முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?
"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்'' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது மனிதகுல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இஸ்லாம் அல்லாத எந்தவொரு மதத்தையும் இன்னொரு மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே அதிகமான ஒற்றுமைகளும், குறைந்த அளவு வேற்றுமைகளும் இருப்பதைக் காணலாம்.
ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை எந்த மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் வேறுபாடுகள் அதிகமாகவும், ஒற்றுமை மிகமிகக் குறைவாகவும் இருக்கும். இப்படி மிகப் பெரிய கொள்கை வேறுபாடுகளுடைய முஸ்லிமும், முஸ்லிமல்லாதவரும் திருமண பந்தத்தின் மூலம் இணைவார்களானால் அந்த இணைப்பு உளப்பூர்வமானதாக இருக்க முடியாது; அது நீடிப்பதும் சிரமமாகும்.
இதனால் தான் கடவுள் இல்லை என்ற கொள்கையில் உறுதியுடைவர்கள், தங்கள் குடும்பத்துப் பெண்களைக் கடவுள் நம்பிக்கையுடையவருக்கு மணமுடித்துத் தர மாட்டார்கள். இதைக் கொள்கை உறுதி என்று தான் அறிவுடையோர் எடுத்துக் கொள்வார்களே தவிர துவேஷமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரே ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்கிறான் என்றும், அவனுக்கு மனைவி, மக்கள், குடும்பம், இதர பலவீனங்கள் எதுவுமே இல்லை என்றும் இஸ்லாம் சொல்கிறது. இந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் மறுமையில் கடும் தண்டனை உண்டு எனவும் இஸ்லாம் கூறுகிறது. இதை நம்புகின்ற ஒருவர் இதற்கு நேர்மாறாக நடப்பவர்களுடன் திருமணம் செய்தால் அவர்களிடையே புரிந்துணர்வோ, நல்லிணக்கமோ நீடிக்க முடியாது.
திருமணம் என்பது இயன்ற அளவுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டிய ஒரு வாழ்க்கை. தம்பதியரிடையே கொள்கை அளவிலான மிகப் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அவர்களின் இல்லற வாழ்வு நரகமாகி விடும்.
நிறைய கடவுள்கள் இருக்கலாம் என்று சொல்கின்ற ஒருவரோடு ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான்; மற்றவை கடவுள் அல்ல என்ற கொள்கை உடையவரால் கடைசி வரை ஒத்துப்போக முடியாது. இதுபோல் ஒரே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம்புகின்ற முஸ்லிம், கடவுளே இல்லை என்று சொல்கின்ற குடும்பத்தோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி வைத்துக் கொண்டாலும் அது நல்ல வாழ்க்கையாக அமையாது. அதிகக் கட்டுப்பாடுகளை விரும்புவோருக்கும், கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போருக்கும் இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போர் யாருடனும் இணங்கிப் போக முடியும். கட்டுப்பாடுகளுடன் இருப்பவர்களால் அவ்வாறு இணங்கிப் போக இயலாது. அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்பவராக ஒருவர் இருக்கிறார். அதில் எந்தக் கட்டுப்பாடும் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் சைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார். அசைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார். ஆனால் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்ற கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் சைவ உணவு விடுதியில் மட்டுமே சாப்பிட முடியும்.
இதுபோல் தான் பல கடவுள் கொள்கை உடைய ஒருவர் முஸ்லிம்கள் நம்பும் கடவுளையும் ஏற்றுக் கொள்வதில் அவருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம் வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தையை எப்படி வளர்ப்பது, சொத்துக்களை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று பல விஷயங்களில் அத்தம்பதிகள் வேறுபடுவார்கள்.
அதே சமயம் பல கடவுள்களை நம்புகின்ற ஒருவர் அது தவறு என்பதை உணர்ந்து ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை முஸ்லிம்கள் திருமணம் செய்யலாம். சாதி அடிப்படையிலான துவேஷ உணர்வு இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவரைத் திருமணம் செய்யக் கூடாது என்பது கொள்கை சம்மந்தப்பட்ட முடிவாகும்.
பிறப்பின் காரணமாக உள்ள உயர்வு தாழ்வு இதற்குக் காரணம் இல்லை. இஸ்லாம் என்பது ஒரு கொள்கையின் மீது நிறுவப்பட்டுள்ளது. எனவே அக்கொள்கையை ஏற்பவர்களைத் திருமணம் செய்யலாம். ஏற்காதவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவதைக் குறை கூற முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!