RECENT POSTS

நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 3️⃣

 


நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 3️⃣
அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

அண்டை வீட்டார்




அண்டை வீட்டார் குறித்து என்னிடம் ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: புகாரி – 6015


விளக்கம்:


மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அண்டை வீட்டார் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுக்குச் செய்யும் உபகாரங்களின் மூலம் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவர்களுக்குத் தீமை செய்தால் தண்டனைனயும் கிடைக்கும்.


அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி நபிகளார் விளக்கும் போது வாரிசதாரர்களுக்கு நாம் எப்படிச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமோ அது போன்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


மேலும் வீட்டில் குழம்பு வைத்தால் சற்றுக் கூடுதலாக வைத்து அண்டை வீட்டாருக்கும் கொடுத்து உதவுமாறு பணித்துள்ளார்கள். இதுபோன்று பெரிய பொருளாக இருந்தாலும் சரி சிறிய பொருளாக இருந்தாலும் சரி! அண்டை வீட்டாருக்குக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.


அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரும் வண்ணம் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு தொல்லை தருபவர்கள் இறை நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


ரமளானில் இரவுத் தொழுகை




எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குவாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்கள்: புகாரி 37, முஸ்லிம் 1391


விளக்கம்:


இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதுடன் அந்த மாதத்தின் இரவு நேரங்களில் நின்று வணங்குவது நாம் செய்த முந்தைய சிறு பாவங்களை மன்னிப்பதற்கு உதவும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனின் அருள் நிறைந்த மாதமாகும் அந்த மாதத்தில் அருள் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 1957) இந்த மாதத்தில் அதிகமதிகம் நன்மையான காரியங்களைச் செய்து கூடுதல் நன்மைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.


இறைவனுக்குச் செய்யும் கடமைகளில் தொழுகை முதலிடத்தை பெறுகிறது. அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். முஸ்லிம் 2157) எனவே ரமளான் மாதத்தில் இரவு நோரத் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஹஜ்ஜும் உம்ராவும்




ஒரு உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களில் பரிகாரமாகும். பாவம் கலவாத ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி – 1773


விளக்கம்:


இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்தக் கடமை மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ் ஆலயத்திற்குச் சென்று வர வசதி உள்ளவர்களுக்குக் கடமையாகும். ஒருவர் இந்தக் கடமையை முறைப்படி செய்வதால் அவர் சொர்க்கத்திற்குரியவராக மாறி விடும் பெரும் பாக்கியம் கிடைக்கிறது.


முகஸ்துதிக்காக, மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லாமல் படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இஸ்லாம் கூறிய அடிப்படையில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் அவர் அன்று பிறந்த பாலகன் போல் ஆகி விடுவார் அதாவது எந்தப் பாவமும் செய்யாத குழந்தை போன்று தூய்மையான மனிதராக ஆகி விடுவார்.


இவ்வளவு பெரிய பாக்கியத்தைத் தரும் ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அத்துடன் அதைத் தூய எண்ணத்துடன் செய்யவும் முயல வேண்டும். அடுத்து, சிறிய ஹஜ் என்று சொல்லப்படும் உம்ரா எனும் வணக்கமும் நமது முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்குவதற்கு உதவுகிறது. எனவே உம்ராச் செய்வதற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.


உயிருள்ளவனும் உயிரற்றவனும்



தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)


நூல்: புகாரி – 6407


விளக்கம்:


மனிதனைப் படைத்த இறைவன் இவ்வுலகத்தில் ஏராளமான வசதி வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான், அவன் கொடுத்த அருட்கொடைகளை கணக்கிட்டுப் பார்க்க முயன்றால் நாம் தோல்வியையே அடைவோம்.


நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன், நன்றி கெட்டவன்.


(அல்குர்ஆன்:14:34)


இந்த இறை வசனம், மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடையின் எண்ணிக்கையை அழகுற விளக்குகிறது. இவ்வளவு அருட்கொடைகளையும் அனுபவிக்கும் மனிதன், படைத்தவனை மறந்து வாழ்கிறான். படைத்தவனைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.


இவ்வாறு பெரும் அருட்கொடைகளை அனுபவித்து, படைத்தவனை மறந்திருப்பவன் இறந்தவனுக்குச் சமம் என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள், யார் படைத்தவனை எண்ணிப் பார்த்து அவனுக்கு அடிபணியவில்லையோ அவர்கள். இருந்தும் இல்லாதவர்களைப் போன்றவர்கள். எனவே படைத்தவன நினைத்துப் பார்த்து அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.


கேட்பதற்கு ஏற்ற நேரம்




ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது நமது இறைவன் கீழ் வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் – 1386


விளக்கம்:


பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம். அதை, படைத்த இறைவனிடம் மட்டுமே நாம் கேட்க வேண்டும். அவனிடம் கேட்கும் துஆக்கள் ஏற்கப்படுவதற்கு என்று சில நேரங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். குறிப்பாக மக்களெல்லாம் உறங்கியிருக்கும் ஸஹர் நேரத்தில் நாம் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். மேலும் பாவம் செய்தவர்கள் அந்த நேரத்தில் பாவமன்னிப்புக் கோரினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.


மனிதன் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளைச் சந்திக்கிறான். அவற்றைச் சரி செய்வதற்கும், அவனது தேவைகளை நிறைவு செய்வதற்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ். அவனிடம் பிரார்த்தனை செய்து தம் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு இந்த நேரம் ஏற்றதாகும்.


உலகில் பாவம் செய்யாத மனிதர்கள் யாருமில்லை. உலகின் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு, பாவங்களைச் செய்து வரும் மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படாத வரை மறுமையில் வெற்றி பெற முடியாது. மறுமையின் வெற்றிக்கு வித்திடும் பாவமன்னிப்புக்கு ஏற்ற இந்த நேரத்தில் பாவக் கறையை அகற்றி விடலாம்.


உண்ணும் ஒழுங்குகள்




உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும், பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான், இடக் கையால் தான் பருகுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: முஸ்லிம் – 4108


விளக்கம்:


மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து விஷயங்களுக்கும் அழகிய வழிகாட்டும் இஸ்லாம். வாழ்வில் தினமும் கடைபிடிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் நல்வழியைக் காட்டுகிறது. சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் வலக் கரத்தாலேயே சாப்பிட வேண்டும். வலக் கரத்தால் தான் குடிக்க வேண்டும்.


இடக் கரத்தால் சாப்பிடுவதும் குடிப்பதும் தீயவர்களின் பழக்கமாகும் மலஜலம் கழித்து, சுத்தம் செய்யும் போது இடது கரத்தைப் பயன்படுத்தும் நாம். அதே கரத்தைச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவது அருவருக்கத்தக்கதாகும்.


எனவே தான் சாப்பிடுதல் குடித்தல் போன்ற காரியங்களுக்கு வலக்கரத்தையும், மலஜலம் போன்ற அசுத்தங்களைத் தூய்மைப்படுத்த இடக் கரத்தையும் பயன்படுத்த நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள்.


அருள் நிறைந்த வியாபாரம்




விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை (முறித்துக்கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு அருள்வளம் அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் அருள் வளம் நீக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)


நூல்: புகாரி – 2110


விளக்கம்:


மனிதனின் வாழ்க்கை செழிப்புக்கு வியாபாரம் முக்கியமானதாகும். இந்த வியாபாரத்தின் மூலம் செல்வத்தை ஈட்டி நல்ல வசதியுடன் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். இதனால் இதில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த வியாபாரத்தில் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு பொய், புரட்டு, பித்தலாட்டம் என்று அனைத்து முறைகேடுகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி, கொள்ளை இலாபம் அடைகின்றனர்.


இது போன்ற பொய்யும் புரட்டும் செய்து. குறைகளை மறைத்துச் செய்யும் வியாபாரத்தில் இறைவனின் மறைமுகமான அருள்வளம் நீக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பொய் சொல்லாமல் நியாயமான முறையில் குறை, நிறைகளை தெளிவுபடுத்திச் செய்யும் வியாபாரத்தில் இறைவனின் அருள்வளம் கண்டிப்பாகக் கிடைக்கும். உலக இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் படைத்தவனின் அருள் வளத்தைக் கவனத்தில் கொண்டு, நேர்மையான நியாயமான வியாபாரத்தைச் செய்ய வேண்டும்.


பெருந்தன்மை



வாங்கும் போதும், விற்கும் போதும், வழக்காடும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


நூல்: புகாரி – 2076


விளக்கம்:


மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கின்றான். அப்போது பல விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் நம் ‘நிலையிலேயே பிடிவாதமாக இருக்கிறோம். குறிப்பாக, விற்பனை செய்யும் போதும், வாங்கும் போதும் விட்டுக் கொடுக்காத நிலையை மேற்கொள்கிறோம். ஆனால் இது போன்ற நிலைகளில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் இறைவனின் அருளைப் பெறலாம்.


நம்மிடம் நியாயம் இருந்தாலும், போகட்டும் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுப்பது இறையருளைப் பெற்றுத் தரும் நமக்குத் தர வேண்டிய பொருளைக் கேட்டு வழக்காடும் போது கொஞ்சம் குறைவாகத் தருவதாகக் கூறினாலும், சரி என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்கலாம். இதனால் இறைவனின் அன்பையும் அருளையும் நாம் பெற முடியும்.


ஆனால் மார்க்கம் தொடர்பான விஷயங்களில் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது ஏனெனில் இது நம் விவகாரம் கிடையாது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் சமரசம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் கூடாது. எனவே மார்க்கம் தொடர்பான விஷயங்கள் அல்லாத மற்ற விஷயங்களில் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


உழைப்பே உயர்வு




ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி)


நூல்: புகாரி – 2072


விளக்கம்:


இவ்வுலகில் வாழ்வதற்கு உணவு. உடை, இருப்பிடம் போன்றவை அவசியத் தேவைகளாகும். இதைப் பெறுவதற்கு உழைப்பு முக்கியமாகும். உழைப்பின்றி இவைகளைப் பெற முடியாது. ஆனால் சிலர், தாம் உழைக்காமல் அடுத்தவர்களின் உழைப்பில் காலத்தைத் தள்ளுவதும், சோம்பேறிகளாக வாழ்க்கையை ஒட்டுவதும் பரவலாக இருப்பதை நாம் காண்கிறோம் உண்மையான இறை நம்பிக்கையாளன், உழைத்து அதன் மூலம் வந்த வருமானத்திலேயே சாப்பிட வேண்டும். அந்த உணவே சிறந்த உணவு.


மன்னராக வாழ்ந்த நபி தாவூத் (அலை) அவர்கள் நினைத்திருந்தால் மக்கள் வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். மன்னராக இருந்தவரே உழைத்துள்ளார் என்றால் நாம் உழைப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் உழைப்பின் முக்கியத்துவத்தை நபியவர்கள் தெளிவுபடுத்தும் போது எல்லா இறைத் தூதர்களும் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி 2262) இறைத்தூதர்கள் அனைவரும் எப்படி உழைப்பாளிகளாக இருந்தார்களோ அதைப் போன்று நாமும் உழைப்பாளிகளாக இருக்க வேண்டும்.


தொழிலாளியும் முதலாளியும்



மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன். இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று, அதன் பணத்தைச் சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு, கூலி கொடுக்காமல் இருந்தவன்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி – 2227


விளக்கம்:


உலகில் பல விதமான மோசடிகள் நடக்கின்றன. அவற்றில் சில மிக மிக மோசமானவையாகும்: கடும் தண்டனைக்குரியதாகும் அவற்றில் ஒன்று, ஒருவரை நம்ப வைப்பதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றுவதாகும். படைத்தவனின் மீது ஒருவன் சத்தியம் செய்தால் அது உண்மையாக இருக்கும் என்று நம்பி ஒரு பொருளை வாங்குவான், அல்லது கொடுப்பான்.


இறைவனின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றியதால் இவனுக்கு எதிராக அல்லாஹ் வழக்காடுவான். அப்போது இவனது நிலை என்னவாகும். சுதந்திரமாக இருப்பவனை அடிமை என்று கூறி, அவனை விற்று அதன் மூலம் வந்த பணத்தைச் சாப்பிட்டவனுக்கு எதிராகவும் அலலாஹ் வழக்காடுவான்.


ஒரு வேலைக்காரனிடம் முழுமையாக வேலை வாங்கி விட்டு அவனுக்குரிய கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றியவனுக்கு எதிராக அல்லாஹ் வழக்காடுவான். கொடுக்கும் சம்பளத்தை விடக் கூடுதலாக வேலை வாங்கிக் கொண்டு அந்த வேலைக்காரனின் கூலியை வழங்காமல் மறுக்கும் எத்தனையோ முதலாளிகள் இருக்கின்றனர். இவர்கள் இந்த நபிமொழியை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வேலைக்காரனிடம் எவ்வளவு வேலை வாங்குகிறோமோ அதற்குத் தகுதியான ஊதியத்தை நாம் வழங்க வேண்டும். இல்லையெனில் இறைவன் நமக்கு எதிராக வழக்காடும் நிலை ஏற்படும்.


கருத்துகள்