உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி



உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி
பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.


இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:

”செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. காலில் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.

இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.

இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.

கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும் அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச் சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.

உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது. கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.

பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் – அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக – அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர். இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது.

எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது.

சொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான் இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை” (நூல் : புகாரி 1496)

அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோமாக

கருத்துகள்