நோன்பின் நோக்கம்
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டுமென்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறு இல்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அவறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்களேயானாலும் நோன்பு நோற்காமலே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்பது தான் நோன்பின் நோக்கம் என்பர் வேறு சிலர் அதுவும் தவறு.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்திற்;;காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில் நீங்கள் இறையச்சமுடையோராவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். ஏற்படவேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவை பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து கொள்கிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி எற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப்போவது இல்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கா விட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலேயே நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபடும் பொழுது இறைவனுக்குப் பயந்து ஹலாலானதையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹுரைரா(ரலி) : ஆபுதாவுத்
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி), ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பு வைத்துக் கொண்டு குளிக்கலாம்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ
உணவுகளை ருசி பார்ப்பது
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.
சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.
என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!
பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி
இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.
நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.
நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.
குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்லை.
நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!