ஷைத்தானின் சூழ்ச்சி (இறுதிப் பகுதி)




அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஷைத்தானை விட்டு என்றும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.


இப்பொழுது உன் அகநிலையை வெளிப்படுத்தி புனித இஸ்லாத்தைக் கொண்டு உன்னையே நீ விசாரணை செய்து பார்! உண்மை வெளியாகும். நாணம் இல்லையா ? அல்லது அச்சம் இல்லையா ? இஸ்லாமிய நெறிமுறைகளும் , கலாச்சாரம், கொள்கையும், கோட்பாடுகளும் உன்னை விட்டும் எங்கே போய்விட்டது ? உன்னுடைய  கொள்கையும் , குறிக்கோளும் , சுகபோகமான வாழ்வுக்குரிய வசதிகளைத் தேடி அலைவதாகவே ஆகிவிட்டனவே ! இந்நிலையில் அல்லாஹ்வுடைய  மார்க்கத்தை கொண்டு வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுகின்றாயா ? அல்லது ஷைத்தானைப் பின் தொடர்கின்றாயா ? நீயே முடிவு செய்து கொள். உன் நிலை குறித்து வருத்தப்பட்டு அனுதாபப்படுவதைத் தவிர வேறெதுவும் இல்லை. சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது .இறைவனைச் சந்திக்கும் நேரம் வரும். அதற்க்கு முன் நாம் நிறைய பாவங்களைக் கழுவ வேண்டும் . அல்லாஹ்வைச் சந்திக்கும்போது எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நல்ல தூய உள்ளத்துடன் இருக்க வேண்டும்.

"கனி இருக்க காய் கவர்ந்தற்று " என்று வார்த்தைக்கு ஏற்ப சுவைத்துப் பேரானந்தம்  பெற இஸ்லாம் என்ற கனி கையில் இருக்க , காயாகிய இவ்வுலகத்தைக் கண்டு ஆனந்திக்கும் வகையில் அவதிபடுகின்றாயே ஏன்? பாவா ஆதம் (அலை) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊசாட்டங்கலைச் சரி எனத் தீர்மானித்து செயல்பட்டபோது , அச்செயலானது அவர்களைப் பாவியாகிவிட்டது. இந்த முறையில் அவர்களது இவ்வுலக வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது . இப்போது அவர்கள் "தௌபா " வேண்டுகின்றார்கள். அன்புச் சகோதர ! சகோதரிகளே! நன்றாக சிந்தனை செய்து பாருங்கள்! உங்களில் ஏற்படும் ஊசாட்டங்கலும் தீர்மானங்களும் செயல்பாடுகளும் இவ்வுலகப் பயணத்தைத் தொடர்வதாக உள்ளதா ? அல்லது மறு உலகப் பயணத்தை சார்ந்ததாக உள்ளதா ?

மவுத்துக்கு பின்புதான் அதிலும் கியாம நாளைக்குப் பிறகுதான் மறு உலக வாழ்வு என்கிறீர்களா ?  ஆம்! உண்மைதான் . என்றாலும் இவ்வுலகப் பயணத்திலேயே மறு உலகப் பயணத்தைத் தொடங்கி விட கடமைப்பட்டுள்ளீர்கள் . ஆதமும் (அலை) ஹவ்வாவும் சுவனபதிக்கு உரித்தானவர்களாக ஆக்கப்பட்டிருந்த (காலத்தை) நிலையை கவனத்திருக்கு கொண்டு வாருங்கள்.

அவர்கள் பாவம் செய்வதற்குண்டான முதல்படி  என்ன என்பதை இப்போது சொல்லுங்கள்; தொடர்ந்து அடுத்துஅடுத்து ஏற்பட்ட மாறுதல்களையும் கவனியுங்கள். இச் சம்பவங்களை  திருகுரானில் பிரஸ்தாபித்து ஆதமுடைய மக்களாகிய நமக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளான் .எச்சரிக்கைக்கு பயப்படுங்கள்! விழித்து எழுங்கள் ! நன்மையை நாடிப் புறப்படுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான் : "இவ்வாறு அவன் அவ்விருவரையும் ஏமாற்றி , அவர்கள் தங்கள் (நிலையிலிருந்து) கீழே இறங்கும்படி செய்தான். அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை ) ச் சுவைத்தார்கள் . அவர்களுடைய வெட்கத் தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று . அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக் கொள்ள முயன்றனர் ; அப்போது அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு ; உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா ? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன்  என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா ? என்று கேட்டான் .
குர் ஆன் : 7-22)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் , அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்கள் விட்டும் களைந்து , சுவன பதியைவிட்டு வெளியேற்றியது போல அவன் உங்களை ஏமாற்றி சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு ) மெய்யாகவே நாம் ஷைத்தான்களை இறை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருகின்றோம் .
குர் ஆன் :7 -27)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

கருத்துகள்