வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?


 வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?


உதவ வேண்டும்.


வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.


மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.


இது போல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.


“நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் ; அஸ்வத் பின் யஸீத் (ரஹ்).


நூல்: புகாரி 5363


வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.


நூல் : அஹ்மத் 23756, 24176, 25039


முஸ்லிம்கள் இதையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.


கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா?


போதுமானதை நியாயமான முறையில் மனைவி மக்கள் எடுக்கலாம்.


ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான்.


எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குடும்பத் தேவைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடம்பரச் செலவுக்காகவோ அல்லது வேறு வகைகளுக்காகவோ எடுக்கக் கூடாது.



முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல்: புகாரி 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7170


இந்த ஹதீஸில், ‘நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்தைக் கவனிக்கும் போது, குடும்பச் செலவு அல்லாத இதர தேவைகளுக்காக எடுப்பது கூடாது என்பதை அறியலாம்.


ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்?


யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு இஸ்லாம் கூறவில்லை. வெளிப்படையான செயல்களை வைத்தும் தெரிந்தவர்களிடம் விசாரித்தும் ஒருவரை மனதளவில் நம்பலாம். என்றாலும் நம்பிக்கை இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அந்த அளவு எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் காட்டும் வழியாகும்.


அதாவது மனதில் தான் நம்பிக்கையை வைத்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாதது போல் தான் அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.


கடன் கொடுத்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. என்மீது நம்பிக்கையில்லையா என்று யாரும் கேட்கக் கூடாது.


எழுதும் வாய்ப்பு இல்லாவிட்டால் அடைமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வெண்டும் எனவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைமானம் குறித்து பல வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். ஒருவர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் அடைமானம் என்ற தலைப்புக்கே வேலையில்லை.


யூதரிடம் கடன் வாங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அடைமானமாகக் கொடுத்தார்கள். என் மீது நம்பிக்கையில்லையா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை.


ஒரு பொருள் தனக்குரியது என்று வாதிடுபவன் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்து உள்ளனர். யாரையும் நம்பி ஏமாந்து விடாமல் ஆதாரங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.


பல்வேறு விஷயங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. எழுதி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதே வாய் வார்த்தையில் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்குத் தான்.


அதுபோல் பல விஷயங்களுக்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது. முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருந்தால் சாட்சிகளுக்கு வேலை இல்லை.


தீர விசாரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுவதும் இதே காரணத்துக்காகத் தான்.


விபச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்த நான்கு சாட்சிகள் வேண்டும் என்பதும் இதே காரணத்துக்காகத் தான்.


இஸ்லாம் கூறும் இந்த அறிவுரையை உலக மக்கள் சரியாகக் கடைப்பிடித்தால் மோசடிப்புகார்களுக்கு வேலையில்லை. ஏமாறத் தேவையில்லை.


இவர் தொழுகையாளி என்பதற்காக நம்பி அதைக் கொடுத்தேன். இவர் தாடி வைத்துள்ளார் என்பதற்காக இதைக் கொடுத்தேன்; இவர் தவ்ஹீத்வாதி என்று நம்பி மோசம் போய்விட்டேன்; இவர் சொந்தக்காரர் என்பதால் நம்பினேன் ஏமாற்றிவிட்டான் என்றெல்லாம் ஏமாளிகள் கூட்டம் பெருகுவதற்கு காரணம் இஸ்லாம் கூறும் இந்த போதனையைப் புறக்கணித்தது தான்.


எவரையும் நம்பி ஏமாறக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்


கருத்துகள்