நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்!

 



நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்!


 அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான, அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவது தான் முக்கியம் என்பதால், தடு மாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம்.


 அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்பட்டு ஆசைப்பட்ட சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் சில தன்மைகளை நம்மிடமிருந்து நாம் வேறோடு களைந்தெரிய வேண்டும். அந்த பண்புகளின் அடையாளங்கள் தென்படுகின்ற நிலையிலே காலத்தை ஒதுக்கி வியர்வையை சிந்தி சிறந்த காரியங்களை செய்திருந்தாலும் அவை அல்லாஹ்விடத்திலே எந்த மதிப்பும் இல்லாததாகிவிடும்.


 வழங்கப்பட்ட அருட்கொடைகளை வாரி இறைத்திருந்தாலும் அக்காரியங்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் வீணாகிவிடும். ஆகவே, நமது அமல்களை பாழ்படுத்தக்கூடிய அத்தகைய நச்சுப்பண்புகளை பற்றி இக்கட்டுரையிலே காண்போம்.


 இணைவைத்தல்


 நாள்தோரும் இறை நிராகரிப்பாளர்கள் நாடேபோற்றுகின்ற வகையிலே நற்காரியங்களை செய்தாலும் சேவை செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டிருந்தாலும் மற்றவர்களின் வாழ்விலே மறுமலர்ச்சி ஏற்படுத்துவதையே தங்களது இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் அவர்களு டைய அனைத்து அமல்கலையும் அழித்துவிடுவான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர்.


 அந்த இறைநிராகரிப்பாளர்களிடம் நிறைந்துள்ளதைப் போன்றே பல வழி கேடான செயல்கள் முஸ்லிம்களிடத்திலே மலிந்து காணப்படுகின்றன. காஃபிர் கள் தங்களது கடவுள்களை மனிதபடைப்பின் தோற்றத்தில் சிலைகளை வடிப் பதை போன்று பல பெயர் தாங்கி முஸ்லிம்கள், படைப்பினங்களான மனிதர்களை அவ்லியாக்கள், மகான்கள், ஷேகுமார்கள் என்று துதிபாடி அல்லாஹ் வுடைய அந்தஸ்துக்கு உயர்த்தி தர்கா வழிபாட்டிலே வீழ்ந்து கிடக்கின்றனர். தாயத்து, தகடு, ஜோதிடம், குறிபார்த்தல், நல்லநேரம், கெட்டநேரம் போன்ற மூடநம்பிக்கையிலே முழ்கி இணைவைப்பிலே ஊரிப்போய் கிடக்கின்றனர்.


 முஃமின்களாக நோன்பு, தொழுகை, ஹஜ் மற்றும் பல வழிபாடுகளை புரிந்தாலும் அவர்களது வாழ்விலே இணைவைப்பு என்பது சாக்கடை நீரைப் போன்று இரண்டறக்கலந்து காணப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் நற்காரியங்கள் ஏற்று கொள்ளபட்டு அதற்குரிய பிரதிபலனை பெற்று கொள்வார்களா? மாறாக நஷ்டவாளிகளாக மாறிவிடுவார்களா? என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்.


 இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 9:17)


 இணை வைப்பாளர்கள், இமயமலையளவிற்கு நல்லமல்களை செய்திருந்தாலும் அல்லாஹ் அவற்றை அற்பமாகக் கருதி அழித்துவிடுவான். இறைப்பணியை பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே மக்கள் மன்றத்திலே எடுத்து வைத்த நபிமார்களை கூட இணைவைத்தால் உங்களது அனைத்து அமல்களும் நாசமாகிவிடும் என அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதை திருமறையிலே கூறுகிறான்


 ‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும் நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 39: 65 66)


 ஆகவே, நமது அமல்கள் அங்கீகரிக்கப்பட்டு இன்பமான வாழ்வினை பெற முதலில் இணைவைப்பின் சாயல் கடுகளவு கூட நமது வாழ்விலே பட்டு விடாமல் கவனமாக வாழ வேண்டும்


 பித்அத்


 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும். இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும்.


 இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:


 நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (3697)


 நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப் பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)


 அநேகமான முஸ்லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பல காரியங்களை நன்மை கிடைக்குமெனக் கருதி செய்து கொண்டிருக்கிறார்கள்.


 உதாரணமாக மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா மற்றும் பஞ்சா எடுத்தல் இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக் கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.


 செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560)


 எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.


 இறையச்சமின்மை


 இறை நம்பிக்கையாளர்களை, இறையச்சமுடையவர்களாக மாற்றுவதற்காகவும் அவர்கள் பெற்றிருக்கின்ற இறையச்சத்தின் தரத்தை பரிசோதிப்பதற்காகவும் அல்லாஹ் பல கடமையான விஷயங்களை கொடுத்துள்ளான். அவற்றை நிறைவேற்ற பல்வேறு விதமான விதிமுறைகளையும் வரம்புகளையும் விதித்துள்ளான்.


 இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான நோன்பைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.


 ‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’. (அல்குர்ஆன் 2:183)


 நமக்கு சொந்தமான ஆகாரத்தை விட்டும் அடுத்தவர்கள் நம்மை தடுக்க முடியாத போதிலும் மற்றவர்களை விட்டும் மறைவாக தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற போதிலும் ஒரு அடியான் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சாப்பிடாமலும் பருகாமலும் இருக்கிறான். இத்தகைய இறையச்சவாதிகளாக நம்மை மாற்றுவதற்குத்தான் நோன்பை கடமையாக்கியுள்ளான். இன்னும் முஃமின்கள் தங்களது சக்திக்கேற்ப ஆடு, மாடு, ஒட்டகம் என்று கொடுக்கின்ற குர்பானியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.


 அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)


 இவ்வுலகிலே தரப்பட்ட பொருளாதாரத்தைப் பற்றி தீர்ப்பு நாளிலே விசாரிக் கப்படுவோம் என்று இறைவழியிலே செல்வத்தைச் செலவிட நாம் தயாராக இருக்கிறோமா என்று சோதிப்பதற்காகவே குர்பானியை வலியுறுத்தியுள்ளான். கண்டிப்பாக நமது அமல்களிலே நகமும் சதையுமாக இறையச்சம் பின்னிப்


 பிணைந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு அற்புதமான சம்பவத்தை அருள்மறையிலே கூறுகிறான்.


 ஆதமுடைய இரு புதல்வர்களில் உண்மை வரலாற்றை அவர்களுக்கு கூறு வீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. ‘நான் உன்னைக் கொள்வேன்’ என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். ‘(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்’. (அல்குர்ஆன் 5:27)


 ஆதம்(அலை) அவர்களுடைய இரு புதல்வர்களில் இறையச்சத்தோடு ஒருவர் வணக்கத்தை புரிந்ததால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கிறான். மற்றொரு வருடைய வணக்கத்திலே இறையச்சம் இல்லாததால் அதை அல்லாஹ் மறுத் துவிடுகிறான். ஆகவே எந்த அமலைச் செய்தாலும் இறையச்சத்தோடு செய்வோமாக!


 விருப்பமின்மை


 எந்தவொரு அமலையும் எடுத்தோம் முடித்தோம் என்று அலட்சியமாகச் செய்யாமல் அதன்மூலம் நன்மைகளை நாடியவராக செய்ய வேண்டும். இறைப் பொருத்தத்தை எதிர்ப்பார்த்தவராக இறையருளின் மீது ஆசைப்பட்டவராக அனைத்து அமல்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.


 உதாரணமாக செல்வத்தை செலவழிப்பதைப்பற்றி அருள்மறையிலே அல்லாஹ் கூறும் போது, அவனுடையத் திருமுகத்திற்காகத் தரவேண்டுமென்று கூறுகிறான்.


 நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட் டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)


 தர்மம் மட்டுமல்ல தொழுகை நோன்பு ஹஜ் உட்பட அனைத்துக் கடமைகளையும் வெறுப்பில்லாமல் விருப்பத்தோடு செய்யவேண்டும். மணிக்கணக்காக தூங்கிக் கொண்டிருப்பதால் தொழுவோம் கோடி கோடியாய் கொட்டிக் கிடப்பதால் தர்மம் செய்வோம். உடல் பெருத்துவிட்டதால் நோன்பு நோற்போம். ஏதோ கேட்டுவிட்டார் என்பதற்காக உதவி செய்வோம் என்று அலட்சி யமாக ஆர்வமின்றி செயல்படாமல் அல்லாஹ்வின் அருள் மீது ஆசைப்பட்டவராக இக்காரியத்தை அவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று செயல் பட வேண்டும். அப்போது தான் அந்த அமல்கள் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்படும். இதை திருமறையில் கூறுகிறான்.


 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 9:54)


 நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்திலே நின்று வணங்குவதைப் பற்றி பின்வருமாறு நவின்றார்கள்.


 எவரொருவர் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ரமழானிலே நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 37


 ஈமான் கொண்டவராக இருப்பதோடு இறைப்பொருத்தத்தினை எதிர்பார்த்தவராக இரவுத் தொழுகையிலே ஈடுபடும் போதுதான் அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


 முகஸ்துதி


 வல்ல ரஹ்மானை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அதுவும் கட்டளைகளுக்கு அடிபணிந்து மனத்தூய்மையோடு அவனை வணங்க வேண்டும் என்று அல்லாஹ் அருள் மறையிலே கூறுகிறான்.


 வணக்கத்தை அல்லாஹ்விற்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதி யாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தை கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறுகட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன்: 98:5)


 நமது அருமையான செயல்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக போற்றி பேச வேண்டுமென்றோ நம்மைப் புகழ்ந்து வாழ்த்த வேண்டு மென்றோ அமல் செய்தால் அவற்றை அல்லாஹ் நன்மையை விட்டும் அப்புறப்படுத்திவிடுவான். முகஸ்துதியோடு செய்யப்படுகின்ற அமல்களை அல் லாஹ் அணு அளவு கூட அவற்றை அங்கீகரிக்கமாட்டான். இதைத் திருமறை யிலே தெளிவுபடுத்துகிறான்.


 நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிட்டவனைப் போல உங்கள் தர்மங்களை சொல்லிக்காட்டியும் தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)


 வழுக்குப் பாறையின் மீது படிந்திருக்கின்ற மண், அடை மழையிலே கரைந்தோடி விடுவதைப் போன்றே வெறும் கை தட்டலுக்காக செய்யப்படு கின்ற காரியங்கள் நன்மையை விட்டும் தடுக்கப்பட்டுவிடும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகிய சம்பவத்தின் மூலம் எச்சரிக்கின்றார்கள்.


 செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல், மார்க்கத்தை தெளிவுபடுத்திய ஆலிம், மார்க்கப் பாதையில் உயிரை விட்ட தியாகி இம்மூவரும் மனிதர்களிடம் கிடைக்கின்ற நன்மதிப்பிற்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் செயல்பட்டதால் அவர்களின் அமலை மறுமையிலே அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3527


 ஆகவே, நம்முடைய அமல்கள் மறுமையிலே சுகமான சுவர்க்க வாழ்க் கைக்கு பாதை வகுத்துத் தரவேண்டுமெனில் அவற்றை முகஸ்துதியின்றி செய்ய வேண்டும்.


 தீமைகளோடு கலந்திருத்தல்


 அழைப்புப்பணி செய்வது அனைத்து முஃமின்கள் மீதும் மறுக்க முடியாத தவிர்க்க இயலாத அரும்பணியாகும். தரணியிலே சிறப்புமிகு சமுதாயமென்ற நற்சான்றைப் பெற அன்றாடம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமான பணியாகும். இதை அல்லாஹ் கூறுகிறான்.


 நீங்கள் மனித குலத்திற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவுகிறீர்கள். தீமையை தடுக்கிறீர்கள். (அல்குர்ஆன் 3:110)


 திருமறையிலே நன்மையை ஏவுமாறு கட்டளையிடும் போதெல்லாம் தீமை யைத் தடுக்குமாறும் வலியுறுத்திக் கூறுகிறான். ஆனால், சிலர் தாங்கள் தவறான தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்தாலும் அதன் மூலம் பெறுகின்றவற்றை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துகிறோம் என்று அற்பக் கார ணத்தை கூறுகிறார்கள். ஆனால், பின்வருமாறு திருமறையிலே அல்லாஹ் ஏவுகிறான்.


 நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக. அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். (அல்குர்ஆன்: 23:96)


 நன்மையும் தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டு (பகைமையைத்) தடுப்பீராக. எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். (அல்குர்ஆன்:41:34)


 திருட்டுப் பணத்திலே தர்மம் செய்வது மோசடி செய்து குடிசைப் போட்டுத் தருவது, வட்டிப் பணத்திலே விருந்து வைப்பது, விபச்சாரம் செய்து ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது போன்ற தடுக்கப்பட்ட வழிகளிலே நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.


 உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 329


 ஆகவே, மறுமை நாளிலே நம்மைக் காப்பாற்றக்கூடியதாக நமது அமல்கள் இருக்க வேண்டுமெனில், அவை அனுமதிக்கப்பட்ட வழிகளிலே ஆக்கம் பெற்றதாக இருக்க வேண்டும்.


கருத்துகள்