RECENT POSTS

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?

 


இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?


இல்லை. ஆணுறுப்பை கழுவிட்டு உளூ செய்ய வேண்டும்.


ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல


இது வெளியேறுவதால் குளிப்புக் கடமையாகாது. இச்சை நீர் வெளிப்பட்டால் ஆணுறுப்பை கழுவிட்டு உளூ செய்துகொள்ள வேண்டும்.



அதிக அளவில் “மதீ’ வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். “அதற்காக உளூச் செய்ய வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.


அறிவிப்பவர்: அலீ (ரலி)


நூல்: புகாரீ (132), முஸ்லிம் (458)



“ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.




சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :


எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இதற்காக நீ உளூச் செய்வதே போதுமானதாகும் என்று பதிலளித்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே எனது ஆடையில் மதீ பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்டபோது, ஒரு கையளவு நீர் அள்ளி, இச்சை நீர் எங்கே பட்டுவிட்டதாக நீர் கருதுகிறாயோ அந்த இடத்தில் தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும் என்று பதிலளித்தார்கள்.


நூல் : அபூதாவுத் (180)

⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️⏩️

உளு நீங்குவது போல உணர்ந்தால்?


காற்றுப்பிரிந்த சப்தம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் மட்டும் உளு முறிந்துவிட்டது.


உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்துவிட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தாலே மீண்டும் நாம் உளூ செய்ய வேண்டும்.


காற்றுப்பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்துவிட்டது என்று முடிவு செய்யலாம். இதுபோன்ற சான்றுகள் ஏதும் இல்லாமல் உளூ முறிந்தது போன்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தால் இந்த சந்தேகத்தை நாம் பொருட்படுத்தக்கூடாது. உளூவுடன் இருப்பதாகவே முடிவு செய்துகொள்ள வேண்டும்.



அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள் :


நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்துவிடுமா?)” என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள். புகாரி (137)


எனவே உளூ களைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதை கண்டுகொள்ளாதீர்கள். சப்தம் அல்லது நாற்றத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தாலே மீண்டும் உளூ செய்துகொள்ளுங்கள்


கருத்துகள்