நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 4️⃣
கடன் தள்ளுபடி
முன் காலத்தில் மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம், “இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 2078
விளக்கம்:
இவ்வுலகில் சிரமப்படுபவர்கள் தான் அதிகம். இவ்வாறு சிரமப்படுபவர்களைக் கண்டால் அவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். அவர்களது சிரமங்களை நம்மால் முடிந்தளவு போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். மனிதனுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்” (புகாரி 7376) என்ற நபிமொழியும் கஷ்டப்படுவர்களுக்கு உதவ வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கஷ்டத்தினால் அல்லது அவசியத் தேவையின் காரணத்தால் கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவதற்குச் சிரமப்படும் போது அவர்களது கடனை நாம் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் மறுமை நாளில் நமது பாவங்களை அல்லாஹ் தள்ளுபடி செய்வான்.
அநியாயம்
செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல்) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 228
விளக்கம்:
மனிதன், மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறும் போது பாதிக்கப்பட்டவன் மன்னிக்காத வரையிலும் இவனது அந்தப் பாவத்தை இறைவன் மன்னிக்க மாட்டான். எனவே மனித உரிமைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவனின் உரிமைகளைப் பாதிக்காத வண்ணம் நமது செயலை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கடன் வாங்குபவர்கள் குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
கடனை திருப்பித் தருவதற்குரிய வசதிகள் வந்த பிறகும் கொடுக்காமல் இழுத்தடிப்பது பெரிய அநியாயமாகும். பணவசதி இருந்தும் இன்று நாளை என்று இழுத்தடிப்பது பாவமாகும். எனவே வசதி படைத்தவர்கள் வாங்கிய கடனை உடன் திருப்பித் செலுத்த வேண்டும். மேலும் கடன் வாங்கியவர், ‘இந்தக் கடனை இவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஒரு செல்வந்தரைச் சுட்டிக் காட்டினால், ‘அவரிடம் நாம் வாங்க மாட்டேன்’ என்று கூறாமல் பொறுப்பு சாட்டப்பட்டவரிடம் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
விவசாயம்
யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும் பயிரிட விரும்பாவிட்டால், அதைத் தம் சகோதருக்குப் பயிரிடக் கொடுத்து விடட்டும்” என்று நபி (எல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் – 317
விளக்கம்:
மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவை உற்பத்தி செய்வது மிக மிக முக்கியமானதாகும். ஆனால் இன்று பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இயந்திர உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலத்தில் உணவு உற்பத்தி கடுமையாகக் குறைந்து பஞ்சம் ஏற்படும்.
இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, விவசாய நிலத்தை சும்மா போடாமல் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். அல்லது மற்ற சகோதரருக்கு வழங்கி, உணவு உற்பத்தியைப் பெருக்கவும் அந்தச் சகோதரர் பயன் பெறவும் உதவிட வேண்டும். உணவு உற்பத்தி எவ்வளவு அவசியம் என்பதையும், வீணாக நிலங்கள் இருக்கக் கூடாது என்பதையும் இந்த நபி மொழி தெளிவுபடுத்துகிறது.
வேண்டாத நிபந்தனைகள்
قَالَ: «مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»
அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது. (செல்லாதது,) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத்தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி – 2155
விளக்கம்: இஸ்லாமிய மார்க்கத்தைத் தந்தவன் அல்லாஹ்! அவன் தான் இந்த மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக வணக்க வழிபாட்டு முறைகள், தடை செய்யப்பட்டவை, அனுமதிக்கப்பட்டவை இவற்றை அவனே குறிப்பிட வேண்டும். அல்லாஹ் குறிப்பிடாத விதிகளைப் புதிதாக யாரேனும் உருவாக்கினால் அவை எக்காலத்திலும் சொல்லாது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும். இறைவன் நமக்குத் தந்திருக்கும் திருக்குர்ஆன் வேதத்தில் இல்லாத அல்லது அவனது தூதரான நபி (ஸல்) அவர்கள் கூறாத நிபந்தனைகளை விதிப்பது இஸ்லாமியச் சட்டப்படி குற்றமாகும். உதாரணமாக தொழுகைக்கு வருபவர்கள் எப்படி இருக்க வேண்டுமென சில பள்ளிவாசல்களின் முகப்பில் எழுதப்பட்டிருக்கிறது.
நான்கு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் தலையில் தொப்பி அணிந்து வேண்டும், சப்தமிட்டு ஆமீன் கூறக் கூடாது இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது விரலசைத்துத் தொழக் கூடாது’ என்ற நிபந்தனைகள் பள்ளிக்கு வருபவர்களுக்கு விதிக்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளில் எந்த ஒன்றையும் திருக்குர் ஆனோ அதன் விளக்கவுரையாக உள்ள நபிமொழிகளோ கூறவில்லை. இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள் விதிக்காத எந்த நிபந்தனைகளை யார் விதித்தாலும் அது நிராகரிக்கப்படும் நிராகரிக்க வேண்டும்.
நரகத்திலிருந்து பாதுகாப்பு
قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி – 1417
விளக்கம்:
மறுமை நாளில் வெற்றி பெறுவதற்கு இஸ்லாம் பல வழிகளைக் காட்டியிருக்கிறது. அதில் முக்கியமானதாக தர்மத்தை இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. பெருநாள் தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியது தர்மமாகும். ‘பெண்கள் அதிகம் நரகத்தில் இருப்பதை நான் கண்டேன். எனவே நீங்கள் உங்கள் ஆபாரணத்திலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்’ என்று நபிகளார் குறிப்பிட்டது நரகத்தை விட்டுப் பாதுகாக்கும் கவசமாக இந்த தர்மம் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பெரியளவில் இருந்தால் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை குறைந்த அளவு தர்மம் கூட மறுமை நாளில் நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்திடும். நாம் மனத் தூய்மையோடு செய்யும் குறைந்தளவு தர்மம் மறுமை வெற்றிக்கு வித்திடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்து நரகை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நில மோசடி
قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
ஏவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி – 2452
விளக்கம்:
பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள இன்று சிறந்த முதலீடாகக் கருதப்படுவது நிலத்தை வாங்கி விற்பதாகும். ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பரவலாக இந்த வியாபாரம் நடைபெறுகிறது ஆனால் இந்த வியாபாரத்தில் பெரும்பாலும் உண்மையிருப்பதில்லை. அதிகமதிகம் மோசடிகள் நடைபெறுகின்றன.
அடுத்தவனின் நிலத்தை தன் நிலமாகக் கூறி விற்பனை செய்வது. அடுத்தவனது நிலத்தின் சில பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்து விற்பனை செய்வது அல்லது தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வது என்று ஏராளமான நில மோசடிகள் நடைபெறுகின்றன. அடுத்தவனின் நிலத்தில் சிறிய அளவு எடுத்துக் கொண்டாலும் அவனுக்கு மறுமை நாளில் கிடைக்கும் தண்டனை மிகப் பெரியதாகும் ஏழு நிலத்தைக் கழுத்தில் தொங்க விடப்பட்டு அவனுக்கு தண்டனை கொடுக்கப்படும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாராவது வாதத் திறமையால் அடுத்தவனின் பொருளைத் தனக்குரியதாக்கிக் கொண்டால் அவன் நரக நெருப்பின் ஒரு துண்டை தனக்குரியதாக்கிக் கொள்கிறான்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி 2458).
ஆட்சிக்கு ஆசைப்படாதே
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُعْطِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَكَفِّرْ عَنْ يَمِينِكَ»
அல்லாஹ்வின் தாதர் (ஸல்) அவர்கள், “ஆட்சிப் பொறுப்பை நீயாகக் கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ விடப்படுவாய் (இறை உதவி கிட்டாது)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி)
நூல்: புகாரி – 6722
விளக்கம்:
பொருளாதாரத்தை ஈட்ட நல்ல வழியாக இன்று அரசியல் அதிகாரத்தைப் பலர் நம்பி இருக்கின்றனர். இதனால் தான் சிறிய கவுன்சிலர் பதவிக்குக் கூட பல இலட்சங்களை வாரி இறைக்கின்றனர் இது போன்ற பொறுப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்தப் பொறுப்பு எதற்காக வழங்கப்படுகிறதோ அதைச் சரிவர நிறைவேற்றாதவர் மறுமையில் குற்றவாளியாக நிறுத்தப்படுவார். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொறுப்பை அமானிதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த பொறுப்புகளை நாமாக தேடிப் பெற்றுக் கொண்டால் இறை உதவி இல்லாமல் நாம் தனித்து விடப்படுவோம். நமது திறமையையும் நேர்மையையும் பார்த்து மக்களாகக் கொடுத்தால் இறை உதவி நிச்சயம் நமக்குக் கிடைக்கும். பணம் கிடைக்கிறது. அதிகாரம் கிடைக்கிறது என்பதற்காக, பதவிக்குப் போட்டி போட்டு, பணத்தைச் சம்பாதிப்பதையே குறிக்கோளாக இருந்தால் அவர் அந்தப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி மக்களுக்கு மோசடி செய்தார் என்பதால் அவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (பார்க்க: புகாரி 7151).
கோபம்
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الغَضَبِ»
மக்களைத் தனது பலத்தால் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன் உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 6114
விளக்கம்:
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று கூறுவார்கள் கட்டுப்பாட்டை இழந்து, கடும் கோபப்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்பதைப் புரியாமல் நடந்து கொள்பவர்கள் பேரிழப்பைச் சந்திப்பார்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்பட்டு, நியாயமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் பின்னால் சிரமத்திற்கு ஆளாவார்கள் அதிகம் கோபப்படும் ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, ‘எனக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள்? என்று பல தடவை கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘கோபப்படாதே! கோபப்படாதே! என்றே கூறினார்கள். (புகாரி 6116) அடிக்கடி தேவையில்லாமல் கோபப்படுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதே! அடுத்தவரை அடித்து வீழ்த்துவது பெரிய காரியமில்லை! கோபம் வரும் போது கட்டுப்படுத்தி இருப்பதே சிறந்த காரியமாகும்.
போதைப் பொருட்கள்
போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூமுஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி – 4343
விளக்கம்:
இஸ்லாம் மதுவைத் தடை செய்துள்ளது. மது அருந்த கூடாது என்றும் இது ஷைத்தானின் காரியம் என்றும் எச்சரிக்கை செய்கிறது.
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர் ஆன் 5:91)
நவீன உலகில் மக்களைக் கெடுப்பதற்கு என ஏராளமான பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் போதைப் பொருட்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன. போதைக்கு அடிமையாக்கி, பலரின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கியுள்ளனர்.
போதைப் பொருட்கள் இன்று பல பெயர்களில் சந்தையில் உலா வருகின்றன. இவற்றில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தப் பெபரில் வந்தாலும் அவற்றில் போதை இருக்குமானால் கண்டிப்பாக அவற்றை சாப்பிடக் கூடாது அதிகம் சாட்பிட்டால் தான் போதை வரும் என்றிருந்தால் அதைக் கொஞ்சம் கூட சாப்பிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (திர்மிதீ 1788) எனவே எந்தப் பொருள் போதை தந்தாலும் அவற்றைச் சாப்பிடுவது ஹராமாகும்.
வரம்பு மீறாதே
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»
கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈஸாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி – 3445
விளக்கம்:
இவ்வுலகில் இறைவனுக்கு நன்றியுள்ள அடியார்களாக வாழ்பவர்களை அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களை அளவு கடந்து புகழ்ந்து, இறுதியில் கடவுள் தன்மையை வழங்கி கடவுளாக்கி வணங்க ஆரம்பித்து விடுகின்றனர். முந்தைய காலத்திலும் இது போன்று நல்லவர்கள் இறந்த பின்னர் அவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்களை எழுப்பி அதில் அவர்களின் உருவங்களைப் பொறித்து வழிபாடு செய்து வந்தவர்களைப் பற்றி, ‘இவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் மோசமானவர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி 427)
தம் வாழ்நாளுக்குப் பிறகு இது போன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, முந்தைய காலத்தில் எப்படி இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து கடவுளாக்கினார்களோ அது போன்று தம்மை ஆக்கி விடக் கூடாது என்று எச்சரித்தார்கள். இன்று மவ்லித் பாடலில் நபியவர்களை நோக்கி, நீங்களே அழித்து விடும் பெரும் பாவங்களை மன்னிப்பவர்’ என்று படிப்பவர்கள் இந்த நபிமொழியைக் கவனத்தில் கொள்ளட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!