என் கண்ணாடி எங்கே?

 




என் கண்ணாடி எங்கே?


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும்.


இக்காலத்தில் இந்த சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு அற்புதமான குணநலனை இந்த ஹதீஸ் விவரிக்கிறது,

பொதுவாக இன்று யாருடைய பேச்சையும் யாரும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இல்லை. என் கருத்தே மிகச்சரியானது என்று கொடிபிடிக்கும் காலமிது, அது சமூகமாக இருந்தாலும், ஊராக இருந்தாலும், இயக்கமாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் தனி மனிதனாக இருப்பினும் இதுவே நிலை.


நிலை இப்படி இருக்க பெருமானாரின் கருத்தை கேளுங்கள், உங்களில் ஒருவர் தன் சகோதருக்கு கண்ணாடி, கண்ணாடி என்றால்? தலைவாறவா? என்றால் இல்லை தலைக்குள் (மூளை) வருட.

கண்ணாடி எப்படி தனக்குள் எத்தனை கீறல்கள் இருந்தாலும் எதிரில் நிற்பவரின் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய தூசியை கூட தெளிவாக சுட்டிகாட்டுமோ அப்படித்தான் ஒரு முஃமின் இருப்பார் என்கிறது இந்த ஹதீஸ்.

ஒகோ! நம்மிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டும் தான் நாம் திருத்தவேண்டுமா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.


இந்த நிலையை ( இன்றைய சமூக நிலையை ஒழிக்க வந்தது தான் இந்த ஹதீஸ்) அல்லாஹ்வும் அவன் தன் தூதரும் மனிதனின் இயற்கை இயல்புகளைப்புரிந்தால் மிகத்தெளிவாக நம்மை பண்படுத்துகினர்.

பொதுவாக மனித இயல்பு அவனின் நிலைப்பற்றி அவனுக்கு தெரியாது அடுத்தவர்களைப்பற்றியே அதிகமாக பார்த்தும் யேசித்தும் கொண்டிருப்பான். 


அடுத்தவர்களைப் பற்றி ஒரு செய்தி செல்லப்பட்டால் அவன் ஃபிராட், அவன் ரெம்ப ஒழுக்கமானவனா? அவனைப்பற்றி தெரியாத என்பது போன்றவைத் தான் பதிலாக வரும்.

இந்நிலையை நுட்பமாக விளங்கியதால் இஸ்லாம் மனிதனின் குணங்களையும், ஆற்றல்களையும் வேறோரு நிலையாக மாற்ற முடியுமே அல்லாது அதை மெத்தமாக அழித்துவிட்டு அதில் மனிதத்தை எழுப்ப முடியாது என்ற கொள்கையை தன் தாரக மந்திரமாக வைத்துள்ளது.


ஒரு முஃமின் தன் சகோதர் பார்வை மூலமாக தம்மை எப்படி மேம்படித்திக்கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை இந்த இடத்தில் எடுத்தாளுகிறது.


எந்த மனிதனும் தம்மிடம் உள்ள குறைகளை அவ்வளவாக அறியமாட்டான் (அறிந்து வைத்திருந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டான்) , உங்களைப்பற்றியே உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களைப்பற்றி நீங்கள் வரைந்து வைத்திருப்பது நீங்கள் ரெம்ப நல்லவர் என்பதாகத்தான் இருக்கும்.


இந்த ஒரு பார்வைதான் தம் சுயமுன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் தடைக்கல். ஆகையால் ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள முற்படுகிற போது அவனுக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது அடுத்த ஒரு முஃமினான மனிதன் தான். அவனிடமிருந்து தன்னை பற்றி வரும் செய்திகளை வைத்து அதை நீக்கி தன்னிலை உயர்த்திககொள்வான், இவன் மற்ற சகோதர்களுக்கு கண்ணாடியாக ஆகும்போது ஒரு முழு சமுதாய முன்னேற்றமும், சமுக மாற்றமும் ஏற்பட இது மிகப்பொரும் காரணமாக இருக்கும்.


அடுத்து, இது ஒரு மனிதனிடம் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை ஏற்படுத்தும், இந்த ஏற்றுக்கொள்ளு பக்குவம் இல்லாததால் தானே இன்று சமூக சீரழிந்து நேர்கதியாக நிற்கிறது.

அடுத்து கண்ணாடியிடம் இருக்கிற கீறல்களால் நாம் என்றும் அதை பார்த்து சீவாமல் இருந்து விடுவதில்லையே. இன்று சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள சிலர் மக்களுக்கு மத்தியில் வரும்போது முகமூடி அணிந்த மிக நல்லவர்களைபோல் வலம்வருபவர்கள் கூட தன் குளியலரையில் கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள் என்பது தற்கால ஆய்வேட்டின் வேடிக்கையான ஆனால் உணமையான தகவல்.


தன் சகோதரனைக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும் தன்னை கொண்டு இந்த சமூக மக்களுக்கு பிரையோஜம் ஏற்பட் வேண்டும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயமே.

சரி, நாளை காலையிருந்து இந்த வேலை ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு ஆளாப்பர்த்து என்னப்பா இப்படி பண்ற? நீ பண்றது சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள்

அதை எப்படி செய்யனும் மிர்காத் என்ற ஹதீஸ் விரிவுரை நூலில் மிக அழகாகவே எழுதியிருக்காங்க. 


அடுத்தவர்களை திருத்த புறப்படும் முன் நாம் பாடம் பயிலவேண்டிய இடம் நாம் தான்.


1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவருக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும்.

ஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்துகாக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும்.


அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும்.

ஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான்.

அவர் சொன்னார் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா? அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா? அப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா?

அப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும்.


உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும்.

அடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும்.

ஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது.

அடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை, அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும்.


2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது. சில பேர் '' யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்''. தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம்.


3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில், ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர்.

இதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே, ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள்.


நீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள்.

இதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.




கருத்துகள்