அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, டிசம்பர் 21, 2013

பெருமை கொள்ளாதீர் !
மனதில் அணுவளவு அகம்பாவம் இருப்பவனும் சுகம் தரும் சுவனம் புகமாட்டான் .
ஆதாரம்: முஸ்லிம்)

பெருமையைப் பற்றி எச்சரிக்கைச் செய்யும் ஹதீஸ்கள் நிறைய உண்டு . சில ஹதீசிகளை மட்டும் தந்துள்ளேன் .

பெருமை என்பது அரைகுறை ஆசாமிகளின் அடையாளம். அவர்களில் அறைவேக்காட்ட்த்தனத்தை  அம்பலப்படுத்த உதவும் துலாக்கோல் .

நிறைகுடம் தளும்புவதில்லை . அரிசி வெந்து வெண்மையாகி பக்குவமடைந்தபின் , சட்டி தண்ணீர் லில் குதி ஆட்டம் இருப்பதில்லை . பெருமை எப்பொழுதும் தனது வலிமையை கைவரிசையைக் காட்ட முயன்று தோற்று போனதாகத்தான் வரலாறு .

பெருமைப்படுவோர் சிறிது காலம் சிரம் உயர்ந்து வாழ்ந்தாலும் , மற்றகாலம் சிரம் தொங்கி , சிருமைப்பட்டுதான் விழுந்தார்கள் . தான் தான் இறைவன் என்று பெருமை கொண்ட பிர் அவ்னும் , செல்வச் செருக்கால் கயமை கொண்ட காரூனும் , பதவி போதையால் அகந்தை கொண்ட ஹாமானும் , பெரும் அழிவில் அமிழ்ந்து  மாண்டதை இச்சமுதாயம் மறக்க இயலாது .அவர்களுக்கு விழுந்த அந்த அடி பதவிப் பெருமை கொண்ட அலைவோருக்கும் , பணம் பண்ண , பண்பை விலை பேசுவோருக்கும் விழும் மரண அடியாகும்.

வல்லவனுக்கு மேல் வல்லவன் - வையகத்தில் உண்டு என்பது இறைமொழி . நீங்கள் தெரியாததையெல்லாம் அல்லாஹ் மிகத் தெரிந்தவன் என்பதும் அல்லாஹ்வின் அருள்மொழி .
இவ்வகையில் அறிவுச் சிகரமாகிய அல்லாஹ்வைத் தவிர பெருமைக்குரியவர் கிடையாது.

" அல்லாஹ்வே  பணக்காரன் , நீங்கள் அனைவரும் ஏழைகளே! என்பது இறை மறைக்கூற்று . வானம் , பூமி , காடு , மலை ,கடல், திடல், நதி பாதாளம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.

மனிதன் எப்படி வக்கணை  பேச முடியும் ...?   மனிதனுடைய ஊண், உடை , யாவும் அல்லாஹ் போட்ட பிச்சைகளே! ஏன் ...? இலவச வாழ்க்கை வாழ்பவன் அவன். அவனுக்கு பெருமை எதற்கு ? ஆணவம் எதற்கு ?

உலகம் செத்த பிணம் போன்றது ! அதில் பித்துப்பிடித்து வெறி கொள்பவை நாய்கள் , மனிதன் பெருமையடிக்க என்ன இருக்கிறது ...?  எனக்கேட்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அல்லாஹ் , ஹதீஸே குத்ஸி ஒன்றில் எச்சரிக்கிறான்
"கண்ணியம் எனது மேலாடை , பெருமை எனது கீழாடை , இவ்விரண்டிலொன்றில் என்னிடம் போட்டிக்கு வருவோரை  கடுமையாகத் தண்டிப்பேன் " (முஸ்லிம்)

பெருமையடிப்பவர் அல்லாஹ்வுக்குச் சொந்தமான மானத்திலும் , மரியாதையிலும் கை  வைப்பவர் . பங்காளியாக நினைப்பவர். அல்லாஹ் சும்மா விடுவானா ...?

உண்மையில் பெருமை பேசுபவன் , பேசவிடாமல் தள்ளி வைக்கப்பட வேண்டியவன்தான் . பேசிப்பேசியே தானும் கெட்டு அழிவான் . மற்றவரையும் கெடுப்பான் . தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் நிமிடத்திருக்கு ஒரு கொட்டு கொட்டும்  .

அதுமட்டும் அல்ல பெருமை பேசுபவரைவிட பணிவு காப்பவரிடம் தான் பலன்களதிகம் விளையும் . பணிவான அறிஞ்சன் , மருத்துவனின் பெட்டி போன்றவன்  .

பெருமையடிக்கும் முட்டாள் , கொட்டும் முரசைப் போன்றவன் . உள்ளே அரிய மருந்துகள் குடியிருந்தும் கூட மௌனமாயிருக்கும் பெட்டி ....? ஆனால் ! முரசு , சப்தம் அதிகம் கேட்கும், உள்ளே ஒன்றுமிருக்காது . இமாம் ச அதி  அவர்கள் கூறும் இவ்வுதாரணங்கள் எவ்வளவு ஆழமானவை .

மனிதனிடமுள்ள "நான்" எனும் அகம்பாவம் , ஆணவம் , தற்பெருமை , தலைகனம் ,ஆகிய கொடிய நோய்கள் கருவருக்கப்படாத வரை இறையச்சம் வளர்வதற்கு இல்லை ஆத்மா ஞானமும் கிடைக்கவும் முடியாது .

கொஞ்சம் பணம் வந்தால் போதும் , ஒரு பதவி கிடைத்தால் போதும் , ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும் , பெரும் அளவில் செல்வம் வந்து குவிந்தால் போதும் அவர் என்ன சொல்வார் என்றால் " நான் என் திறமையால் சம்பாதித்தேன் "  " நான் " "நான் " என்றுதான் வாயில் வரும்.  யாருக்கும் கிடைக்காத இவருக்கும் மட்டும் கிடைத்ததை போன்று , யாரும் செய்யாத காரியத்தை இவர் மட்டும் செய்ததை போன்று ஒரு கர்வம் ,பெருமை மனதில் தோன்றும் . அப்படி உள்ளவர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா ?

பெருமையைப் பற்றி இரண்டு ஹதீஸ்கள் கூறப்பட்டுள்ளது அவைகள் போதும் நமக்கு நிறைய படிப்பினைப் பெறுவதற்கு , பெருமையை விட்டு நீங்குவதற்கு .அல்லாஹ் நம் அனைவருக்கும் பெருமையை விட்டு நீங்குவதற்கு உதவி செய்வானாக ..ஆமீன் ..

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!