மறைமுக தர்மமே மேலானது

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
அல்லாஹ் கூறுகிறான்..

நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே .அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது[இன்னும்] உங்களுக்குச் சிறந்ததாகும் .[தர்மங்கலால் ] அவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான் . நீங்கள் செய்கின்றவற்றை  அல்லாஹ்  நன்கறிந்தவன் ஆவான். [அல்குர் ஆன் ]


''நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே . மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது[இன்னும்] உங்களுக்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்  கூறுகின்றான்.

அதாவது தர்மங்களை வெளிப்படையாகக் கொடுப்பதைவிட இரகசியமாகக் கொடுப்பதே மேலானது என இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. முகஸ்துதி ஏற்படாமல் இருக்க இதுவே ஏற்ற  முறையாகும் என்பதே காரணம். எனினும் வெளிப்படையாகத் தர்மம் செய்யும்  ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் தர்மம் செய்ய முன்வரலாம் என்ற நல்லெண்ணம் இருந்தால், அந்த அடிப்படையில் வெளிப்படையான  தர்மமே சிறந்ததாகும்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. குர்ஆனை [பிறர் கேட்கும்படி] சப்தமிட்டு ஓதுபவர்,  வெளிப்படையாகத் தர்மம் செய்பவரைப் போன்றவர் ஆவார். குர் ஆனை  [யாருக்கும் கேட்காமல்] மெதுவாக ஓதுபவர் இரகசியமாகத் தர்மம் செய்பவரைப் போன்றவர் ஆவார்.

ஆனால் , அடிப்படை என்னவென்றால் பிறருக்குத் தெரியாமல் மறைமுகமாகத் தர்மம் செய்வதே  சிறந்ததாகும் . இதற்கு இவ்வசனம் மட்டுமின்றி, பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீஸூம் சான்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத [மறுமை] நாளில் தனது நிழலில் அல்லாஹ்  எழு பேருக்கு நிழல் அளிப்பான். அவர்கள்..
நீதமிக்க அரசன் . அல்லாஹ்வின் வழிபாட்டில் திளைத்திருக்கும் இளைஞ ன் . அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே [நட்புடன்] ஒன்றிணைந்து , அவனுக்காகவே பிரிந்து விட்ட  இருவர் . பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தபின் மீண்டும் பள்ளிவாசலுக்கு செல்லும்வரை பள்ளிவாசளுடன் பின்னைக்கப்பட்ட இதயம் உடையவன்  . தனித்திருந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து [அவனது அச்சத்தால்] கண்ணீர் வடித்தவன். அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை  [தவறுக்கு ] அழைத்தபோது, 'நான் அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' எனக் கூறியவன். தனது இடக் கரத்துக்குத்  தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவன்.
மற்றொரு அறிவிப்பில் , ''இரகசியமாகச் செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தைத் தணிக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இப்னு அபீஹாத்திம் [ரஹ் ] அவர்கள் கூறுகிறார்கள் .. இந்த வசனம் அபூபக்கர் மற்றும் உமர் [ரலி] ஆகியோர் தொடர்பாக அருளப்பெற்றது . [ஒரு முறை] உமர் [ரலி] அவர்கள் தமது  செல்வத்தில் பாதியை [இறைவழியில்    செலவிடுவதற்காக] நபி [ஸல்] அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

அப்போது நபி [ஸல்] அவர்கள் உமர் [ரலி] அவர்களிடம் , உமரே! உங்களுக்குப்பின் உங்கள்  குடும்பத்தாருக்காக எதை விட்டுவைத்துள்ளீர்?'' என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்கள் , ''எனது செல்வத்தில் பாதியை விட்டு வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள்.   [பின்னர்] அபூபக்ர் [ரலி] அவர்கள் தமது செல்வம் முழுவதையும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக எடுத்து வந்து நபி [ஸல்] அவர்களிடம் கொடுத்தார்கள்.  அப்போது நபி [ஸல்] அவர்கள் அபூபக்ர் [ரலி] அவர்களிடம் ''அபூபக்ரே! உங்களுக்குப்பின் உங்கள் குடும்பத்தாருக்காக எதை விட்டுவைத்துள்ளீர்? எனக் கேட்டார்கள் . அதற்கு அவர்கள். ''அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முன்னேற்பாடாக வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள் . அப்போது உமர்  [ரலி] அவர்கள் அழுதுவிட்டார்கள்.

''அபூபக்ரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! எந்த நன்மையின் வாசலை நோக்கி நாம் முந்திச்செல்ல முனைந்தாலும், [இறுதியில்] நீங்கள்தான் முந்திவிடுகிறீர்கள்  '' என உமர் கூறினார் .

இரகசியமாகத் தர்மம் செய்வதே மிகவும் சிறந்தது என்று வலியுறுத்தும் இந்த வசனம், கடமையான ஸகாத்  மற்றும் கூடுதலான தர்மம் இரண்டுக்குமே பொருந்தும். ஆனால் , இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் இந்த வசனத்தின் விளக்கவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

கடமையில்லாத கூடுதலான தர்மத்தைப் பொருத்தவரை, அதை வெளிப்படையாகச் செய்வதை விட  இரகசியமாகச் செய்வதற்கு எழுபது மடங்கு சிறப்பு  உண்டு . கடமையான ஸகாத்தை இரகசியமாகக் கொடுப்பதைவிட வெளிப்படையாகக் கொடுப்பதே  மிகவும் சிறந்தது . இதற்கு இருபத்தைந்து மடங்கு சிறப்புண்டு .

அடுத்து ''உங்கள் தீமைகளை அவன் அழித்துவிடுவான்'' என இவ்வசனம் கூறுகிறது. அதாவது நீங்கள் செய்யும் தர்மத்திற்கு பதிலாக-அதிலும் குறிப்பாக மறைமுகமாகச் செய்யும் தர்மதிற்க்குப்  பதிலாக-உங்கள் தகுதி உயரும் ,, பாவங்கள் அகற்றப்படும். ''நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ்  நன்கறிவான்''. அவனுக்குத் தெரியாத ஒன்றுமே கிடையாது ,, உங்கள் செய்யல்களுக்கேற்ப பிரதிபலன் அளிப்பான்.
அல்லாஹ் மிக அறிந்தவன்....
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தர்மம் வளரும் .........................   

கருத்துகள்