அழகை நேசிக்கும் அல்லாஹ்

 



அழகை நேசிக்கும் அல்லாஹ்


 உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான ஆபத்தானவை!


 அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முத­ல் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.


 நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி) நூல்: முஸ்­லிம் (147)


 சொர்க்கத்தில், சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் இன்பங்கள் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வைப் பாôப்பது தான் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அல்லாஹ்வைப் பார்ப்பதே இனிமையாக இருக்கும் என்றால் அவன் எப்படிப்பட்ட அழகைக் கொண்டவனாக இருப்பான் என்பதைக் கவனிக்க வேண்டும்.


 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், ''உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''இறைவா! நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்?)'' என்று கேட்பார்கள்.


 அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்குவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் இருக்காது. அறிவிப்பாளர்: ஸுஹைப் (ர­லி), நூல்: முஸ்­லிம் (297)


 அல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா?


 நம்மீது ஒருவர் அன்பு காட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத் தொடங்கி விடுகிறது. பெற்றெடுத்த தாய், குழந்தையின் மீது அதிக பாசத்தைப் பொழிவதால் குழந்தைக்குத் தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்பு காட்ட இயலாது.


 இன்றைக்குத் தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும், ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது. சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா? பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக் கூடியதாக இருக்கிறது.


 (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்ட போது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ''இந்தப் பெண், தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்'' என்றார்கள். நாங்கள், ''இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ர­லி) நூல்: புகாரி (5999)


 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது மற்றொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்கு கூட, தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (5312)


 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்ட போது தன் மகன்களிடம், ''உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்?'' என்று கேட்டார். அவர்கள், ''சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ''இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?'' என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். அறிவிப்பவர்: அபூசயீத் (ர­லி) நூல்: புகாரி (3478)


 அல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காகச் சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.


 எனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளும் சிறப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!


கருத்துகள்