்ளான். அதில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை அதில் உள்ள மூட்டுக்களும் முக்கியமானவை. இந்த மூட்டுக்கள் மூலமாகத் தான் கைகளையும் கால்களையும் மடக்க முடிகிறது. மேலும் வெளியில் சென்று வருவதற்கும்.


உழைப்பதற்கும் இவை முக்கிய பங்கை ஆற்றுகின்றது. எனவே இந்தச் சிறப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பதால் அதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும். அதற்குரிய எளிய முறைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.


நடைமுறையில் நாம் சந்திக்கும் பல இடங்களில் நன்மையைப் பெறுவதற்குரிய வழிவகைய நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். வாகனத்தில் ஏற சிரமப்படும் எத்தனையோ வயோதிகர்களையும் உடல்நிலை பாதிக்கப்பட்டோரையும் நாம் பார்க்கிறோம். அவர்களை வாகனத்தில் ஏற்றி விட உதவி செய்வதன் மூலம் தர்மம் செய்த நன்மையைப் பெறலாம்.


இதைப் போன்று அவர்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை ஏற்ற முடியாமல் சிரமப்படும் போது அவற்றை ஏற்றி விட உதவி செய்வதன் மூலமும், வழி தெரியாமல் திண்டாடுபவருக்கு வழிகாட்டுவதன் மூலமும் தொழுகைக்கு அதிகமதிகம் சென்று வருவதிலும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். 


தூய்மையான உழைப்பு




யார் தரய்மையான உழைப்பில் ஒரு போரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு உங்களின் குதிரைக் குட்டியை நீங்கள் வளர்ப்பக போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்கள்: புகாரி 1410, முஸ்லிம் 1342


விளக்கம்: மறுமையில் வெற்றி பெறுவதற்கு. தர்மம் செய்வது முக்கியமானதாகும். அந்தத் தர்மம் நல் உழைப்பின் மூலம் வந்த பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நல்வழியில் உழைத்து அதன் மூலம் செய்யும் தர்மத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வான். ஹாராமான மார்க்கம் தடுத்த வழியில் சம்பாதித்துக் கொடுக்கும் தர்மம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளமாட்டான்.


அதே நேரத்தில் ஹலாலான, மார்க்கம் அனுமதித்த வழியில் சம்பாதித்த பொருள் மிக மிகச் சிறியதாக இருந்தாலும் அதை அல்லாஹ் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு அதற்கு ஏராளமான நன்மைகளைப் பதிவு செய்கிறாள். எனவே மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் உழைத்து தர்மம் செய்து மறுமையில் வெற்றியடைவோம்


உயர்ந்த கை




உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் சுய மரியாதையுடன் இருக்க விரும்புவாரோ அவரை அல்லாஹ் அவ்வாறு ஆக்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்க விரும்புவாரோ அவரைத் தன்னிறைவு உள்ளவராக அல்லாஹ் ஆக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)


நூல்: புகாரி – 1427


விளக்கம் : 


இவ்வுலகில் சிலர் செல்வந்தராகவும், பலர் ஏழையாகவும் உள்ளனர். ஏழைகளாக இருக்கும் பலர் அடுத்தவர்களிடம் சென்று உதவிகளைப் பெறுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளவர்கள் ‘நாமும் அடுத்தவர்களுக்கு வாரி வழங்க வேண்டும் எப்போதும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கக் கூடாது என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டும் சுய மரியாதை உள்ளவர்களாக இருப்பதற்கும் ஆசைப்பட வேண்டும்.


சுய மரியாதை உள்ளவர்களாக இருப்பதற்கும் ஆசைப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சுய மரியாதை உள்ளவர்களாகவும் தன்னிறைவு அடைந்தவர்களாகவும் மாற்றுவான்.


மேலும் தர்மம் செய்யும் முன்னர் தம் அடிப்படைத் தேவைகளையும் தம் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தர்மம் செய்யும் போது நமது இரத்த சொந்தங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அவர்களின் தேவையை நிறைவேற்றிய பின்னர் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும்.

கருமியாக இருக்காதே




ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும் போது இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், இறைவா (நல்வழியில் செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாாயாக! என்று கூறுவார். மற்றொருவர் இறைவா் (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயால் என்று கூறுவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர், அபூஹுரைரா ரலி

நூல்கள். புகாரி – 1442


விளக்கம்: மனிதனிடம்   இருக்கும் செல்வம் படைத்தவனின் அருளால் கிடைத்ததாகும். இதை நல்வழியில் செலவழிப்பவதும், இல்லாதவர்களுக்கு வழங்குவதும் செல்வந்தவர்களின் மீது கடமையாகும். ஆனால் பண வசதி நிறைந்த பலர், இன்னும் சேர்க்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏழைகளுக்காகச் செலவழிப்பதில் காட்டுவதில்லை. மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தன்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது. இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்படுத்துமாறு வானவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.


“தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்” என்ற திருக்குர்ஆன் வசனமும் மறுமை வெற்றிக்கு தாராள மனம் அவசியம் என்பதை உணர்த்துகிறது நபியவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்விடம் தாமும் பாதுகாவல் தேடி, மற்றவர்களையும் பாதுகாவல் தேட வலியறுத்தியுள்ளனர். புகாரி 6365 எனவே கஞ்சத்தனத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து இறையருளை பெற முயற்சிப்போம்.


கணக்கில்லாமல் தர்மம் செய்



நல்வழியில்) செலவிடு! கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அவ்வாறு நடந்தால்) அல்லாஹ்வும் உனக்கு கணக்கிட்டே (தன் அருளைத்) தருவான் நல்வழியில் செலவழிக்காமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் (தன் அருளை) உனக்கு (தராமல்) முடிந்து வைத்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)


நூல்: புகாரி : 2591


‘விளக்கம்:


அவசியம் ஏற்படும் போது நல்வழியில் செலவழிப்பது கடமையாகும். ஆனால் பலர். குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டுமே நாங்கள் செலவழிப்போம் என்று கூறி குறைந்தளவு செல்வத்தைச் செலவிடுகின்றனர். முக்கியமான தேவைக்காக ஒருவர் உதவி கோரினால் நாங்கள் இதற்கு இவ்வளவு செலவிட்டு விட்டோம். இதற்கு மேல் கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். வருடத்திற்கு இவ்வளவு தான் செலவழிக்க வேண்டும் என்று வரையறுத்துக் கொள்கிறார்கள்.


தேவைக்கேற்ப முடிந்தளவு உதவிகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இறைத்த கிணறு தான் ஊறும் என்ற பழமொழியைப் போன்று நாம் நல்வழியில் செலவு செய்யும் போதெல்லாம் அதற்கேற்ப இறையருள் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

கருத்துகள்