RECENT POSTS

மனிதனைப் புனிதனாக்கும் மாபெரும் பன்னிரண்டு விஷயங்கள்

 .


மனிதனைப் புனிதனாக்கும் மாபெரும் பன்னிரண்டு விஷயங்கள்


ஹஜ்ரத் கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது: நான் தவ்றாத், ஐபூர், இன்ஜீல், குர்ஆன் ஷரீப் ஆகிய நான்கு வான்மறைகளையும் கற்றுணர்ந்திருக்கிறேன்; ஆயினும் அவைகளிலிருந்தும் பன்னிரண்டு விஷயங்களையே பொறுக்கி எடுத்து அவைகளை ஒரு காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு அனுதினமும் அவ்விஷயங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் மும்முறை நோட்டமிட்டு என்னைத் திருத்திக் கொள்வேன். அவைகள்:-


1. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! எனது பொக்கிஷம் நிறைந்திருக்கும்வரை உனக்குரிய உணவு கிடைக்காமல் தப்பி விடும் என்று பயப்படாதே, நிச்சயமாக எனது பொக்கிஷம் ஒரு போதும் குறையவே குறையாது.


2. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! உனது தகுதி (நன்மை)க்குத் தக்கவாறு உன்னை நான் நேசிக்கிறேன்; எனது தகுதிக்கு தக்கவாறு நீ என்னை நேசி.


3. அல்லாஹ் கூறுகின்றான்: ஆதமின் மகனே! நீ -


ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடந்து சென்று உனது இருபாதங்களையும் சொர்க்கத்தில் காணும்வரை சூழ்ச்சியைப் பற்றி நிம்மதியாக இருந்திடாதே. எனது


4. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! உலகிலுள்ள சகல சிருஷ்டிகளையும் உனது பிரயோஜனத் திற்காகவே படைத்திருக்கின்றேன், ஆனால் என்னை வணங்கவே நான் உன்னைப் படைத்திருக்கின்றேன்.


5. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! எனது திறமையும் வல்லமையும் நிரந்தரமாக இருக்கும் காலமெல்லாம் என்னைத் தவிர்த்து வேறு எவருக்கும் நீ பயப்படாதே.


6. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! உனது தவறினாலும் குற்றத்தினாலும் ஏற்படும் தீமைக்காக நீ என்மீது கோபமும் வெறுப்பும் கொள்ளாதே! நீ எனக்கு மாறு செய்த குற்றத்தினாலும் தவறினாலுமே அத்தீமைகள் நிகழ்ந்தன வென்று உணர்ந்து உன்னையே நீ கோபித்துக்கொள்.


7. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! அர்ஷுக்கு அப்பாலிருந்து, பாதாளம் வரையிலுள்ள அனைவரும் என்னையே நாடுகிறார்கள். ஆனால் நான், உன்னை நாடுகிறேன். எனினும் நீ என்னை விட்டும் உனது தீய செயலால் வெகுதூரம் வெருண்டோடுகின்றாய்!


8. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! நீ என்னைத் தவிர எப்பொருளையும் நேசிக்காதே. ஏனெனில் அவைகள் உனக்குத் தக்க சந்தர்ப்பத்தில் பயன்தராது. என்னை நீ எப்பொழுது நாடுகிறாயோ. அப்பொழுதே எனது உதவியைப் பெற்றுக்கொள்வாய்.


9. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! நாளைய தினத்தின் உணவை இன்றே நீ என்னிடம் கேட்காதே. ஏனெனில் நாளைய தினத்தின் அமலை இன்றே நான் உன்னிடம் கேட்பதில்லை.


10. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! உன்னை நான் அற்ப விந்துவிலிருந்து படைத்தேன். நீ உனது தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது கூட உனக்குத் தேவையான உணவை நான் கொடுத்தருளினேன். அதில் கொஞ்சங்கூட நான் குறைக்கவில்லை.


11. அல்லாஹ் கூறுகின்றான்:- ஆதமின் மகனே! உனக்காக நான் பங்கிட்டுக் கொடுத்த செல்வத்தைக் கொண்டு நீ திருப்தி அடைவாயானால், உன் உடலையும் உள்ளத்தையும் நான் சுகம் பெறச் செய்வேன். நீ திருப்தி கொள்ள வில்லையானால், காடு வனாந்திரங்களில் காட்டு மிருகங்கள் தனது உணவைத் தேடியலைவதுபோல் உன்னையும் அலையச் செய்திடுவேன். அவ்வாறு நீ அலைந்து திரிந்தாலும், எனது கண்ணியத்தின் மீது ஆணையாக நான் உனக்கு நிர்ணயித்ததைத்தான் நீ அடைய முடியும். மேலும், நீ - என்னிடத்திலும், மக்களிடத்திலும் வெறுக்கப்பட்டவனாவாய்.


12. அல்லாஹ் கூறுகிறான்:- ஆதமின் மகனே! எவர் எனது தீர்ப்பையும் விதியையும் பொருந்திக் கொள்ள வில்லையோ எனது சோதனையின் மீது சாதனை காட்டிப் பொறுமை கொள்ளவில்லையோ எனது உபகாரத்திற்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் எனது வானப் பரப்பின் கீழிலிருந்து வெளியேறிக்கொள்ளட்டும். என்னையல்லாத வேறு இறைவனையும் தேடிக்கொள்ளட்டும்.

கருத்துகள்