காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை !


 காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை !


ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.


அல்குர்ஆன் 17:15


ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அருள்மறையாம் திருமறையில், ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்று குறிப்பிடுகிறான்.


ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது என அல்லாஹ் கூறுகின்றான்.


உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொரு வன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.


பழி, பாவம் என்று குறிப்பிட்ட வுடன் பாரதூரமான காரியத்தை ஒருவன் செய்து விட்டு அந்தப் பழியை மற்றொருவன் மீது போட்டுவிடுவது என எண்ணிவிடக் கூடாது. நாம் இங்கே கூற வருவது ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக அவனைச் சார்ந்தவர்களை ஒட்டு மொத்த சமூகமும் இழிவாகக் கருதுவதையும், விமர்சிப்பதையும் தான். இச்செயல் பிற மதத்தினரிடம் இருந்தால் அவர்களுக்கென்று எந்த வரையறையும் கிடையாது என விட்டுவிடலாம்.


ஆனால் அறியாமைக் கால பழக்கவழக்கங்கள் அனைத்தையும் என் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்து விட்டேன். உங்களில் ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் என எல்லா வகையிலும் மனித நேயத்தைப் போதித்த இஸ்லாமிய சமுதாயத்தாரிடம் இந்நிலை குடிகொண்டிருப்பது தான் நம்மை கலக்கம் அடையச்செய்கிறது.


ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் மது அருந்துகிறார்; அல்லது கொலை செய்திருக்கிறார்; அல்லது திருடியிருக்கிறார். அவரது இழி செயலுக்காக அவரைக் குறை கூறுவதும், குற்றம் பிடிப்பதும் நியாயமானது தான்.


ஆனால் இதற்காக அவரது பெற்றோர்களுக்கு, மனைவி, மக்களுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு இந்தப் பாதக செயல்களை அடை மொழியாக்கி குடிகாரனின் மகன், குடிகாரனின் மனைவி என்று அவர்களை அடையாளம் காட்டுகிறது இந்த சமூகம். இது எவ்விதத்தில் நியாயம்?


மது அருந்துவது தவறு என்று தெரிந்தும் அத்தவறைச் செய்யும் தகப்பனுக்கு எவ்வித இழுக்கோ, பாதிப்போ இருப்பதில்லை. ஆனால் அவனுக்கு பிறந்த ஒரே பாவத்திற்காக பழியைச் சுமந்து கொண்டு அன்றாடம் பாதிக்கப்படுவதும், பரிதவிப்பதும் அவரின் குடும்பத்தினர் தான். தவறே செய்யாமல் இங்கே இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.


எந்த ஒரு தகப்பனோ, அல்லது தாயோ தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும், தப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. தன் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விடக்கூடாது என்றே ஒவ்வொரு பெற்றோரும் விரும்பு கின்றனர். ஆனால் சமுதாயமோ பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்று வாய்க்கு வந்த படி பேசி விடுகின்றனர்.


தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை, அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து விட்டான், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயத் தானே செய்யும் என்பன போன்ற பழமொழிகளை ஒரு மனிதன் நன்மை செய்யும் போது பயன்படுத்துவதை விடவும் தவறு செய்யும் போது அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.


இதோ நபிகளார் கூறுவதைக் கவனியுங்கள்



நபி (ஸல்) அவர்கள் கூறு கிறார்கள்: அறிந்து கொள்ளுங்கள் ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரைத் தவிர வேறு யாருக்கும் தண்டனை தரக்கூடாது. பிள்ளை செய்த குற்றத்திற்காக பெற்றோருக்கு தண்டனை தரக் கூடாது. பெற்றோர் செய்த குற்றத்திற்காக பிள்ளைக்கு தண்டனை தரக்கூடாது.


அறிவிப்பவர்: அம்ரு இப்னு அல்அஹ்வஸ் (ரலி)


நூல்: திர்மிதி 2085


மேலும் நபி (ஸல்) அவர்கள் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்றும் நமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.


புனிதமானவை



(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டு வார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம். நபி (ஸல்) அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமா னதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்” என்றார்கள்.


அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


நூல்: புகாரி 67


அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட மானத்தில் ஒவ்வொருவரும் சர்வ சாதாரணமாக சரமாரியாக விளையாடிக் கொண்டிருக்கின்றோம். தவறுகள் அரங்கேறி காலங்கள் கரையோடி னாலும் அவர்களின் அந்தக் கருமங்கள் மட்டும் தலைமுறையையும் தாண்டி ஆறாத வடுவாக இருந்து கொண்டேயிருக்கின்றது. இவர்களின் இவ்விளையாட்டிலே மழலை மொழி மாறாத, மனித முகம் அறியாத குழந்தைகள் கூட தப்பமுடியவில்லை.


தாய் தந்தையர் சூட்டிய பெயரில் அழைக்கப்படுகிறார்களோ இல்லையோ பெரியோர் செய்த தவறை சுட்டிக் காட்டி அதை புனைப் பெயராக்கி அப்பெயரிலேயே அவர்களை அழைத்து அவமானத்தை ஏற்படுத்துபவர்களே ஏராளம். இது புனைப்பெயரிட்டு புண்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இவர்களின் மனிதாபிமானமற்ற மனித நேயம் இன்னும் தொடர்கின்றது.


புறம் பேசாதீர்கள்!


நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


அல்குர்ஆன் 49:12


நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.


அல்குர்ஆன் 49:11


சந்தேகம் வேண்டாம்



إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلاَ تَحَسَّسُوا وَلاَ تَجَسَّسُوا وَلاَ تَنَافَسُوا وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது, பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் 5006


அவர்களது தவறான எண்ணம் மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதால் இறைவனே அதைப் பாவமானது என்று கூறுகின்றான். முன்னோர்கள் செய்யும் தவறுக்காக தவறே செய்யாத நாங்கள் குற்றம் பிடிக்கப்பட வேண்டுமா? காலமெல்லாம் அவமானப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டுமா? எனது தகுதிக்கும், நற்பண்புகளுக்கும் எந்த மதிப்பும் இல்லையா? என்ற பாதிக்கப்பட்டவனின் கேள்விக்கும், குமுறலுக்கும் நியாயமான எவ்வித பதிலையும் தருவதில்லை இந்தச் சமூகம்.


இதர விஷயத்தில் வியாக்கியானம் பேசுபவர்களும் கூட இவ்விஷயத்தில் வாய் மூடி மௌனமாகின்றனர். இது தான் எதார்த்தம். இந்நிலையை மாற்ற முடியாது என்றே கருதுகின்றனர்.


ஒரு மனிதன் அவனது குடும்பத்தினரால் தான் அடையாளம் காட்டப்படுகின்றான். பெற்றோர்களின் கர்மம் பிள்ளைகளையே சாரும் என்பதைப் போன்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகளைக் கொண்டே ஒரு மனிதனின் கடந்த கால, நிகழ்கால, வருங்கால, நிலை தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே இயற்கையின் நியதி என்று கூறி மறைமுகமாகவும், வெளிப்படை யாகவும் அவர்களின் அநீதிக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.


இவ்வுலகத்தில் மாற்றவே முடியாது என்ற எந்தச் செயலும் இல்லை. மாற்றுவதற்கு (தன்னை திருத்திக் கொள்வதற்கு) மனமே இல்லாத போது மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இதையே இறைவனும் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.


நாம் தான் மாற முயற்சி செய்ய வேண்டும்


தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.


அல்குர்ஆன் 13:11


இவ்வாறு சொல்பவர்களிடத்தில் நாம் கேட்கின்றோம். இதே சூழ்நிலை அவர்களின் குடும்பத்திலும் ஏற்பட்டு அதையே அவர்களுக்கு அடையாளமாக்கி குடிகாரனின் மகன் என்ற முத்திரையைக் குத்தும் போது இது தான் யதார்த்தம், இயற்கை நியதி என்று கூறினால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?


இத்தருணத்தில் தான், தாம் இது போன்று மற்றவர்களைப் புண்படுத்திய விஷயங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவனின் மன உளைச்சலை பிற மனிதர்கள் உணர்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தான் பாதிக்கப்பட்டால் தான் பிறரது வலியை உணரமுடியும் என்றால் நாம் மனிதப் பிறவிகளாக பிறந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். பகுத்தறிவை எது எதற்கோ பயன்படுத்தும் மனித சமுதாயம் தான் பாதிக்கப்படும் போது தான் பிற மனிதனின் வலியை உணர்கின்றது என்றால் இது எவ்வளவு பெரிய அவமானம், வேதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இச்செயல்களுக்காக சமுதாயத்தின் ஒர் அங்கமாக இருக்கின்ற நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். எல்லோருமே நல்ல காரியங்களை வரவேற்கின்றோம். ஆனால் பிற மனிதர்கள் தான் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமே ஒழிய அதை நம்மிடமிருந்து ஆரம்பிப்பதில்லை.


மனிதர்களாக படைக்கப்பட்ட அனைவருமே தவறு செய்பவர்கள் தான். இதற்கு சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொன்ன இறைத்தூதர்கள் மற்றும் சத்திய வழி நடந்த ஸஹாபாக்களும் விதிவிலக்கல்ல! தன்னைத் தானே பரிசுத்தவான் என்று சொல்லிக் கொள்ள யாருக்கும் தகுதியில்லை. தவறு செய்வது மனித குணம். அதை மன்னிப்பது மனிதாபிமானம். மன்னித்து அவர்களுக்கு நல்வழிகாட்டி அவர்களுக்கு நன்மைகள் புரிவது மார்க்க அடிப்படையில் சிறந்த பண்புகள். ஒருவரை நீங்கள் மன்னித்து அவரது குறையை மறைத்தால் காலத்திற்கும் உங்களை அவர்கள் மறக்கமாட்டார்கள். மனிதர்களின் உள்ளங்களில் மிக உயர்ந்த அந்தஸ்தை உங்களுக்கு ஏற்படுத்துகின்ற குறைகளை மறைத்தல் என்ற குணம் உங்களை மக்களுக்கு மத்தியில் சிறந்தவராக ஆக்குகின்றது.


முஸ்லிமின் குறைகளை மறை



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டுவிடவும் மாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: முஸ்லிம் 5036


மார்க்கம் இவ்வாறு கூற நாமோ பெற்றோர்கள் செய்த குற்றத்திற்காகப் பிள்ளைகளையும், பிள்ளைகள் செய்த குற்றத்திற்காகப் பெற்றோர்களையும், முந்தைய தலைமுறையினர் செய்த தவறுக்காகப் பிந்தைய தலைமுறை யினரையும் அவமானப்படுத்துகின்றோம். இது அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் அநீதி என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவன் இறைவனிடம் நான் இச்சமூகத்ததால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று முறையிடும் போது இறைவன் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கின்றான்.



அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி 2448


திவாலாகிப் போனவன்


இந்தப் பாதக செயல்களின் தாக்கம் இம்மையோடு மட்டும் நின்று விடாமல் மறுமை வரையும் தொடர்கின்றது


 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்த வரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறை கேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப் படும். அவருடைய நன்மைகளி லிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப் படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் 5037


பாதிக்கப்பட்டவன் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும், மனவேதனைக்கும், இவ்வுலகில் அவனுக்கு ஏற்பட்ட அவல நிலைக்கும் பகரமாக மறுமையிலே அவன் கணக்குத் தீர்த்துக் கொள்வான். எனவே மறுமையில் பாதிக்கப் படுவதிலிருந்து விலகி, பாதிப்பை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.


உம்மு ராஷித், மேலப்பாளையம்.


கருத்துகள்