முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

ஸகாத் கொடுப்போம் 🌿..தொடர் 2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளை பார்க்க இருக்கிறோம்.
ஸகாத் கொடுப்போம் 🌿..தொடர் 2
ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள்
செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய சிறப்புகளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

செல்வ வசதி பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றாமல் தன்னை ஒரு முஸ்லிம் என்று ஒரு போதும் சொல்லிக் கொள்ள முடியாது என்பதை இறை வசனங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. ஒருவனிடம் அணு அளவு ஈமான் இருந்தால் கூட அவன் செல்வ வசதியைப் பெற்றிருந்தால் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருக்க மாட்டான் என்பதற்கும் திருமறை வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்

இவர்களே இறை நம்பிக்கை கொண்டவர்கள்
அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. அல்குர்ஆன் 8:3, 4

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிறவர்களே இறை நம்பிக்கை கொண்டவர்கள். (அல்குர்ஆன் 5:56)
இது குர்ஆனின் – தெளிவான வேதத்தின் – வசனங்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நற்செய்தியுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை அவர்களே உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 27:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. (அல்குர்ஆன் 22;41)

மறுமையில் சாட்சியாளர்கள்
இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் 22:78)

நன்மை செய்பவர்கள் இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள். நன்மை செய்வோருக்கு நேர் வழியும், அருளுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அவர்கள் தாம் மறுமையை உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 31:2-4)

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை திருப்பாது
வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

இறையச்சமுடையோர்
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் 2:177)

இவர்கள் தான் வெற்றியாளர்கள்!
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர் (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 23:1-4)
இவ்வசனத்தைத் தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களின் பல்வேறு பண்புகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான். இறுதியில் அல்லாஹ் இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியைக் குறிப்பிடுகின்றான்.

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:10,11)
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிட மிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2:1-5)

நேர்வழி பெற்றவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ் வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:18)
இறையருளுக்குரியவர்கள் எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகிற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 7:156)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

ஸகாத்தை அல்லாஹ் வளர்க்கிறான்
இறைவனின் திருமுகத்தை நாடி நாம் ஏழைகளுக்கு ஸகாத்தை வழங்குவதினால் நமது செல்வம் ஒரு போதும் குறைந்து விடாது. நம்முடைய செல்வத்தில் இறைவன் மறைமுகமான பரகத்தைச் செய்வான். இம்மையிலும் மறுமையிலும் அதனை அல்லாஹ் பன்மடங்காகப் பெருக்கித் தருவான். மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள். அல்குர்ஆன் 30:39

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 2:276

நாம் இறைவனுக்காக ஸகாத்தை வழங்கும் போது அல்லாஹ் ஒன்றுக்கு எழுநூறாகவும் அதைவிட அதிகமாகவும் தருவான். மறுமையில் இதைவிட மிகப் பெரும் சுவனம் எனும் கூலியை அல்லாஹ் தரவிருக்கின்றான். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:261, 262

உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும்
தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 59:9
உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 64:15, 16

யாருடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து நீங்கியிருக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. நம்முடைய செல்வத்தைத் தகுதி உடையவர்களுக்கு வாரி வழங்குவதன் மூலமே கஞ்சத்தனத்திலிருந்து உள்ளத்தைப் பாதுகாக்க இயலும்.
நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றும் போது நம்முடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய உள்ளம் பரிசுத்தப்படுகிறது. (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 9:103)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பனூ தமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமான செல்வமுடையவன் மேலும் மனைவியும் குழந்தையும், விருந்தினர்களும் உடையவன். நான் (என்னுடைய செல்வத்தை) எவ்வாறு செலவு செய்ய வேண்டும்? நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதை எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வழங்குவாயாக. நிச்சயமாக அது பரிசுத்தமாக்கக்கூடியது. அது உன்னை பரிசுத்தப்படுத்தும். உன்னுடைய உறவினர்களை இணைத்து வாழ்வாயாக. யாசகம் கேட்பவர், அண்டை வீட்டார், மற்றும் ஏழை ஆகியோருக்கு (நீ உன்னுடைய செல்வத்தின் மூலம் செய்ய வேண்டிய) கடமை அறிந்து கொள்” என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் குறைத்துக் கூறுங்கள்” என்று வேண்டினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுடைய உரிமையை வழங்கி விடுவீராக. நீர் ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்” என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! (ஸகாத்தை வசூலிப்பதற்காக வரும்) உங்களுடைய தூதரிடம் ஸகாத்தை நான் ஒப்படைத்து விட்டால் (ஸகாத்தை நிறைவேற்றும் கடமையாகிய) அதிலிருந்து நான் நீங்கி அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் சார்நதவனாகி விடுவேனா? எனக்கு இது போதுமானதாகி விடுமா?” எனக் கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதரவர்கள், “ஆம்! நீ என்னுடைய தூதரிடம் அதனை ஒப்படைத்து விட்டால் அதிலிருந்து நீ நீங்கியவனாகி விட்டாய். அதனுடைய கூலி உனக்குக் கிடைத்துவிடும். அதனை எவன் (மோசடி செய்து) மாற்றுகிறானோ அவன் மீதுதான் அதனுடைய பாவம் இருக்கிறது” என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் 11945
தன்னுடைய செல்வத்தையே பிறருக்கு வாரி வழங்குபவன் ஒரு போதும் அடுத்தவரின் செல்வத்தை அநியாயமான முறையில் எடுப்பதற்கு ஆசைப்பட மாட்டான். அவனுடைய உள்ளம் ஸகாத்தின் மூலம் பரிசுத்தமாகி விடும்.

செல்வத்தைப் பரிசுத்தப்படுத்தும்
ஸகாத் உள்ளத்தை மட்டும் பரிசுத்தப்படுத்துவதில்லை. அது நம்முடைய செல்வத்தையும் சேர்த்தே பரிசுத்தப்படுத்துகிறது. நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றி விடும்போது அந்தச் செல்வம் பரிசுத்தமாகி விடுகிறது. அதன் பிறகு அதனை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது.
உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை” என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1417

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள் தாம்” அறிவிப்பவர்: அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1945

நாம் நம்முடைய செல்வத்திற்கு ஸகாத்தை வழங்கி விடுவதன் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமானதாகி விடுகின்றது. ஸகாத்தின் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமாவதன் காரணத்தினாலேயே நபியவர்கள் ஸகாத்தினை செல்வத்தின் அழுக்குகள் என்று குறிப்பிடுகிறார்கள். மகத்தான கூலி

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
அல் குர்ஆன் 4:162

ஜகாத் தொடர்பாக இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன.  அவைகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்