தொழுகையை விட்டவன்



தொழுகையை விட்டவன்  

    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

    தொழுகையை விட்ட என் சகோதரனே ! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.


    அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

    அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!

    நன்றாகத் தெரிந்து கொள் சகோதரனே ! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.

    இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.

    நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

    போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

    தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!
நபியவர்கள் கூறினார்கள்...

    'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

    தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???

    'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)

    இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...
    'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.

    என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?
அல்லாஹ் சொல்கின்றான்...

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً

    நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.
(நிஸாஃ 142ம் வசனம்)

    நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?

    பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

    கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!

    அல்லாஹ் கூறுகின்றான் ..

    'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)

    ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.

    மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

    என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?
நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!

    'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)

    தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.

    'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)

அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى  ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

    'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

    ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!

    போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .

    (அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?

    தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.
(ஸூரா அல் ஹதீத் 53)

    ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.

 தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.

 அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது

 அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.

 அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.

 அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.

 அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.

 அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.

 அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.

 அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.

 அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

    பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?

    இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை . கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

    அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,
(அல்லாஹ்வின் அருள் எம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.)

ஆக்கம்: மௌலவி. முஹம்மது ஜலீல் மதனி


கருத்துகள்