கவின் என்பவர் வேலைத்தேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார்.
அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே கவின் மின்கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அந்த முகவரியை காட்டி வழி கேட்டார். அக்கடையிலிருந்தவர் கவினிடம் சிறிது தூரம் சென்றால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கே பார்வையற்ற ஓர் வயதான அம்மா இருப்பார். அதுதான் இந்த முகவரியுடைய வீடு எனக் கூறினார்.
கவினும் அங்கே சென்றார். தென்னங்கீற்றால் ஆன ஓர் சிறிய கொட்டகை தான் வீடு. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத அளவிற்கு மோசமாக இருந்தது. கவினின் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? என்று கேட்டார். அம்மா நான் இந்த வழியாக வரும்போது 50 ரூபாய் கீழே கிடந்ததைப் பார்த்தேன்.
மேலும், மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த காகிதத்தைப் பார்த்தேன். அதனால் அந்த பணத்தை உங்களிடம் கொடுக்க வந்தேன். இதைக் கேட்டதும் வயதான அந்த அம்மா அழுதவாறே தம்பி இரண்டு நாட்களாக மொத்தமாக முப்பத்தைந்து பேர் 50 ரூபா கீழே விழுந்து கிடந்தது என்று கொடுத்துச் சென்றார்கள்.
ஆனால் அந்த கடிதத்தை நான் எழுதவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு எழுத படிக்கத் தெரியாது என்றார். ஆனால் கவின் பரவாயில்லை, அம்மா! நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கொடுத்து சென்றார். பின் அந்த வயதான அந்த அம்மா! தம்பி நீ செல்லும்போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்துவிடுமாறு அறிவுறுத்தினார்.
உடனே கவினின் மனதில் யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார் என பலவிதமாக சிந்தித்துப் பார்த்தார். அந்த கடிதத்தை கிழித்து விடுமாறு வயதான அம்மா ஒவ்வொருவரிடமும் கூறியிருப்பார். ஆனால் யாரும் அதைக் கிழிக்கவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி கூறினார், கவின்.
'நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி உண்டு".
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் கவினிடம் அண்ணா! இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா? வரும் வழியில் இந்த 50 ரூபாய் கிடைத்தது.
அதை அந்த அம்மாவிடம் தர வேண்டும். தாங்கள் அந்த வீட்டிற்குச் செல்லும் வழியைக் கூறினால் உதவியாக இருக்கும் என்றார், அந்த நபர். மனிதநேயம் சாகவில்லை என நினைத்து கவின் அவருக்கு அவ்வீட்டின் வழியைக் கூறினார்.
நீதி :
உதவி சிறியதோ, பெரியதோ நம்மால் முடிந்தவரை உதவிகளைச் செய்து கொண்டே இருப்போம். 'இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்".
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!