RECENT POSTS

நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி5️⃣

 


நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 5️⃣
யாருக்கு அடிமை

 

பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 6435

விளக்கம்:

செல்வம் வாழ்வதற்குத் தேவை தான். அதைத் தேடுவதும் கடமை தான். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கக் கூடாது. பணம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய முனைவது முற்றிலும் தவறானதாகும். இன்று பெரும்பாலும் ஆடம்பர ஆடைகள், அணிகலன்கள், வீட்டுப் பொருட்கள் என்று மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதும் அதற்கு அடிமையாகி விடுவதையும் காண்கிறோம்.

இது போன்ற பொருட்கள் இருந்தால் மகிழ்ச்சியடைவதும் இல்லையென்றால் கவலைப்படுவதுமாக இருப்பது முற்றிலும் தவறாகும். பணம் இருந்தால் படைத்தவன் சொன்ன முறைப்படி வாழ்வதற்கும், இல்லையென்றால் பொறுமையை கடைப்பிடிப்பதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் படைத்தவனை மறந்து விட்டு, அவனுக்கு அடிமையாவதை விட்டுவிடக் கூடாது.

தீர்ப்பு


رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


«إِذَا حَكَمَ الحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ»،


நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி – 7352


விளக்கம்:


சட்டப் பிரச்சனைகள் வரும் போது திருக்குர்ஆன் நபிமொழிகளை முன் வைத்துத் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பு வழங்கும் போது சில பிரச்சனைனகளில் நேரடியான விளக்கம் திருக்குர் ஆனில் அல்லது நபிமொழிகளில் கிடைத்து விடும். அப்போது அந்த விளக்கத்தையே தீர்ப்பாக வழங்கிவிடலாம்.


சில நேரங்களில் நவீன காலப் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்யும் போது திருக்குர் ஆன், நபிமொழிகளில் நேரடியான விளக்கம் இருக்காது. அப்போது இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும் போது ஏதாவது திருக்குர்ஆன் வசனத்தின்படி நபிமொழியின்படி இதற்குத் தீர்வு காண முடியுமா? என்று ஆய்வு செய்து இறையச்சத்தின்படி ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்.


அவ்வாறு ஒருவர் தீர்ப்பளித்தால் அது உண்மையில் சரியான தீர்ப்பாக இருந்தால் அந்த நீதிபதிக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பு உண்மையில் தவறாக இருந்தால் அவர் குற்றவாளியாக ஆக மாட்டார். ஆய்வு செய்ததன் காரணத்தால் அவருக்கு ஒரு கூலி கிடைக்கும். எனவே இது போன்ற நிலைகளில் தவறான தீப்புக்காக அவரைக் கடிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


சமரசம்


أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


«لَيْسَ الكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا»


(பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி)


நூல்: புகாரி – 2692


விளக்கம்:


ஐந்து விரல்கள் எப்படி ஒன்றாக இருப்பதில்லையோ அது போல மனிதர்கள் அனைவரும் குணத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை எனவே அவர்களுக்கு மத்தியில் பிணக்குகள், சண்டைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு பிணக்குகள் ஏற்படும் போது. ‘நன்றாகச் சண்டையிடட்டும் என்றிருக்காமல் பின்வரும் வசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.


நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.


(அல்குர்ஆன் : 49:10.)


துன்பத்தின் போது


عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ


«لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»


(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


நூல்: புகாரி – 1297


விளக்கம்:


மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறைநம்பிக்கையாளரின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும், ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது, படைத்தவன் நம்மைச் சோதிக்கின்றான் என்று எண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.


அவ்வாறு இருந்து “இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு! இதை விடச் சிறந்ததை வழங்கு” என்று கூற வேண்டுமே தவிர கன்னங்களில் அடித்துக் கொள்வதும், சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.


சோதனைக் காலம்


عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ


«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»


இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்) செயல்கள் புரிந்து கொள்ளுங்கள் (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் – 186


விளக்கம்:


உலகம் அழியும் காலம் நெருங்கும் போது இவ்வுலகில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் பெருகத் துவங்கி விடும் அந்நேரத்தில் வாழ்பவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். காலையில் இறை நம்பிக்கையாளனாக இருப்பவன், மாலையில் தன் உயர்ந்த கொள்கையான இஸ்லாத்தை விட்டுப் போய் விடுவான். இது போன்று மாலையில், இறை நம்பிக்கையாளனாக இருப்பவன் காலையில் இஸ்லாத்தை விட்டுப் போய் விடுவான். இப்படி உயர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு விட்டுப் போகும் நிலை ஏற்படும்.


மேலும் இவ்வுலக அற்ப சுகங்களுக்காக மார்க்கத்தை விற்க வேண்டிய நிலை வந்தால் அதை விற்கவும் தயங்க மாட்டார்கள். இந்நிலை இன்று பரவலாகக் காணப்படுகிறது. எம்.எல்.ஏ ஆவதற்காக, எம்பி ஆவதற்காக, மந்திரி ஆவதற்காக மனிதனின் காலில் விழும் அவல நிலை இன்று தமிழகத்தில் இருக்கிறது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்கக் கூடாது என்ற உயர்ந்த கொள்கையை விட்டு விட்டு, முஸ்லிம்கள் பதவிக்காக ஆண் பெண் என்று பாகுபாடு இல்லாமல் தலைவர்களின் கால்களில் விழுகின்றனர். இதுபோன்ற நிலையைக் காணும் போது அதிகமதிகம் நற்காரியங்களில் ஈடுபட்டு மறுமை வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 


ஹலாலா? ஹராமா


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ


«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»


தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி – 2083


விளக்கம்:


விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் இக்காலத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக, அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வழிவகைகளையும் கையாளுகின்றனர். எந்தத் தொழிலில் அதிக லாபம் வருகிறது என்பதை மட்டும் பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். அந்த வியாபாரம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடை என்பதையெல்லாம் இந்த அவசர உலகத்தில் சிந்திப்பதில்லை.


பணம்! பணம் என்பது மட்டுமே குறிக்கோள் என்பதால் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமான வட்டித் தொழியில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகின்றனர். லாட்டரி மது என்று மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் வியாபாரத்தையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர் இவையெல்லாம் உலக அழிவுக்கு அறிகுறியாகும். மறுமை வெற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் எந்தத் தொழிலாக இருந்தாலும், அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? இல்லையா என்பதை அறிந்து ஈடுபட வேண்டும்.


நூதனப் பழக்கம்


எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள் நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) செய்திகளையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் – 13


விளக்கம்:


இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகும். இந்த இரண்டின் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை மற்றும் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று இந்த இரண்டையும் விட்டு விட்டுப் புதிய புதிய வணக்க வழிபாடுகளைக் கொண்டு வருகின்றனர். நபிகளார் காலத்தில் இல்லாத புதிய வணக்கங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. அவற்றுக்குத் திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் இல்லாத செய்திகளை சான்றாகக் காட்டுவார்கள்.


இந்த அவ்லியா இப்படிச் செய்தார், அவர் அப்படிச் செய்தார், அந்த மகான் இப்படிச் சொன்னார் என்று சொல்வார்கள். இப்படி மார்க்கத்தைப் புரட்டுபவர்கள், மார்க்கத்தில் இல்லாததைச் சொல்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு மட்டுமே! திருக்குர் ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள். இந்த இரண்டில் இல்லாத, இந்த இரண்டும் அங்கீகரிக்காத எந்தச் செயலைச் செய்தாலும் அல்லாஹ்விடத்தில் அதற்கு அங்கீகாரம் கிடைக்காது, தண்டனை தான் கிடைக்கும்.


அங்கீகாரம் இல்லாத அமல்கள்


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

நம்முடைய கட்டளையில்லாத அமலை யார் செய்வாரோ அது (அல்லாஹ்விடம்) நிராகரிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல்: முஸ்லிம் – 3541


விளக்கம்:


இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையை விளக்கும் ஒரு நபிமொழியாகும் இது இன்று மார்க்கத்தின் பெயரால் எத்தனையோ புதுமையான அமல்கள் நிறைந்துள்ளன. இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை முழுமையாக மறைக்கும் அளவிற்கு இந்தப் புதிய களைகள் நிறைந்து விட்டன. இவற்றைப் பிடுங்கி எறியாவிட்டால் இஸ்லாம் முழுமையாக இவற்றில் மூழ்கிப் போய்விடும்.


பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு அமலும் மார்க்க அங்கீகாரம் இல்லாததாகவே இருக்கின்றது. மவ்லித் ஓதுதல், ஒன்று. ஏழு நாற்பது மீற்றும் வருட பாத்திஹாக்கள் ஒதுதல், தொழுகை முறைகள் தர்ஹா வழிபாடுகள் என்று ஏராளமான, மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.


இவை வளர்வதற்குக் காரணம் இந்த நபிமொழியைப் பற்றி விளங்காதது தான் மார்க்கம் தொடர்பான எந்த அமலாக இருந்தாலும், இதற்கு நபிகளாரின் அங்கீகாரம் இருக்கிறதா? கட்டளையிருக்கிறதா? என்ற கேள்வியை மட்டும் நாம் கேட்டு அமல் செய்தால் தற்போது முளைத்திருக்கும் இந்தக் களைகள் அனைத்தும் இல்லாமல் போய்விடும்.


சிந்தித்துப் பேசுங்கள்


 عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ


«إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ، مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ المَشْرِقِ»


ஓர் அடியான் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறான். அதன் காரணமாக அவன் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி – 647


விளக்கம்:


மனிதனின் உறுப்புகளில் நாக்கு முக்கியமான உறுப்பாகும். இதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறும் மனிதன் இதனால் இழிவடையவும் செய்கின்றான் நல்லதைப் பேசுவதற்கும், நன்மையை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதற்கும் பயன்படும் இந்த நாவு. மற்றவர்களைக் கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் பயன்படுகிறது. சில நேரங்களில் நரகத்தின் அடிபாதாளத்தில் விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் மனிதனிடம் அதிகம் பயப்பட வேண்டியது நாவு என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.


மனிதன் சில நேரங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் பல குடும்பங்களைப் பிரிப்பதற்கும், சில உயிரைப் பறிப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அளந்து, கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.


கோள் சொல்லாதே


فَقَالَ لَهُ حُذَيْفَةُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:


«لَا يَدْخُلُ الجَنَّةَ قَتَّاتٌ»

கோள் சொல்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)


நூல்: புகாரி – 6056


விளக்கம்:


மனிதர்களில் சிலர், வெட்டிப் பேச்சுக்களைப் பேசி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருவனிடம் கேட்ட செய்திகளை அடுத்தவனிடம் கூறி இரண்டு நபர்களுக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி இன்பம் பெறுபவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மறுமையில் சொர்க்கம் செல்ல முடியாது.


பிணக்கு ஏற்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் போது, நன்றாக இருப்பவர்களுக்கு மத்தியில் கோள் சொல்லிப் பிரிவினை ஏற்படுத்துவது சரியாகுமா ?


அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், பேசினால் நல்லதைப் பேசுங்கள் இல்லையென்றால் வாய்மூடி இருங்கள்’ என்று கூறியுள்ளார்கள் (புகாரி 6018) எனவே நம் பேச்சால் மற்றவர்கள் நலன் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அடுத்தவர்கள் துன்பம் பெறாமலாவது இருக்க வேண்டும்.


கருத்துகள்