RECENT POSTS

நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 2️⃣

 


நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 2️⃣
அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

உறவைப் பேணி வாழ்


 


பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர், மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


நூல்: புகாரி : 5991


விளக்கம்:


இரத்த உறவைப் பேணி வாழ்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகும். உறவு முறையைப் பேணி, அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாத்தின் இந்தக் கட்டளையைப் பேணும் சிலர், தம்முடன் இணைந்து உறவாட விரும்புவோரிடம் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். 


ஒரு சண்டை வந்துவிட்டால் அல்லது அவர்கள் பேச விரும்பாவிட்டால் அவர்களிடம் நாம் ஏன் பேச வேண்டும்? அவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என்று கூறி அவர்களின் உறவை நிரந்தரமாக வெட்டி விடுகின்றனர். ஆனால் இஸ்லாம் இந்த நிலையை ஏற்றுக் கொள்வதில்லை. உறவைப் பேணுதல் என்றால் அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களின் நலன் நாடுபவனே உண்மையில் உறவைப் பேணுபவன் என்று கூறுகிறது.


மென்மை நன்மையே


நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஜரீர் (ரலி)


நூல்: முஸ்லிம் : 5052


விளக்கம்: ஆதமின் பிள்ளைகளாக இவ்வுலகத்தில் இருக்கும் மனிதர்கள் தம் சகோதரர்களிடம் அன்போடு நடந்து கொண்டு சச்சரவு இல்லாமல் சகோதரப் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால் இதைக் கவனத்தில் கொள்ளாத பலர் அடுத்தவர்களிடம் பேசும் போது கடுமையான வார்த்தைகளைத் பயன்படுத்துவதையும். அவர்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படிப்பட்டவர்களைத் திருத்தும் வண்ணம் இந்த நபிமொழி அமைந்துள்ளது.


மென்மையாக நடக்காமல் கடுமை காட்டும் நபர்கள் எல்லா நன்மைகளை இழக்க நேரிடும். அடுத்தவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அவர்களின் சாபத்திற்கு ஆளாகி இறைக் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். இன்னொரு நபிமொழியில் “அல்லாஹ் மென்மையானவன் மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். கடுமைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான் (முஸ்லிம் 5055) என்று இடம் பெற்றுள்ளது. மென்மையாக நடக்கும் போது இறையருளை நிறைய நாம் அடைய முடியும்.


உண்மையான சகோதரத்துவம்




ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஒர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)


நூல்: புகாரி : 6011 முஸ்லிம் : 5044


விளக்கம்: ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் தம் சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக அழகிய உதாரணத்துடன் நபிகளார் விளக்கியுள்ளார்கள். ஒருவருக்குத் தலைவலி வருமானால், தலைக்குத் தானே வலிக்கிறது என்று கால் சும்மா இருப்பதில்லை. மருத்துவரிடம் செல்கிறது. வாய் மருத்துவரிடம் தலைவலியைப் பற்றி முறையிடுகிறது. கையும் தன் பங்குக்கு மாத்திரையை எடுத்து வாயில் போடுகிறது.


இப்படி உடலில் ஒரு உறுப்புக்குக் கஷ்டம் ஏற்படும் போது, எப்படி அனைத்து உறுப்புகளும் அற்கு உதவி செய்கிறதோ அதைப் போன்று ஒரு முஃமினுக்குச் சிரமம் என்றால் எல்லா இறை நம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்து அவருக்கு உதவ வேண்டும். பொருளாதாரத்தில், உடல் உழைப்பில் என்று எல்லா வகையிலும் உதவி செய்து இறை நம்பிக்கையாளன் என்பதை நிரூபிக்க வேண்டும்.


சிறந்த இல்லம்


 


உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (கடமையான தொழுகை) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (உபரியான தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்துகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்: முஸ்லிம் : 1428


விளக்கம்:


கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் ஆண்கள் பள்ளிவாசலிலேயே தொழுவது கட்டாயமாகும். ஆனால் கடமையில்லாத தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறப்பாகும். கடமையான தொழுகையைத் தவிர, ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகைகளில் சிறந்ததாகும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி 7310)


இவ்வாறு வீட்டில் தொழுவதால், வீட்டில் இறையருள் நிறைந்து கிடைக்கும். அத்துடன் நம் பிள்ளைகளும் நம்மைப் பார்த்துத் தொழுவதற்கு முயற்சி செய்யும். இதனால் வருங்காலத்தில் தொழுகையைப் பேணுபவர்களாக நம் குழந்தைகளை உருவாக்க முடியும் எனவே பள்ளியில் கடமையான தொழுகையை முடித்து விட்டு, நம் இல்லத்தில் உபரியான தொழுகையைத் தொழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


முன் சுன்னத்துக்களையும் வீட்டில் தொழுது விட்டு பள்ளியில் சென்று கடமையான தொழுகையை நிறைவேற்றும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வர முடியாத நேரங்களில் மட்டும் பள்ளியில் உபரியான வணக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.


மன்னிப்பும் பணிவும்



தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் : 5047


விளக்கம்: ஒருவர் இறைவழியில் தர்மம் செய்வதால் இவ்வுலகத்தில் அல்லாஹ் மென்மேலும் செல்வத்தை வழங்குவான். அல்லது இவர் செய்த தர்மத்திற்குப் பிரதிபலனாக மறுமை நாளில் மாபெரும் நன்மையை அல்லாஹ் வழங்குவான். தவறு செய்யும் மனிதர்களை மன்னிப்பதன் மூலம் இறைவனின் மன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியும் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் (அல்குர்ஆன் 24:22)


நாம் தவறு செய்யும் போது. எப்படி இறைவன் நம்மை மன்னிக்க வேண்டுமென விரும்புவோமோ அதைப் போன்று. மற்றவர்கள் தவறு செய்யும் போது நாம் மன்னிக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், பணவசதி படைத்திருந்தாலும் அல்லாஹ்வுக்காகப் பணிவுடன் நடந்தால் இறைவனிடத்தில் மதிப்பு மரியாதை உள்ளவர்களாக உயர்ந்து கொண்டே செல்லலாம்.


இறை நினைவு இல்லங்கள்




அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை, உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)


நூல்: முஸ்லிம் : 1429


விளக்கம்: மனிதனுக்கு அவசியமாகத் தேவைப்படும் உறைவிடங்கள் இறை நினைவு நிறைந்ததாக இருக்க வேண்டும். பாட்டுக் கச்சேரி சினிமா நாடகங்கள் என்று வீட்டில் ஷைத்தானின் ஆதிக்கத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரப்படும் இல்லமாக நமது இல்லத்தை மாற்ற வேண்டும்.


இஸ்லாத்தின் அடிப்படையாகத் திகழும் திருக்குர் ஆனை தினமும் வீட்டில் ஒதும் பழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்வதோடு, நம் பிள்ளைகளையும் ஓதுபவர்களாக மாற்ற வேண்டும்.


திருக்குர்ஆன் ஒதாத இல்லங்கள் மண்ணறைகளுக்குச் சமம் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். (முஸ்லிம் 1430) மேலும் திருக்குர்ஆன் ஒதப்படும் இல்லங்களில் ஷைத்தானின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாவ மன்னிப்பு




மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: முஸ்லிம் : 5235


விளக்கம்:


இறைவனுக்கு அதிகம் பயந்து நடப்பவர்கள் இறைத்தூதர்கள், சிறப்பு மிக்க இறைத்தூதர்களில் முதலிடம் பெறும் நபி (ஸல்) அவர்கள் இறைவனை அதிகமதிகம் பயந்து, அவனது கட்டளைகளை நிறைவேற்றி வந்தார்கள், இருந்தாலும் அவர்களும் மனிதர் என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக நாள் ஒன்றுக்கு நூறு தடவை இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்களே இவ்வாறு செய்துள்ளார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்? பாவங்களிலேயே முழ்கி இருக்கும் நாம் தினமும் நூறுக்கும் மேற்பட்ட தடவை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு மறுமையில் இறைவனின் கருணைப் பார்வைக்கு உரித்தானவர்களாக ஆக வேண்டும்.


கேள்வி கணக்கின்றி சொர்க்கம்


என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி – 5705


விளக்கம்:


மறுமை நாளில் சொர்க்கம் செல்வதற்கு இலகுவான ஒரு வழியை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஓதிப் பார்க்காமலும் பறவை சகுனம் பார்க்காமலும் இருந்து, இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தால் நாம் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம். அன்றைய காலத்தில் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர் பறவைச் சகுனம் பார்ப்பார்கள்.


பறவைகள் மீது நம்பிக்கை வைத்து இறைவனை மறக்கும் செயலில் ஈடுபட்டதைப் போன்று இல்லாமல் முழுக்க முழுக்க இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் சொர்க்கத்தை இலகுவாகப் பெற்றிடலாம்.


அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக (அல்குர்ஆன் 9.51 என்ற வசனமும் இந்தக் கருத்தையே தெரிவிக்கிறது.


சிறு பாவங்களின் பரிகாரங்கள்



பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் – 396


விளக்கம் :


நாம் செய்யும் சிறிய அளவிலான தவறுகளை தினமும் கணக்கிட்டுப் பார்த்தால் பட்டியிலிடும் அளவிற்கு நீண்டு கொண்டே போகும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போன்று இந்தச் சிறிய பாவங்களே மறுமையில் நாம் நரகிற்குப் போவதற்குக் காரணமாக ஆகி விடலாம். இந்நிலையைப் போக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் அழகிய ஒரு வழியைக் கூறியுள்ளார்கள்.


பெரும் பாவத்தை மட்டும் நாம் தவிர்த்திருந்து கடமையான ஐவேளைத் தொழுகையை தொடர்ந்து தொழுது வரும் போது நமது சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதைப் போன்று வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டால் அடுத்த ஜும்ஆ தொழுகை வரை நாம் செய்யும் சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வருடத்தில் ரமளான் மாதத்தில் கடமையான நோன்பை நோற்று வருவதன் மூலம் அடுத்த வருடம் வரும் வரை ஏற்படும் சிறிய தவறுகளுக்கு அது பரிகாரமாக அமைந்து விடும்.


நீங்காத இரண்டு ஆசைகள்



மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு அசைகளும் வளர்கின்றன:


1. பொருளாசை


2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


நூல்கள்: புகாரி – 6421 முஸ்லிம் – 1892


விளக்கம் : 


மனிதனின் ஆசைக்கு எல்லை எதுவும் இல்லை. எவ்வளவு பணம் சேர்ந்தாலும் இன்னும் சேர்க்க வேண்டும், இன்னும் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே தவிர இவ்வளவு பணம் சேர்த்தது போதும் என்று நிறுத்திக் கொள்வதில்லை.


தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கும் என்று எல்லையில்லாமல் சேர்க்க ஆசைப்படுகிற மனிதன் இறைவனை வணங்குவதில் இவ்வாறு ஆசைப்படுவதில்லை. இதைப் போன்று எத்தனை வருடங்கள் அவன் வாழ்ந்திருந்தாலும் இன்னும் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகின்றான்.


100 வயதை எட்டியவர் கூட இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்றே ஆசைப்படுவார். ஆனால் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் இது போன்று ஆசைப்படுவதில்லை. ஆயிரம் ரூபாய் தர்மம் செய்துவிட்டோம். அடுத்த தடவை பத்தாயிரம் தர்மம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த தடவை ஒரு லட்சம் தர்மம் செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஆசை நீண்டு கொண்டே போவதில்லை. 


கருத்துகள்