குழந்தை பாக்கியம் ..........

குழந்தை பாக்கியம் ..........
அல்லாஹ்வின் திருபெயரால் ...
குழந்தை இல்லாத வீடு இருண்ட வீட்டைப் போல் காட்சியளிக்கும் ! கலகலப்பு இருக்காது! சந்தோசம் இருக்காது! குழந்தை பாக்கியம் பெரும் பாக்கியம் ! அல்லாஹ் நாடியவர்களுக்கு இந்த குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கிறான். அவன் நாடியவரை மலடியாக ஆக்குகிறான். ஆணும், பெண்ணும் கலந்துக் கொடுக்கிறான். சிலருக்கு ஆண் குழந்தை மட்டும் கொடுக்கிறான். இன்னும் சிலருக்கு பெண் குழந்தை மட்டும் கொடுக்கிறான். கேளுங்கள் அல்லாஹ்விடம் ! அல்லாஹ்  நிச்சயமாக கொடுப்பான்!


''ஜகரிய்யாவையும் [தூதராக அனுப்பி வைத்தோம்] அவர் தன்  இறைவனை நோக்கி  '' என் இறைவனே! நீ என்னை [சந்ததியற்ற] தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில்  மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில் நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து [மலடாக இருந்த] அவருடைய மனைவியை [கற்பம் கொள்ள] தகுதியுடையவளாக்கி  யஹ்யாவை அவருக்கு [சந்ததியாக] கொடுத்தோம் . நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டிருந்தார்கள். [நம்முடைய அருளை] விரும்பியும்  [நம் தண்டனைக்குப் ] பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யாவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும்  இருந்தார்கள்.
அல்குர் ஆன்.. 21..89,90]

''அல்லாஹ்  எனக்கு அனைத்துச் செல்வங்களையும் கொடுத்திருக்கின்றான். வளமனை [பங்களா] இன் இயங்கிகள் [கார்கள்] ஏராளமான நிலபுலன்கள் !  மலர்மஞ்சம், என் அருகே மங்கை நல்லாள் [மனைவி] குளுகுளு வசதிகள் யாவும் தந்துள்ளான். ஆனால்... ஆனால்.. ? என்னும் பெருமூச்சு விடுகிறீர்கள் அல்லவா? ஆமாம்! அந்த ஒன்றுக்காக நாங்கள் போகாத இடம் இல்லை , மலையில்லை , சுற்றாத சமாதிகளில்லை  ,, மருத்துவம் தான் கொஞ்சமா? எத்தனை பீங்கான்களை கரைத்துக் குடித்திருப்போம் . கைகளில் கறுப்புக் கயிறுகள் இடுப்புகளில் எத்தனை வகையான கறுப்புக் கயிறுகள்,  நேர்ச்சை இன்னும் பல மார்க்கத்துக்கு புறம்பான காரியங்களும் செய்து இருந்தும் நாமிருவராகவே இருந்து வருகிறோம்! ஏக்கமும், மனதில் ஒரு விதமான கலக்கமும் உள்ளவர்கள் அவர்கள் விடும் பெருமூச்சு  கேட்கிறது.

இதோ உங்கள் கவலைகள் நீங்கிட அல்லாஹ்  ஒரு சிறந்த வழியை நபி ஜகரிய்யா [அலை] அவர்கள் மூலம் கற்றுத்தந்துள்ளான் . இதோ கேளுங்கள்  'ரப்பி லா ததர்னீ   ஃ பர்தன் வஅன்த்த கைருல் வாரிசீன் ''.
''என் இறைவனே! நீ என்னை [சந்ததியற்ற] தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ  அனந்தரங்கொள்வோரில்  மிக்கமேலானவன்.''

இப்பொழுது கூறுங்கள்! அல்லாஹ்வையன்றி நமக்குக் குழந்தைப்பேற்றை நல்குபவன் யார்?  நபிமார்கள் அனைவரும் மனித இனத்திற்கு வழிகாட்டிகள் அல்லவா? அதனால் தான் அவர்கள் மூலமே நமக்குரியவற்றை கற்றுக் கொடுக்கிறான். நபி ஜகரிய்யா [அலை] அவர்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹூ [ஜல்] அவர்களுக்கு யஹ்யா [அலை] அவர்களை நன்கொடையாக அளித்தான்.

நாம் அல்லாஹ்விடம் கேட்கின்ற துஆ ஒப்புக்கொள்ளப்பட வேண்டுமாயின், நம்மிடம் நற்செயல் இருந்தாக வேண்டும்,, கலப்பற்ற எண்ணத்துடன் அவை நிகழ்ந்திட வேண்டும். அல்லாஹ்வின் அருளை விரும்பியும், அவனின் தண்டனைக்கு அஞ்சியும் அந்த நற்செயல்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.இறையச்சமில்லாதவரின் துஆவும் பயனற்ற வையாகும் என்பதை உணர்வோமாக!
பொறுமையைக் கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவித் தேடுங்கள்! [அல்குர் ஆன்]
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

Welcome to your comment!