வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா ?

 




வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா ?


 உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா?


பதில்


ஏற்கப்படும்


வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


எனவே ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் அதே சமயம் வட்டிக்குக் கடன் வாங்கிய ஒருவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது என்று மார்க்கம் கூறவில்லை. ஏனென்றால் வட்டி வாங்கி உண்பவர் தான் ஹராமான உணவை உட்கொள்கின்றார். வட்டி கொடுப்பவர், அதாவது வட்டிக்குக் கடன் வாங்கியவர் ஹராமான உணவை உட்கொள்கிறார் என்று கூற முடியாது.


“தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், “என் இறைவா! என் இறைவா!” என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் 1686


இந்த ஹதீஸில் ஒருவனது உணவு, குடிப்பு ஆகியவை ஹராமாக இருக்கும் நிலையில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது என்று கூறப்படுகிறது. வட்டிக்குக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதில்லை என்பதால் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.


⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️


போஸ்ட் ஆபீஸில் சிறு சேமிப்பு அக்கவுண்ட் சேர்ந்துள்ளோம். அதற்கு சிறிதளவு வட்டி வரும். அந்தப் பணத்தை தானம் செய்தால் அதில் தவறு உள்ளதா? இது தவறு என்றால் சிறு சேமிப்பு எப்படிச் சேருவது?


பதில்


வட்டியை பெறவே கூடாது


அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)


இந்த வசனத்தில் வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இது போன்று வட்டியைத் தடை செய்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.


நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த வட்டி விஷயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு சேமிப்பாக இருந்தாலும், பெரிய அளவில் வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதித்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் இரண்டும் சமம் தான். ஒரு பைசா அதிலிருந்து கிடைத்தாலும் அது ஹராம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


வட்டி ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை வாங்காமலிருப்பது தான் கடமையாகும். அதை வாங்கி தர்மம் செய்யலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.


ஏனெனில் அதை வாங்கி பிறருக்குக் கொடுக்கலாம் என்றால் அந்தப் பொருள் நம்முடையது என்று வாக்குமூலம் தந்ததாகவே அர்த்தம். அடுத்தவர் பொருளை நாம் தர்மம் செய்ய முடியாது. எனவே அதை வாங்கி தர்மம் செய்தாலும் வட்டி வாங்கிய குற்றத்திற்குத் தண்டனை பெற வேண்டியது ஏற்படும்.


இது போன்ற அக்கவுண்ட் தொடங்கித் தான் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே ஒரு சிறு தொகையை ஒதுக்கி வைத்து சேமிக்கலாம்.


அல்லது வங்கிகளிலேயே வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து சேமிப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா? என்பதை விசாரித்து அதன் படி செய்யலாம். அவ்வாறு செய்யும் போது நாம் சேமிக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுவார்களா? என்பதையும் விசாரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வட்டி வாங்காவிட்டாலும் வட்டிக்குத் துணை புரிந்த குற்றத்திற்கும் ஆளாகி விடக் கூடாது.


வட்டி எனும் பெரும் பாவத்தைச் செய்து தான் சேமிக்க முடியும் என்றால் அந்தச் சேமிப்பே நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் இறையச்சமுள்ள ஒருவர் வர வேண்டும். சிறு சேமிப்பைக் காரணம் காட்டி வட்டியை நியாயப்படுத்த முடியாது.


⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️


கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?


பதில்:


கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை.


ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவர் கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும். அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால் அவருக்கு ஹஜ் கடமையாகும்.


கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை.


கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.


ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத் தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.


3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ – وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏


அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.


(அல்குர்ஆன் 3:97) 


ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது. வாங்கிய கடனைச்செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை.


“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்-3832 


இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது.  எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான் ஹஜ் செய்ய வேண்டும்.


கருத்துகள்