நபிகளாரின் நற்போதனைகள் 📚பகுதி 6️⃣
அல்லாஹ்வின் திருப்பெயரால் ..
பொறுமையாளன்
மன வேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி).
நூல்: புகாரி – 7378
விளக்கம்:
இறைவனால் மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகக் கருதப்படுவது. அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவதாகும். அவன் தனித்தவன், அவனுக்கு மனைவியில்லை, குழந்தை இல்லை, அவன் யாராலும் பெறப்படவும் இல்லை. இவ்வாறு இறை நெறிகள் இருக்க அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவது அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் சொல்லாகும். ஆனாலும் அல்லாஹ் இவ்வாறு சொல்பவர்களை இவ்வுலகில் உடன் தண்டிக்காமல் திருந்துவதற்குக் கால அவகாசத்தைத் தருகின்றான் மனிதன் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கத் தயாராக இருக்கிறான்.
இறைவனுக்குக் குழந்தை இருப்பதாக ஒருவன் கூறினாலும் அவன் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் இவ்வுலகில் இவ்வளவு பெரிய பாவ காரியத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கூட உடல் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுத்து பெருந்தன்மை உள்ளவனாகவும் பொறுமையாளனாகவும் அல்லாஹ் திகழ்கின்றான்.
இறைவனின் – வெறுப்புக்குள்ளானோர்
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ: مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் கடுமையான வெறுப்பிற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி – 6882
விளக்கம்:
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்த பின்னர் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அறியாமைக் காலத்துப் பழக்க வழக்கத்தை விட்டுவிட்டு தூய இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இன்று. இஸ்லாத்தில் இருந்து கொண்டே மார்க்கத்திற்கு முரணான காரியங்களையும் மூட நம்பிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அறியாமைக் காலத்துப் பழக்கமான நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல் போன்ற காரியத்தை இஸ்லாத்தில் இருந்து கொண்டே நடைமுறைப்படுத்துகின்றனர்.
இது போன்று ஜோசியரிடம் சென்று குறி பார்ப்பது அறியாமைக் காலப் பழக்கமாகும். இதையும் இன்று செயல்படுத்துகின்றனர். நபிகளார் காலத்தில் மண்ணில் போட்டுப் புதைக்கப்பட்ட இந்தக் காரியங்களைத் தோண்டி எடுத்து நடைமுறைப்படுத்துபவர்கள் அல்லாஹ்வின் கடும் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன வெறி
குருட்டுக் கொடியின் கீழ் இன வெறிக்கு அழைப்பு விடுக்கவோ இன வெறிக்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)
நூல்: முஸ்லிம் – 3770
விளக்கம்:
அறியாமைக் கால மக்களிடம் இருந்த மிகப் பெரிய பாவமான காரியம் இன வெறியாகும். தான் உயர்ந்தவன், தங்கள் குலம் உயர்ந்தது தன் குலத்தைச் சார்ந்தவன் தவறு செய்திருந்தாலும் அவனுக்காக நியாய அநியாயம் பார்க்காமல் போராடுவது. அதற்காகப் பலரைக் கொல்வது என்பது அவர்களிடம் ஊறிப் போன செயல்பாடாகும். இறையச்சத்தின் மூலமே ஒருவன் உயர்வடைய முடியும், குலத்தாலோ அல்லது நிறத்தாலோ அல்லது மொழியாலேோ ஒருவன் இன்னொருவனை விட உயர்ந்து விட முடியாது. என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
யாராவது இனவெறிக்காக மட்டும் அல்லது இனத்திற்காக நியாயமின்றிப் போர் செய்து. அதில் இறந்து விட்டால் அவர் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்றவராக மரணிக்கவில்லை என்று நபிகளார் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே யாரும் இனத்தை வைத்து நிறத்தை வைத்து, மொழியை வைத்து ஆட்டம் போடக் கூடாது.
மனிதாபிமானம்
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ»
உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 2557
விளக்கம்:
மனித நேயத்தை இவ்வுலகில் அதிகம் போதித்து நடைமுறைப்படுத்தியது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே! வறிய மக்களிடம் நல்ல முறையில் நடந்து அந்த மக்களை மகிழ்விக்கும் பல அறிவுரைகளை இஸ்லாம் கூறியுள்ளது. நம்மிடம் வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரன் நமக்காக உணவு தயார் செய்து வரும் போது அவனுக்குக் கொடுக்காமல் நாம் மட்டும் நன்றாகச் சாப்பிட்டு விடுகிறோம். அல்லது மிச்சம் மீதி இருப்பதை அவருக்கு வேண்டாவெறுப்பாகக் கொடுக்கிறோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள், நமக்காக இவ்வாறு உணவு தயாரித்து வரும் வேலைக்காரனை நம் பக்கத்தில் அமர வைத்து அவருக்கும் அதிலிருந்து உண்ணக் கொடுக்க வேண்டும் என்றார்கள். அல்லது குறைந்தபட்சம் ஒரு கவள உணவாவது அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றார்கள். நமக்காகப் பாடுபட்டு அறுசுவை உணவு படைத்த அந்தப் படைப்பாளிக்கும் உணவைக் கொடுத்து மனித நேயத்தைக் காப்போம்.
சமூகப் பணி
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ، فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ، كَانَتْ تُؤْذِي النَّاسَ»
நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்து வந்த மரமொன்றை ஒரு மனிதர் வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காக அவர் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் – 5107
விளக்கம்:
மார்க்கப் பணிகளில் ஈடுபடுவதோடு, பொதுநல விஷயங்களிலும் மக்கள் ஈடுபட வேண்டும். இதுவும் மறுமையில் நன்மையை ஈட்டித் தரும் காரியம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் இந்த நபிமொழியில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பொதுமக்களுக்கு இடையூறு தரும் வண்ணம் கிடந்த மரத்தை வெட்டி மக்களுக்கு நல்ல பாதையை ஏற்படுத்தித் தந்ததால் ஒருவர் சொர்க்கத்திற்கே சென்றுள்ளார் என்றால் இது போன்ற செயல் எவ்வளவு நன்மையை ஈட்டித் தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில், தெரு விளக்குகள் அமைத்துக் கொடுத்தல், வீதிகளைத் தூய்மைப்படுத்துதல், சாக்கடைகளைச் சரி செய்தல் என்ற சமூகப் பணிகளைச் செய்து இந்த மனிதர் போல் நாமும் சொர்க்கம் செல்ல முயற்சிக்கலாம்.
இறையில்லம்
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத் தெருவாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் – 1076
விளக்கம்:
உலகில் உள்ள இடங்களில் மன அமைதி தரும் இடம் இறையில்லங்களாகும். படைத்தவனை நினைப்பதற்கும், அவனது வேதத்தை ஒதுவதற்கும். தொழுவதற்கும் உருவாக்கப்பட்ட இந்த இறையில்லங்கள் தான் இறைவனுக்கு மிகவும் விருப்பமான இடமாகும் அந்த இடத்திற்கு அவனை வணங்குவதற்காக வரும் போது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடம் மதிப்பு உயர்வதுடன் பாவங்களும் அழிக்கப்படுகின்றன.
எனவே அதிகமதிகம் இறையில்லங்களுக்குச் சென்று வருபவர்களாகவும். அங்கு சென்று தொழுபவர்களாகவும், திக்ர் மற்றும் திருக்குர்ஆனை ஓதுபவர்களாகவும் இருக்க வேண்டும். ககடை வீதிகள் என்பது ஆண்கள், பெண்கள் கலந்துறவாடும் இடமாக மாறிவிட்டது. மேலும் பொய், புரட்டு மோசடி, ஏமாற்று வேலைகள் போன்றவை இங்கு நடப்பதால் இறைவனுக்கு வெறுப்புக்குரிய இடமாகக் கருதப்படுகிறது
போதுமென்ற மனம்
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ»
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று, மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 6446
விளக்கம்:
மனிதனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றே ஆசைப்படுவான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களுக்கு இரண்டு தங்க ஒடைகள் இருந்தாலும் அவனுக்கு இன்னொரு ஒடை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவான். மண்ணறையில் வைத்தால் மட்டுமே அவனது ஆசை நிறைவு பெறும்” என்று கூறினார்கள்.
மனிதனுக்கு இறந்து போகும் வரை ஆசை இருக்கும் என்பதால் நமக்குக் கிடைப்பதைப் பொருந்திக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை நிம்மதியானதாக அமையும். இருப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒருவன் கற்றுக் கொண்டால் அவன் தான் உண்மையில் மிகப் பெரிய செல்வந்தன் பேராசைப்பட்டு, பணம் பணம் என்றலைந்தால் மிஞ்சப் போவது அலைச்சலும் மன உளைச்சலும் தான். எனவே உழைப்போம்: இருப்பதை வைத்து நிறைவு பெறுவோம்.
ஈமானின் சுவை
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ»
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)
அல்லாஹ்வும் அவனுடைய தாதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது
ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி – 16
விளக்கம்:
இஸ்லாத்தை ஏற்பவர் அதன் அனைத்துச் சட்டங்களையும் கொள்கைகளையும் தெரிந்து, அதில் இன்பமுற்றுச் செயல்பட வேண்டும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காக ஒருவர் இஸ்லாத்தில் இணையக் கூடாது அதன் முக்கியத்துவத்தையும் அதன் கொள்கை கோட்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் முழுமையான சட்டங்களை அறிந்திருக்காவிட்டாலும் அதன் முக்கியமான சில விஷயங்களையாவது அறிந்திருப்பது அவசியமாகும்.
அதில் மூன்று விஷயங்களை ஒருவர் அறிந்திருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றிருந்தால் அவர் ஈமானின் சுவையை அறிந்தவராகக் கருதப்படுவார். அல்லாஹ்வையும் அவனது தூதரையும், உலகில் உள்ள மற்ற எவரை விடவும் நேசத்திற்குரியவராக, மனப்பூர்வமாக நாம் ஏற்க வேண்டும்.
எந்தப் பிரச்சனையிலும் அல்லாஹ் சொன்ன, அவனது தூதர் சொன்ன காரியங்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும். யார் மீது அன்பு செலுத்தினாலும் அல்லாஹ்வுக்காக அன்பு செலுத்த வேண்டும். ஒருவரை வெறுத்தாலும் அது அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒருவரை விரும்புவதும், வெறுப்பதும் கொடுப்பதும், தடுப்பதும் என எதுவாயினும் இறை நேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும்.
இஸ்லாத்திற்கு வந்த பின்னர் மீண்டும் இணை வைப்புக் கொள்கைக்குச் செல்வதை, நெருப்பில் போட்டால் எப்படித் துடிப்போமோ அது போன்று வெறுப்பைக் காட்ட வேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்க மாட்டோம் என்று ஈமானில் உறுதியாக இருக்கும் எவரும் இஸ்லாத்தை விட்டுச் சற்றும் விலக மட்டார் என்பது திண்ணம்.
சொர்க்கமும் நரகமும்
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி – 6487
விளக்கம்:
இறைக்கட்டளையின் படி இவ்வுலகில் வாழும் நன்மக்களுக்கு மறுமை நாளில் மாபெரும் சொர்க்கம் என்ற பரிசை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இந்தச் சொர்க்கத்தில் உள்ள சுகங்கள் யாரும் கண்டிராதவை, யாரும் கேட்டிராதவை, யாரும் சுவைத்திராதவை அந்த இன்பதிற்கு நிகர், அந்த இன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை நினைத்ததும் கேட்டதும் நிரந்தரமாகக் கிடைக்கும். சண்டைகள் இல்லை சச்சரவுகள் இல்லை, மரணமும் இல்லை. இப்படி ஏராளனமான இன்பங்கள் நிறைந்தது சொர்க்கமாகும். இவ்வளவு பெரிய சொர்க்கத்தைப் பெற. சில கஷ்டங்களை நாம் இவ்வுலகில் ஏற்றே ஆக வேண்டும்.
இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்றார்கள். சிரமம் என்ற போர்வையை நாம் எடுத்துக் கொண்டால் தான் சொர்க்கம் என்ற இடத்தைப் பார்க்க முடியும். இறைக் கட்டளையை நிறைவேற்ற, பல துன்பங்களைச் சந்திக்க வேண்டும். துன்பங்கள் வருகிறது என்பதற்காக இறைக் கட்டளையை நாம் நிராகரித்து விடக் கூடாது. அதே போல் மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது என்பதன் பொருள், யார் மன இச்சைகளை எடுத்துக் கொண்டாரோ அவர் நரகத்தைக் காண்பார் என்பதாகும். எனவே மன இச்சையை நிராகரித்து. சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொள்வோமாக.!
மனத் தூய்மை
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ»
யார் விளம்பரத்திற்காக (நற்செயல்) புரிகிறாரோ அவரைப் பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி – 6499
விளக்கம்:
இறைவனுக்குச் செய்யும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும். மனத் தூய்மை இல்லாத எந்த அமலும், அது பெரியதாக இருந்தாலும் சரி! சிறியதாக இருந்தாலும் சரி அது ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த அடிப்படை உண்மையை விளங்காத பலர் அரசியல்வாதிகளைப் போல் விளம்பரத்திற்காகச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
அடுத்தவர்கள் தர்மம் செய்யும் போது கூட அதை விளம்பரப்படுத்தி, அதில் தம் பெயரையும் இணைத்து, நான் தான் வழங்கினேன் என்று கூறுவதையும் அடுத்தவர்கள் புகழ வேண்டுமென்பதற்காக வணக்கங்களில் ஈடுபடுவதையும் பார்க்கிறோம்.
இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றான ஹஜ் என்ற கடமையைக் கூட இன்று, நாங்கள் ஹஜ் செய்யச் செல்கிறோம் என்று போஸ்டர்கள், பேனர்கள், மாலைகள், விருந்துகள் என விளம்பரம் செய்வது தங்கள் நன்மைகளைத் தாங்களே அழித்துக் கொள்ளும் காரியமாகும் இவ்வாறு செய்யும் மக்களை மறுமை நாளில் அல்லாஹ் அம்பலப்படுத்தி அவர்களின் நன்மைகளை இல்லாமல் ஆக்கி விடுவான். எனவே வணக்க வழிபாடுகளில் மனத் தூய்மையுடன் செயல்பட முயல வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ் !
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!