உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

 




உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

 


 


 


 

 

بسم الله الرحمن الرحيم

 

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

 

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

 

அல்லாஹ் கூறுகின்றான் :

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

 

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

 

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

 

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் நம்மைப் படைத்து பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர்  மீதும் அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!

 

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறும், அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணும்படியும், அல்லாஹ் தடுத்த காரியங்களை விட்டு விலகி வாழும் படியும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பற்றி பிடிக்குமாறு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

 

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அல்லாஹ்வுடைய அச்சத்தால் அல்லாஹ்வுடைய பயத்தால் நன்மைகளை அதிகம் செய்யக்கூடிய, பாவங்களை விட்டு விலகக்கூடிய, சொர்க்கத்தின் பக்கம் விரையக் கூடிய, நரகத்தின் பக்கம் நம்மை கொண்டு போய் சேர்க்கக் கூடிய சொல் செயல் கொள்கைகளை விட்டும் விலகி வாழ்வதற்கு அருள் புரிவானாக! ஆமீன்.

 

தொடர்ந்து உள்ளங்களை மென்மையாக்க கூடிய உள்ளங்களை உருக்க கூடிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செய்திகள் என்ற தலைப்பில் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்து இருக்கக்கூடிய ஹதீஸ்கள் பலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

 

அந்தத் தொடரில் தான் இன்றும் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த தலைப்பின் கீழ் தொகுத்து இருக்கக்கூடிய சில பாடங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுபோன்று அவர்களுக்கு முந்திய இறைதூதர்கள், இவர்களுடைய இறைத்தூதுவத்தின் பணியின் அடிப்படை அம்சத்தை நீங்கள் பார்த்தால், மக்களை அல்லாஹ்வை வணங்குவதற்காக அழைப்பார்கள். 

 

அல்லாஹ்வின் சட்டங்களை பேணுமாறும், அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி கொள்ளுமாறும், அவர்களுக்கு அழைப்பு கொடுத்து, சொர்க்கத்தை மக்களுக்கு ஆசை ஊட்டுவார்கள். நரகத்தை பற்றிய அச்சத்தை கொடுப்பார்கள்.

 

காரணம், இந்த உலகத்தில் ஒரு மனிதன் எவ்வளவு சுகத்தை அனுபவித்தாலும் எவ்வளவு ஒரு நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் கண்டிப்பாக அவன் மரணித்தே ஆகவேண்டும். இந்த உலகம் யாருக்கும் நீடித்து இருந்ததில்லை. யாரும் இந்த உலகத்தில் நீடித்திருக்க போவதுமில்லை.

 

இவர் வாழும் போதே இவருடைய உலகம் இவரை விட்டு இவருடைய கைவிட்டுப் பறிபோய்விடும். ஏனென்றால், ஒரு நேரத்தில் கண்டிப்பாக இவர் இந்த உலகத்தை விட்டுப் போய் விடுவார். இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடந்தே தீரும்.

 

காலையில் செல்வந்தர்களாக இருந்த எத்தனையோ நபர்கள், மாலையில் ஏழைகளாக கையேந்த கூடியவர்களாக மாறிக் கொண்டிருக்கிற நிலையை பார்க்கிறோம்.

 

அல்லாஹு தஆலா அவனுடைய பிடியில் ஒரு சிறு துளியை இந்த உலகத்தில் காட்டினால் இந்த உலகமே சின்னாபின்னாமாகி விடும்.

 

அல்லாஹ் கூறுகிறான்:

 

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

 

நிச்சயமாக நபியே! உங்களுடைய ரப்புடைய பிடி மிகக் கடுமையானது. (அல்குர்ஆன் 85 : 12)

 

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

 

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ

 

அநியாயம் செய்கின்ற ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதும் துன்புறுத்தக் கூடியதும் ஆகும். (அல்குர்ஆன் 11 : 102)

 

தொடர்ந்து இந்த உலகத்தின் பல பாகங்களில் நடந்து வருகின்ற உலக அழிவுகளை பாருங்கள். இரவில் கொண்டாட்டங்களிலும் கேலிக்கூத்துகளிலும் இருந்த மக்கள் காலையில் பிணங்களாக மிதக்கிறார்கள்.

 

கோடிக்கணக்கான டாலர்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்த அவர்கள், அடுத்து ஒருநேர உணவிற்கு ஏதாவது கிடைக்குமா? என்று தெருக்களில் அலைய கூடிய நிலையை பார்க்கிறோம். 

 

அல்லாஹ் கூறுகிறான்:

 

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا 

 

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65 : 8)

 

வட்டி, விபச்சாரம், அதுபோன்று ஏழைகளுக்கு ஒரு நீதி, செல்வந்தர்களுக்கு ஒரு நீதி, ஜகாத் கொடுக்காமல் இருப்பது, இன்னும் இதுபோன்ற கொடுமையான பாவங்கள் சமுதாயத்தில் பரவி விட்டால் அல்லாஹ்வுடைய வேதனையின் நாள்களை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளோடு நின்று விடுவதால் நம்முடைய கடமை முடிந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.

 

இதற்கு மேலாக உலக சமுதாய மக்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிக்கை கூடிய நேரத்தில் நாம் இருக்கிறோம்.

 

இன்று, எந்த பாவங்களை எந்த அசிங்கங்களை அல்லாஹ்வுடைய மார்க்கம் வெறுக்கிறதோ அல்லாஹ் படைத்த நேரிய இயற்கையை வெறுக்கிறதோ அதையெல்லாம் சட்டம் என்ற பெயரில் தீர்ப்பு என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் அவற்றைக் கொண்டு வருவதற்காக மக்கள் அவற்றில் வீழ்வதற்காக அரசாங்கமே துணை போய்க் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், முஸ்லிமாகிய நம்முடைய கடமை மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

 

நாம் யாரை சந்திக்கிறோமோ யாரைப் பார்க்கிறோமோ அவர்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை பற்றி அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பற்றி மிக மிக முக்கியமான அவசியமான நேரத்தில் நாம் இருக்கிறோம்.

 

நபிமார்களின் அழைப்பை பற்றி உங்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். ஒரு நபியினுடைய பணி மக்களை அவர்களுக்கு அல்லாஹ் படைத்து வைத்திருக்கக் கூடிய சொர்க்கத்தின் பக்கம் அழைப்பது. சொர்க்கத்தை அவர்களுக்கு நினைவூட்டுவது. நரகத்திலிருந்து எச்சரிக்கை செய்வது.

 

ஒரு சமயம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிற்கு வருகிறார்கள். அப்பொழுது அங்கே சில தோழர்கள் பேசி சிரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

(பேசி சிரிப்பது ஒரு தப்பான விஷயம் அல்ல. அது ஒரு அனுமதிக்கப்பட்ட விஷயம் தான். ஆனால், இந்த அனுமதிக்கப்பட்ட விஷயம் என்பதற்காக மனிதன் அதிலேயே மூழ்கிவிட்டால்? சிலரை நீங்கள் பார்க்கலாம்; எப்போது பார்த்தாலும் அரட்டை, சிரிப்பு, தமாஷ், கேலி. இப்படியாகவே அவர்களுடைய இருபத்தி நான்கு மணி நேரமும் கழிந்து கொண்டே இருக்கும்.

 

முற்றிலுமாக மறுமையை மறந்து அல்லாஹ்வின் தண்டனை நரகத்தை மறந்து இந்த உலக இன்பத்திலேயே மூழ்கி இருக்கக்கூடிய பலரையும் பார்க்கலாம். இது ஆபத்தானது.

 

சில நேரங்களில் மனைவி மக்களோடு அல்லது நண்பர்களோடு தகுந்தார் போல் சில குறிப்பிட்ட நேரம் பேசுவது சிரிப்பது சந்தோஷமாக இருப்பது தவறல்ல. சில நேரங்களில் வரவேற்க வேண்டிய ஒன்று. 

 

அதற்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமும் மூட்டியிருக்கின்றார்கள்.

 

அல்லாஹ்வுடைய தூதரே அழகான முறையில் தமாஷும் செய்திருக்கின்றார்கள். ஆனால், அதையே ஒரு பிழைப்பாக ஆக்கி கொண்டு அதையே வாழ்க்கையாக ஆக்கி கொண்டு திரிவதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்தார்கள். 

 

காரணம், கண்டிப்பாக ஒரு மனிதன் இந்த நிலையில் இருந்தால் எப்பொழுதும் வீண் பேச்சுக்கள் வெட்டி பேச்சுக்கள் பயனற்ற பேச்சுக்கள் கேலிக்கைகள் சிரிப்புகளில் இருந்தால் கண்டிப்பாக அவருடைய உள்ளம் இறுகிவிடும். அவருடைய உள்ளம் செத்துவிடும். அவருடைய உள்ளத்தில் உபதேசங்கள் பலன் தராது. அல்லாஹ்வுடைய அச்சம் எடுபட்டு போய்விடும். ஹராமின் மீதுண்டான பயம் எடுபட்டு போய்விடும்.)

 

ஹதீஸின் தொடர் : ஆகவேதான், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வருகிறார்கள். அங்கே சில தோழர்கள் பேசி, சிரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்தது மஸ்ஜிதில். மஸ்ஜித் என்பது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக இபாதத்திற்கான ஒரு புனிதமான கண்ணியமான இடம்.

 

அந்த இடத்தில் வரும் போது தக்வாவோடு வரவேண்டும். அல்லாஹ் அப்படித்தான் சொல்கின்றான்:

 

நீங்கள் மஸ்ஜிதிற்குள் வரும் போது பயந்தவர்களாக தான் வர வேண்டும். அல்லாஹ்வுடைய அச்சத்தாலும் அன்பாலும் உள்ளம் நடுங்கியவர்களாக வாருங்கள். (அல்குர்ஆன் 2 : 114) 

 

அப்பொழுது தான் தொழுகையை மன ஒருமையோடு உள்ளச்சத்தோடு தொழ முடியும்.

 

பள்ளிக்குள் இருந்து கொண்டு கேலிக்கையாக தமாஷாக சிலர் பேசிக்கொண்டு இருந்தார்கள். இது எந்த அளவிற்கு உள்ளத்தை மறதியில் ஆழ்த்தக்கூடிய மனிதனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சத்தை எடுக்கக்கூடிய செயல் என்பதை மிக தூரநோக்கோடு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனித்தார்கள்.

 

இன்று, காஅபாவில் ஹஜ்ஜிக்கு சென்றால் நீங்கள் அங்கு பார்க்கலாம்; அல்லாஹ்வுடைய வீட்டின் புனிதத்தையே கெடுக்கும் படியாக அந்த ஹரமுடை கண்ணியத்தை குறைக்கும் படியாக பலர் நடந்து கொள்கின்றார்கள்.

 

சாதாரண மஸ்ஜிதில் பேசி சிரித்ததற்கே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி கோபப்பட்டார்கள் என்று பார்க்க போகிறோம். 

 

இன்று அல்லாஹ்வுடைய வீட்டில் காபத்துல்லாஹ்விலேயே அவ்வளவு கேலி கிண்டல்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் பெண்களோடு ஏதோ பூங்காக்களில் இருப்பது போன்று கணவன் மனைவி நடந்து கொள்வது. 

 

இதெல்லாம் அல்லாஹ்வுடைய வீட்டின் புனிதத்தை பாழாக்கக்கூடிய ரப்புடைய வீட்டின் மகத்துவத்தை குழைக்கக்கூடிய செயல் என்பதை கவனிக்க வேண்டும்.

 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி சிரித்து பேசிக் கொண்ட ஸஹாபாக்களைப் பார்த்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார்கள்:

 

"لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا"

 

நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு சிரிப்பு குறைவாக வந்திருக்கும். அதிகமாக அழுதிருப்பீர்கள்.

 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 113.

 

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள்:

 

(ஃபத்ஹுல் பாரி - இப்னு ஹஜர்)

 

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் தஅலா இல்முல் யஃகீனையும் கொடுத்திருந்தான். ஐய்னுல் யஃகீனையும் கொடுத்திருந்தான்.

 

அதாவது, அல்லாஹு தஅலா சொர்க்கத்தை பற்றி என்ன விஷயங்களை சொன்னானோ, மேலும் நரகத்தை பற்றி என்ன விஷயங்களை ரஸூலுல்லாஹ்விற்கு கூறியிருந்தானோ, மேலும் நாளை மறுமையுடைய மஹ்ஷருடைய நிலையைப் பற்றி எதையெல்லாம் அல்லாஹு தஅலா நபிக்கு கூறியிருந்தானோ, கப்ருடைய வாழ்க்கையைப் பற்றி மரணத்தருவாயை பற்றி எதையெல்லாம் அல்லாஹு தஅலா தனது நபிக்கு கூறியிருந்தானோ, அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முழுமையாக நம்பியிருந்தார்கள். 

 

இல்முல் யகீன் என்று எதை நாம் குர்ஆனில் படிக்கிறோமோ, எதை நாம் ஹதீஸில் படிக்கிறோமோ, நாம் கண்கூடாக பார்ப்பதைவிட அதன் மீது நமக்கு நம்பிக்கை வராத வரை நாம் முஃமினாக ஆக முடியாது. 

 

நடுப்பகலில் சூரியனை வானத்தில் பார்ப்பதை போல் பௌர்ணமி இரவில் சந்திரனை வானத்தில் பார்ப்பது போன்று அதைவிட மிகத்தெளிவாக உறுதியாக அல்லாஹ்வுடைய தூதரின் கூற்றின் மீதும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஹதீஸுகள் மீதும் ஒரு முஃமினுக்கு ஈமான் வர வேண்டும். யகீன் வர வேண்டும்.

 

என்னுடைய நபி எதை சொன்னார்களோ, கூறினார்களோ, எல்லாம் உண்மை. அது தான் உண்மை என்ற அந்த நம்பிக்கை வரவேண்டும். அதைத்தான் இல்முல் யகீன் என்று சொல்வார்கள்.

 

அறிந்ததால் அதைப் படித்தால் ஏற்படக்கூடிய உறுதியான நம்பிக்கை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கும் மேலாக அல்லாஹ்வுடைய செய்தியை அவர்கள் நம்பினார்கள். இதற்கும் மேலாக அல்லாஹு தஅலா அவர்களுக்கு ஐய்னுல் யஃகீனையும் கொடுத்தான். 

 

அவர்களை மிஃராஜிற்கு அழைத்து அந்த உண்மைகளை அல்லாஹு தஅலா அவர்களுக்கு கண்கூடாக காட்டினான். இந்த இரண்டும் அவர்களுக்கு ஒன்று சேர்ந்து இருந்ததால் அவர்களுடைய அச்சம் எப்போழுதும் அதிகமாகவே இருந்தது.

 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சில தோழர்கள் சில முடிவு எடுத்தார்கள். அந்த முடிவை திருத்தி நபியவர்கள் அந்த தோழர்களுக்கு சொன்னார்கள். நான் உங்களில் அதிகம் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கின்றேன். நான் அதிகமாக அல்லாஹ்வை பயந்தவனாக இருக்கிறேன் என்று.

 

நூல் : புகாரி, எண் : 19.

 

யாருக்கு இல்முல் யகீனும் ஐய்னுல் யகீனும் ஒன்று சேர்ந்ததோ அவர்களுடைய பயம் சாதாரண மனிதர்களுடைய பயத்தை போன்று கிடையாது. ரஸூலுல்லாஹ்வின் வணக்க வழிபாட்டைப் பாருங்கள். நம்மால் அப்படி வாழ்க்கையில் ஒரு நாளாவது செய்ய முடியுமா?

 

கால்வீங்க வணங்குகிறார்கள். மனைவி கேட்கிறார்; அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ் தான் உங்களை மன்னித்து விட்டானே!

 

நூல் : புகாரி, எண் : 106, 445.

 

நமக்கு ஸஹாபாக்களில் ஒரு சிறிய ஸஹாபிக்கு சொல்லியிருக்கக்கூடிய ஒரு நற்செய்தி நமக்கு கிடைத்திருந்தால் கூட, நாமெல்லாம் அமல்களையே விட்டிருப்போம். 

 

அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! ஏனென்றால் அந்த அளவிற்கு பலவீனமான உள்ளம் உடையவர்களாக இருக்கின்றோம். 

 

ஆனால், அந்த தோழர்களுக்கோ, எந்த அளவு அவர்களுக்கு நற்செய்தி கூறப்பட்டதோ, அது அவர்களுக்கு அச்சத்தையும் தக்வாவையும் அதிகப்படுத்தியது.

 

பத்ரு தோழர்களை பார்த்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : 

 

قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ

 

அல்லாஹ் உங்களை கவனித்தான். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி கூறுகின்றார்கள்.

 

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3007, 3081.

 

அந்த ஸஹாபாக்களுக்கு இந்த கூற்று அலட்சியத்தை கொடுக்கவில்லை. ஆதரவை கொடுத்து அமல்களை விடத் தூண்டவில்லை. மேலும் மேலும் அல்லாஹ்வை பயந்ததை பார்க்கின்றோம்.

 

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! உங்களுடைய கால் வீங்கி விட்டதே? அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்தானே! 

 

உடனே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 

 

«أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا»

 

ஆயிஷாவே! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? 

 

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி , எண் : 106, 445, 4836.

 

எப்படி பட்ட ஈமான் என்று உணர்ந்து பாருங்கள்.

 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழர்களுக்கு உணர்த்தினார்கள். நீங்கள் சிரிக்கிறீர்கள். உங்களது சிரிப்பு அதிகமாக இருப்பதைப் பார்கிறேன்.

 

ஆனால், நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால் அழுவீர்கள். அதிகமாக அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள்.

 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 113.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதை அறிந்தார்களோ, அதை நமக்கும் அறிவித்தார்கள். சகராத்துடைய ஒரு வேதனையை மனிதன் நினைத்து பார்த்தால் போதும். எந்த நேரத்தில் எந்த நிலையில் எனக்கு மவுத் வரும் என்பதாக. எத்தனை பேர் இஷா தொழாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மவுத் வந்து விடுகிறது.

 

சுப்ஹு தொழாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மவுத். கேலிக்கைகளில் இருக்கும் போது அவர்களுக்கு மவுத். அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறி இருக்கும் போது அவர்களுக்கு மவுத். 

 

சென்ற காலங்களில் செய்த பாவத்திற்காக அவர்கள் தவ்பா செய்யாமல் இருக்கும் போது அவர்களுக்கு மவுத். இன்னும் செய்து கொண்டிருக்கக்கூடிய பாவங்களை விட்டு விலகாமல் இருக்கின்றார்களே, இந்த நிலையில் ஒரு மனிதனுக்கு மவுத் வந்தால் என்ன ஆகும்?!

 

இதை ஒருவன் சிந்தித்துப் பார்த்தால், முன்கர் நகீர் உடைய அந்த தோற்றத்தையும் அவர்களுடைய கேள்வியையும் நினைத்துப் பார்த்தால், இதற்கும் மேலாக நாளை மஹ்ஷரில் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் போது, அந்த நிலைகளில் ஒருசில நிலையை நினைத்து பார்த்தால் உள்ளங்கள் நடுங்க வேண்டும்.

 

இமாம் இப்னு ஹஜர் ரஹுமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லும் போது இமாம் ஹஸன் பஸரி ரஹுமஹுல்லாஹ் அவர்களின் ஒரு கூற்றை பதிவு செய்கிறார்கள்.

 

யார் கண்டிப்பாக நான் மவ்த்தை சந்தித்தே ஆக வேண்டும், மவ்த் எனக்கு வந்தே தீரும், நான் மவ்த்திடத்தில் சென்றே ஆக வேண்டும் என்றும், மறுமை நாள் எனக்கு வாக்களிக்கப்பட்ட இடம் என்றும், அல்லாஹ்விற்கு முன்னால் நான் நின்றே ஆக வேண்டும் என்பதை யார் உறுதியாக அறிந்து கொண்டானோ, அவன் இந்த உலகத்தில் நீண்ட நேரம் கவலையில் இருப்பது தான் சரியானது.

 

மூன்று விஷயங்களை சொன்னார்கள் : 1. மவ்த். கண்டிப்பாக அது வந்தே ஆக வேண்டும்.

 

2. கியாமத். அது எனக்கு வாக்களிக்கப்பட்ட நேரம், எனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் அது.

 

3. அடுத்து மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ்விற்கு முன்னால் அர்ஷுடைய அதிபதிக்கு முன்னால் அகிலங்களை படைத்து பரிபாலிக்கக்கூடிய கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் மகிமைக்கும் தகுதியான அந்த ரப்பு ஒருவனுக்கு முன்னால் நிற்க வேண்டுமே! என்று நினைத்தால் போதும். அவருடைய கவலைகள் தான் அதிகமாக இருக்கும். அவருடைய மகிழ்ச்சி குறைந்து விடும் என்பதாகும்.

 

அடுத்து, எந்த சொர்க்க நரகத்தைப் பற்றி நாம் அறிய வேண்டுமோ? அந்த சொர்க்கம் நரகம் என்பது நாம் நினைத்து கொண்டிருப்பதை போல அல்ல.

 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அது குறித்த மிகப்பெரிய எச்சரிக்கையை நமக்கு கூறினார்கள்.

 

அதை அடுத்ததாக புகாரி ரஹுமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

 

அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

 

«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»

 

நரகம் அது ஆசைகளால் சூழப்பட்டுள்ளது. சொர்க்கம் அது சிரமங்களால் சூழப்பட்டுள்ளது. 

 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6006.

 

இந்த ஹதீஸிற்கு விளக்கமாக இன்னொரு ஹதீஸை நாம் பார்க்கின்றோம். இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்கிறார்கள்:

 

அல்லாஹ் சொர்க்கத்தை நரகத்தை படைத்த போது முதலாவதாக ஜிப்ரீலை அனுப்புகின்றான். நீங்கள் சொர்க்கத்தை சென்று பார்த்து வாருங்கள் என்று. ஜிப்ரீல் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்.

 

ரப்பு இடத்தில் கூறுகின்றார்; ரப்பே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! இந்த சொர்க்கத்தை பற்றி யார் கேள்வி படுவாரோ, அவர் அதில் நுழைய வேண்டும் என்று தீராத ஆசையில் இருப்பார். 

 

பிறகு, அல்லாஹு தஅலா அந்த சொர்க்கத்தை சூழ வைத்தான். மனதிற்கு பிடிக்காத சட்டங்களை கொண்டு சில சிரமங்களை கொண்டு அல்லாஹு தஅலா அந்த சொர்க்கத்தை மூடினான்.

 

பிறகு ஜிப்ரீலிடம் கூறினான்; நீங்கள் சென்று பார்த்து வாருங்கள் என்று. அதைப் பார்த்து வந்த ஜிப்ரீல் கூறுகின்றார். அல்லாஹ்! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! எனக்கு பயமாக இருக்கின்றது. அதில் யாரும் செல்ல மாட்டார்களோ என்று. 

 

அல்லாஹு தஅலா பிறகு ஜிப்ரீலிடம் கூறுகின்றான். ஜிப்ரீல்! நரகத்தை சென்று பார்த்து வாருங்கள் என்று. பார்த்துவிட்டு திரும்ப அல்லாஹ்விடம் வந்து கூறுகின்றார்.

 

ரப்பே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! இந்த நரகத்தை பற்றி யார் கேள்வி படுவாரோ, அவர்கள் கண்டிப்பாக அதில் நுழைய பயப்படுவார்கள் என்று.

 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2560, 2483.

 

இந்த ஹதீஸை நாம் ஆழமாக சிந்தித்து பார்த்தால் பல விஷயங்கள் புரியவரும். 

 

இன்று மக்களிடத்தில் ஐந்து வேளை தொழுகையை கடைபிடியுங்கள்; ஜமாத்தோடு தொழுங்கள்; ஜகாத் கொடுங்கள்; நோன்பு வையுங்கள்; ஹலால் ஹராமை பேணி வாழுங்கள்; அளவாகவே சிரியுங்கள்; இப்படியாக மார்க்க சட்டங்களை சொல்லும்போது அதெல்லாம் அவர்களுக்கு சிரமமாக தெரிக்கின்றது. கஷ்டமாக தெரிகின்றது.

 

அவர்கள் மார்க்கத்தை பார்க்கும்போது தன்னுடைய சுதந்திரத்தை பறிப்பதாக எண்ணுகின்றார்கள். எத்தனை படித்த பெண்களுக்கு ஹிஜாப் அவர்களுக்கு ஒரு சிரமமாக இருக்கின்றது. வீட்டிலேயே இருப்பது சிரமமாக இருக்கின்றது. அந்நிய ஆண்களோடு பேசாமல் பழகாமல் அவர்களோடு கலந்து வேலை செய்யாமல் பெண்களுக்கு உண்டான அந்த மரியாதையை பேணி கட்டுக்கோப்பாக இருப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கின்றது.

 

அதுபோன்றுதான், படிக்கக்கூடிய பிள்ளைகள், ஆண்கள் பெண்கள் மார்க்க ஒழுக்கங்களைப் பேணி எப்படி வாழ வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லும்போது அதுவெல்லாம் அவர்களுக்கு சிரமமாக இருக்கின்றது.

 

இப்படி என்னென்ன மார்க்க ஒழுக்கங்கள் சொல்லப்படுகின்றனவோ, அதெல்லாம் சிரமமாக இருக்கின்றது.


நன்றி : சகோதரர் கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

 தாருல் ஹுதா. 

கருத்துகள்