பெண்ணின் குணம்

 


பெண்ணின் குணம்


நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி-5184


இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள்.  பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி விடலாம். வளைந்தேயிருக்கிற எலும்பை நிமிர்த்தப் போனால் அது நிச்சயம் உடையத்தான் செய்யும்.


பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு மனைவியை நிர்வாகம் செய்தால், விட்டுக் கொடுத்துப் போனால் அவளிடம் இன்பத்தை அடையலாம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அவளிடம் கோணல் இருக்கத் தான் செய்யும் என்று நபியவர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்கள்.


அதே நேரத்தில் மார்க்கத்திற்குப் புறம்பானவைகள் இருந்தால், பாரதூரமான விஷயங்களாக இருந்தால் கண்டிக்க வேண்டுமே தவிர மற்றபடி குணங்களில் ஆண்களைப் போன்று பெண்களிடம் எதிர்பார்க்கவே கூடாது. கோள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புறம் பேசிக் கொண்டே இருப்பார்கள். தொனத் தொனவென சின்னஞ்சிறிய விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பார்கள். அற்பத்திலும் அற்பமான விஷயத்தில் கூட பிரச்சனையைக் கிளப்புவார்கள். சந்தேகப்படுவார்கள்.


உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், கணவன் தனது தங்கைக்கு சட்டை எடுத்துக் கொடுத்தால் கூட தனது எதிர்ப்பை கணவரிடம் கடுமையாகக் காட்டுவாள். மனைவிக்குக் கணவன் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் நீங்கள் எப்படி உங்களது தங்கச்சிக்கு சட்டை எடுத்துக் கொடுக்கலாம் என்று சண்டைக்கு வருவார்கள். அந்த நேரத்தில் ஆண்கள் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிட வேண்டும்.


இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு நாமும் சண்டை போட்டால் நிம்மதியை இழக்க வேண்டியதுதான். இப்படித்தான் எல்லா பெண்களும் இருப்பார்கள். நம் மனைவி நம்மிடம் கேட்டது போன்றே நமது தங்கையும் அவளது கணவனிடம் இப்படித்தான் சண்டை போடுவாள் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர மற்றபடி அவைகளை மனதில் போட்டு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.


எனவே இவற்றையெல்லாம் ஒரு விவகாரமாக ஆக்கி, சண்டை போட்டுக் கொண்டு, கணவன் மனைவி பிரிய வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்த எந்தத் தேவையும் இல்லை. இதற்குத்தான் நபியவர்கள் பெண்களிடம் வளைவு இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் போன்று இருக்க மாட்டார்கள் என்றும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


நபிகள் நாயகம் சொல்லித் தந்த அடிப்படையில் மனைவிமார்களை நிர்வகிக்கத் தெரியாதவர்கள் தான் சின்னஞ் சிறியதையெல்லாம் பிரச்சனைகளாக்கி, கடைசியில் விவாகரத்து வரை கொண்டு வந்துவிடுகிறார்கள். நமது ஜமாஅத்திற்கு வருகிற குடும்ப விவகாரங்களில் பெரும்பாலும் இதுபோன்ற உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் தான் காரணமாக இருக்கிறது.


இல்லாத பிரச்சனைகளுக்காக குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு சண்டை போடுவதைப் பார்க்கிறோம். இப்படி சாதாரணமான காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிவதில் எந்த நியாயமும் கிடையாது. நம்மிடம் வருகிற கணவன் மனைவி குடும்ப பிரச்சனைகளை அலசினால், என்னைப் பற்றி இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று மனைவியும், எனது நண்பர் வந்திருந்த போது டீ போட்டு தராமல் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தினாள் என்று கணவனும், ஒன்றுக்கும் உதவாத காரணங்களைத் தேடிக் கொண்டு கடைசியில் விவாகரத்து வரை போய்விடுகிறது. எனவே ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது சில குறைகளுடன் தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அதேபோன்று பெண்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டால் எடுத்த எடுப்பிலேயே கையை நீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தைப் பார்க்கிறோம். தன்னை ஒரு ஆண் என்று காட்டுவதற்காகவே பலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். இது தவறானது. ஆனாலும் மார்க்கத்தில் அடிப்பதற்குக் கூட ஒரு சில இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பகிரங்கமான அசிங்கத்தை ஆபாசத்தை கணவனிடத்தில் மட்டும் நடத்துகிற தாம்பத்யத்தை தவறான வழியில் ஈடுபடுத்தும் போது கணவன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.


எனவே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கைநீட்டி மனைவியை அடிப்பது மிகவும் தவறான நடைமுறை. மார்க்கம் ஒருக்காலும் இதை அனுமதிக்கவே இல்லை. ஒருவன் தனக்குச் சமமான ஒருவருடன் போட்டிபோட்டால் சண்டையிட்டால் அதில் நியாயம் இருக்கிறது எனலாம். தன்னை விட உடல் அளவிலும் மனதளவிலும் பலவீனமானவளுடன் சண்டையிடுவது, அடிப்பது நியாயமில்லை. இன்னும் சொல்வதெனில், கணவனிடம் அடைக்கலம் பெற்றவளாகத்தான் மனைவி என்பவள் இருக்கிறாள். எனவே அடைக்கலத்தை பாதுகாப்பவனே உண்மைக் கணவன் என இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. எனவே நபியவர்கள் இதையும் கண்டிக்கிறார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)


நூல்: புகாரி-5204


பகலில் கோபத்தில் மனைவியை அடித்துவிட்டு, நாணத்தை விட்டுவிட்டு இரவில் அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து “வெட்கமில்லையா?” என்று நபியவர்கள் கேட்கிறார்கள். மனைவியை அடிப்பவர்களுக்கு அறிவில் உரைப்பதற்காக, சூடு சுரணைக்காக இப்படி கேள்வி கேட்கிறார்கள்.


மனைவியை அடித்துவிட்டு அவளோடு தான் குடும்பம் நடத்த வேண்டும். அவள் சமைத்த உணவைத்தான் சாப்பிட வேண்டும். அவளுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி அவளிடம் தான் ஒன்றாக வாழ்கிறோம் எனில் ஏன் மனைவியை அடிக்க வேண்டும்? எதற்காக அடிக்க வேண்டும்? இப்படியெல்லாம் அடிப்பவன் ரோஷமிக்க கணவனில்லை என்று நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.


ஆக, ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது பெண்களின் தன்மைகளில் கூடுதல் குறைவுகள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் எல்லாப் பெண்களும் இருப்பார்கள் என்று பிரச்சனை செய்யாமல் குடும்பத்தை நடத்திட வேண்டும். இதற்கு நல்ல சிறந்த உதாரணமாக நபிகள் நாயகத்தின் மனைவிமார்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லலாம். உலகிலுள்ள முஸ்லிமான, முஃமினான பெண்களில் நம்மை விடவும் நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் மேலானவர்கள், நல்லவர்கள் என்று நாமெல்லாம் நம்புகிறோம். அது சரிதான்.


நமது மனைவிமார்களை விட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் இறையச்சம் மிக்கவர்கள்; ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள்; கணவனை மதித்து நடப்பவர்கள்; கட்டுப்படக் கூடியவர்கள் என்றெல்லாம் நம்புகிறோம். அதுவும் மிகச்சரியான நம்பிக்கை தான். இப்படியெல்லாம் நம்பப்படுகிற நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள், கணவனிடம் நடந்து கொள்கிற விதத்தில் மனைவி என்ற அடிப்படையில் நமது வீட்டுப் பெண்களைப் போன்று தான் இருந்திருக்கிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் போன்ற அந்தஸ்தெல்லாம் நம்மிடம் கிடையாது. மனைவியிடத்தில் கணவன் என்ற அந்தஸ்து மட்டும் தான் நம்மிடம் உண்டு. அதற்கு மேல் நமக்கும் நமது மனைவிமார்களுக்கும் இடையில் வேறு எந்த அந்தஸ்தும் கிடையாது. ஆனால் நபியவர்களோ நம்மைப் போன்று மனைவிமார்களுக்கு கணவன் என்ற அந்தஸ்துடனும், நம் எல்லோரையும் விடவும் சிறப்பான அல்லாஹ்வின் தூதர் என்று அந்தஸ்துடனும் வாழ்ந்தவர்கள். அப்படியெனில் நபியவர்களிடம் வாய் கூட திறந்து பேசாமல் அவர்களது மனைவிமார்கள் வாழ்ந்திருக்க வேண்டும். மிகவும் கவனத்துடன் நடந்திருக்க வேண்டும்.


அதாவது ஒரு கணவனிடத்தில் ஒரு மனைவி எவ்வளவு கட்டுப்பாடுடன் நடக்க வேண்டுமோ அதைவிடப் பன்மடங்கு கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால் இது விஷயத்தில் நாம் ஆய்வு செய்து பார்த்தால், நமது மனைவிமார்களைப் போன்று தான் நபியவர்களின் மனைவிமார்களும் நபியவர்களிடத்தில் சராசரியாக நடந்திருக்கிறார்கள்.


அதே நேரத்தில் வணக்க வழிபாடுகள், இறையச்சம் போன்றவற்றிலெல்லாம் நம்மை விடக் கூடுதலாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வருகிற போது தமது கணவர், நபி என்பது கூட சில நேரங்களில் மறந்துவிடுகிறது. அப்படி சம்பவங்கள் நடக்கும் போது நபியவர்கள் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பதைப் போன்று நபியவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.


நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்து கொண்டதைப் போன்று நம்மிடம் நமது மனைவிமார்கள் நடந்திருந்தால் ஓங்கி அடித்துவிடலாம் என்பது போன்று கோபம் வரும். அந்தளவுக்கு நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருந்தும், நபியவர்கள் “நான் கணவனாகவும் நபியாகவும் உங்களுக்கு இருக்கிறேன்; என்னிடமே இப்படிச் செய்கிறீர்களா?” என்று மனைவிமார்களைப் பார்த்து கேட்டதில்லை. எதிர்த்ததாகத் தெரியவில்லை. சாதரணமாக எடுத்துக் கொண்டு தான் வாழ்ந்த காட்சிகளை ஆதாரங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதளில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே” என்று கூறிட வேண்டும். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை).


ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்துவிட்டேன்” என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!” என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)


நூல்: புகாரி-4912


நபியாகவும் கணவராகவும் இருந்த நபியவர்களிடம் இப்படி இறைவன் கண்டிக்கிற அளவுக்கு இந்த இரண்டு மனைவிமார்களும் நடந்து கொண்டுள்ளார்கள். இறைவன் தன்னைக் கண்டித்ததற்காக, இந்த இரண்டு மனைவிமார்களையும் இழுத்துப் போட்டு நபியவர்கள் அடித்தார்களா? இல்லை. இல்லவே இல்லை.


மார்க்கத்திலேயே நான் ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு என்னை வழிவகுத்து விட்டீர்களே! என்று கோபப்பட்டு மனைவிமார்களைக் கடிந்து கொண்டார்களா? இல்லை. எந்தக் கோபத்தையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளவே இல்லை. இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். ஆக இப்படியெல்லாம் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.


ஒரு பிரயாணத்தில் ஆயிஷா நாயகியை அழைத்துக் கொண்டு நபியவர்கள் சென்ற போது, அவர்கள் இரவலாக வாங்கி வந்த கழுத்துமாலை (நெக்லஸ்) தொலைந்துவிடுகிறது. மதிப்புமிக்க மாலையாக இருந்ததால் அனைவரும் தேடவேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைசியில் தொழுகை நேரம் கடந்துகொண்டே செல்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தயம்மும் உடைய வசனம் நபியவர்களுக்கு இறங்குகிறது.


(பார்க்க: புகாரி-334)


ஆயிஷா (ரலி) அவர்கள் செய்த இந்தச் செயலின் காரணமாக அனைவருக்கும் கோபம் வந்து, அதை ஆயிஷாவின் தந்தை அபூபக்கரிடம் சென்று முறையிடுகிறார்கள். அபூபக்கர் கோபப்பட்டு திட்டுவதற்காகவோ அடிப்பதற்காகவோ ஆயிஷாவைத் தேடி வருகிறார்கள். அப்போது நபியவர்கள் ஆயிஷா (ரலி)யின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அபூபக்கர் ஆயிஷாவை வந்து அடிக்கிறார்கள். வலி தாங்கமுடியவில்லை. நபியவர்கள் தமது மடியில் தூங்கியதால் ஆயிஷா (ரலி) அசையாமல் இருந்து கொண்டார்கள்.


இவ்வளவு பெரிய விவகாரங்கள் நடந்து, எல்லோரும் கோபப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நபியவர்கள் தமது கோபத்தைக் காட்டாமல், அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தேடிப் பார்க்கச் சொல்லிவிட்டு, தமது மனைவியின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு விவகாரமாக நபியவர்கள் எடுத்துக் கொள்ளவே இல்லை.


பெண்கள் மட்டும்தான் தொலைப்பார்களா? பெண்கள் மட்டும்தான் கைதவறிக் கீழே போடுவார்களா? ஆண்களுக்கும் அப்படி நடக்கத்தான் செய்யும். மனைவியின் கைதவறி ஒரு பொருள் உடைந்துவிட்டால், உடனே கணவன், உன் பெற்றோர் உன்னை வளர்த்த லட்சணம் இது தானா? என்றெல்லாம் சண்டை போடுகிற கணவன்மார்களைப் பார்க்கிறோம். ஆண்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆண்களும் கைதவறி ஏதாவது பொருளை உடைக்கத்தான் செய்வார்கள்.


எதிர்பாராமல் என்றாவது ஒருசில நாட்களில் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும். காணாமல் போனதால் மனைவிக்கு கவலை வந்துவிடக் கூடாது; இதற்காக அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடாது என்கிற வகையில் நபியவர்கள் நடந்துகொண்ட விதம் வியப்பாக இருக்கிறது.


இந்தச் செய்தி புகாரியில் 3672, 4608 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இடங்களில் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நபியவர்களின் மனைவிமார்கள் தங்களுக்குள்ளேயே இரண்டு பிரிவினராக இருந்துள்ளனர்.


ஆயிஷா, ஹப்ஸா, ஸஃபிய்யா, ஸவ்தா இவர்கள் நான்கு பேரும் ஒரு பிரிவாக இருப்பார்கள். மற்ற மனைவிமார்கள் இன்னொரு பிரிவு. ஆயிஷா (ரலி) பிரிவினர் சேர்ந்து கொண்டு மற்ற பிரிவினருக்கு எதிராகப் பேசுவது, சண்டை போட்டுக் கொள்வது என்று இரண்டு அணியாகச் செயல்பட்டுள்ளனர்.


நபியவர்களுக்கு சில ஸஹாபாக்கள் உணவுப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கமாகியிருந்தது. நபியவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் இருக்கும் போதுதான் கொடுத்து விடுவார்கள். எல்லா நாட்களிலும் கொடுத்துவிட மாட்டார்கள். கதீஜா (ரலி)க்குப் பின் மனைவிமார்களில் ஆயிஷா (ரலி)யிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் என்பது தான் இதற்குரிய காரணமாகும். நபியவர்கள் ஆயிஷாவின் மீது வைத்த அன்பை அறிந்து கொண்டுதான் சஹாபாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.


இப்படி சஹாபாக்கள் செய்துவந்த காரியம், மற்ற மனைவிமார்களுக்கு ஒருவகையான வெறுப்பை ஊட்டியது. இதுவெல்லாம் நல்ல முறை கிடையாது, எனவே இதுபற்றி நபியவர்களிடம் தெளிவாகக் கேட்டாக வேண்டும் என்று முடிவெடுத்து ஒவ்வொரு மனைவியாக நபியவர்களிடம் வந்து இந்தப் பிரச்சனையைச் சொல்கிறார்கள்.


நாங்களும் உங்களுக்கு மனைவிமார்கள் தான். ஆயிஷா வீட்டில் நீங்கள் தங்கும் போது மட்டும்தான் சஹாபாக்கள் தங்களுக்கு அன்பளிப்பை வழங்குகிறார்கள். எங்களது வீட்டில் தங்குகிற போது அன்பளிப்பு எதுவும் வருவதில்லை. ஆயிஷாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது ஏன்? அபூபக்கர் மகளுக்காக அதிகம் நீதியை வளைக்கிறீர்களா? எங்களிடம் நீதியாக நீங்கள் நடக்கவில்லை என்றெல்லாம் கடுமையான முறையில் மற்ற மனைவிமார்கள் சண்டை போடுமளவுக்குப் பேசிவிடுகிறார்கள்.


அப்போது நபியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். அதன் பிறகு அந்தக் குறையை நபியவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சொல்லி நபியவர்களிடம் சொல்லச் சொல்கிறார்கள். அதை ஃபாத்திமா (ரலி) நபியவர்களிடம் போய்ச் சொல்கிறார்கள். அப்போது நபியவர்கள் அதெல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.


அதன் பிறகு ஜைனப் (ரலி)யிடம் சொல்கிறார்கள். ஆயிஷாவுக்கு எதிரான பிரிவினருக்கு தலைவி ஜைனப் தான். இவர்கள் கொஞ்சம் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள். ஜைனப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டையிடுகிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள். ஆயிஷா நாயகியை இழுத்துப் பேசுகிறார்கள். என்னன்ன வார்த்தைகள் என்று ஹதீஸில் வரவில்லை. ஜைனபுக்கு நாம் பதில் சொல்வதை விட, ஆயிஷா பதில் சொன்னால் நன்றாயிருக்குமே என நபியவர்கள் நினைக்கிறார்கள்.


ஜைனப் அவர்கள் எல்லை மீறியதும் ஆயிஷா எழுந்து ஜைனபின் வாயடைத்துப் போகும் வகையில் பதிலுரைக்கிறார்கள். என்ன பதில் என்பதும் ஹதீஸில் வரவில்லை. அந்த உரையாடலை சஹாபாக்கள் தெரிவிக்கவில்லை. பெண்கள் பேச்சு எப்படியிருக்கும் என நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அதுபோன்று இருந்திருக்கும். கடைசியில் ஆயிஷா (ரலி) அவர்களின் கை ஓங்கிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் நன்றாக தர்க்க ரீதியாகப் பேசுவார்கள். ஆயிஷாவின் பேச்சுக்கு முன்னால் ஜைனபு (ரலி)யால் பதில் சொல்ல முடியவில்லை.


ஜைனபின் ஒவ்வொரு கேள்விக்கும் நபியவர்கள் சார்பாகவே ஆயிஷா அவர்கள் பதில் கொடுக்கிறார்கள். இப்படி நபியவர்களுக்கு முன்னிலையில் இரண்டு மனைவிமார்கள் சண்டைபோட்டு, ஆயிஷா வெற்றி பெறுவதைப் பார்த்த நபியவர்கள், “அபூபக்கர் மகள் உண்மையில் அபூபக்கர் மகள்தான்” என்று உரைக்கிறார்கள்.


அதாவது ஆயிஷாவைப் பார்த்து, நீ அபூபக்கர் மகள் என்பதைக் காட்டிவிட்டாய் என்று கூறுகிறார்கள். ஏனெனில் அபூபக்கர் நபித்தோழர்களில் மிகவும் விபரமிக்க நபர். சின்ன சின்ன விசயங்களில்கூட மிகவும் நுணுக்காமாக சிந்திப்பவர்கள்; செயலாற்றுபவர்கள். அதனால்தான் ஆயிஷாவைப் பார்த்து, ஒவ்வொரு விமர்சனத்துக்கும் மறுப்புக் கொடுத்து ஜைனபின் வாயைத் திறக்க முடியாமல் ஆக்கிவிட்டாயே என்று சொல்கிறார்கள்.


இப்படி ஒரு நீண்ட சம்பவம் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இப்படியெல்லாம் நமது வீடுகளில் பெண்கள் நடந்து கொள்வதைப் போன்றுதான் நபியவர்களின் மனைவிமார்களும் நடந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். உரிமை என்று வருகிற போது விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இரண்டு மனைவிகள் இருந்தால் ஒரு மனைவி இன்னொரு மனைவியின் விசயத்தில் உரிமை கோருதலும் சண்டையிடுதலும் பிரச்சனைகளும் வரும்.


அம்மாவுக்குக் கொடுப்பதில், அண்ணன் தம்பிகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும் கொடுக்கிற விசயத்திலெல்லாம் பிரச்சனைகள் வரும். தனது கணவன் அவனது அக்காவிற்குக் கொடுப்பதைத் தடுப்பார்கள். பலரது மனைவிமார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் போது அக்காவைப் பார்த்துவிட்டு வந்தால், அதோடு அவன் வாழ்க்கை தொலைந்தது. இப்படியெல்லாம் பெண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.


இதுபோன்று நமது குடும்பத்தில் மாமியார் மருமகள் சண்டை போடும் போது நாம், ஆயிஷா நாயகி சண்டை போடவில்லையா? என்று நினைக்க வேண்டும். நபியவர்களின் மனைவி ஜைனப் (ரலி) அவர்கள் சண்டை போடவில்லையா? என்று நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான். பெண்கள் என்றாலே அப்படித்தான் இருப்பார்கள். அப்படி வரும் போது நபியவர்கள் சமாளித்ததைப் போன்று சமாளித்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக பெண்களை அடிமைப்படுத்திட இயலாது.


எனவே ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்வது என்பது இப்படித்தான். கரடுமுரடாக நடந்து கொண்டு, பெண்களை வெறுத்துவிடாமல் இருக்க வேண்டும். மனைவியின் மீதோ தாயாரின் மீதோ கோபம் வருகிற போது, ஆயிஷா (ரலி)யையும் ஹப்ஸா (ரலி)யையும் நினைத்தால் நமக்கு ஏற்பட்ட கோபம் தானாகவே மறைந்து விடும்.


நியாயமற்ற கேள்வி


அதேபோன்று ஆயிஷா (ரலி), நபியின் மனைவிமார்களில் மற்றவர்களை விடவும் தான் சிறந்தவள் என்று நினைக்கிறார்கள். மேலும் மற்ற மனைவிமார்களுடன் நபியவர்கள் இருப்பதை விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் ஒருநாள் நபியவர்களிடம் ஆயிஷா ரலியவர்கள், நபியவர்களே சிந்திக்காத விசயத்தைக் கேட்கிறமாதிரி பொடிவைத்துப் பேசுகிறார்கள். உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப் படாத ஒரு மரத்தையும் காண்கின்றீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)” என்று பதிலளித்தார்கள்.


தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.


நூல்: புகாரி-5077


தொலை தூரப் பயணத்தில் ஒட்டகத்தில் செல்லும் போது, மக்கள் பயன்படுத்திய ஒன்றுமில்லாத பட்டுப்போன மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? அல்லது நன்றாக பசுமையாக இருக்கிற மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் யாராக இருந்தாலும் பசுமையான மரத்தில்தான் மேயவிடுவார்கள் என்ற கருத்தைச் சொல்கிறார்கள். எதற்காக நபியவர்களிடம் இவ்வாறு கேட்டார்கள் எனில், நபியவர்களது மற்ற மனைவிமார்கள் இரண்டாம் தாரமாகவும் மூன்றாம் தாரமாகவும் வாழ்க்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவர்கள். ஆனால் ஆயிஷா (ரலி) கன்னிப் பெண்.


அப்படியெனில் தனக்குத்தான் மற்றவர்களை விடவும் நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிக் கேட்டார்கள். உண்மையில் இது நியாயமான கேள்வி அல்ல. நபியவர்கள் விரும்பியே மற்ற மனைவிகளை திருமணம் செய்தார்கள். ஆயிஷா அவர்களிடம் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படித்தான் மற்றவர்களிடமும் நடக்க வேண்டும்.  ஒரு மனைவி இப்படியெல்லாம் சொல்லும் போது கோபம் வரத்தான் செய்ய வேண்டும். ஆனாலும் நபியவர்கள் கோபப்படாமல், இதுபோன்ற பிரச்சனைகளைச் சமாளித்துத்தான் வாழ்ந்துள்ளார்கள்.


கருத்துகள்