RECENT POSTS

ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

 


ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்


நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.


அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம்.


வலிக்கு ஓதிப் பார்த்தல்


நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை தொட்டு அதனால் மண்ணைத் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்த்துள்ளார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி,


بِاسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، لِيُشْفَى بِهِ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا


பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஃளினா லியுஷ்ஃபா பிஹி சகீமுனா பிஇத்னி ரப்பினா


“அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்” என்று கூறுவார்கள்.


நூல்: முஸ்லிம்-4417


நபியவர்கள் மேற்கண்ட வழிமுறையுடன் பல்வேறு முறைகளில் ஓதிப்பார்த்தலை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.


வலக்கரத்தால் வலியுண்டான இடத்தைத் தடவி ஓதிப்பார்த்தல்


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து,


اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ البَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்


என்று பிரார்த்தித்தார்கள்.


(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)


நூல்: புகாரி-5743


ஓதி, கைகளில் ஊதித் தடவுதல் 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.


நூல்: புகாரி-5748


இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள் என புகாரி 5018வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.


நோயுற்றவர் தாமாகவே இந்த அத்தியாயங்களை ஓதி தம்மீது தடவிக் கொள்ளலாம். நபியவர்கள் தாம் நோயுற்ற போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்கு ஓதிப்பார்க்குமாறு வேண்டியுள்ளதால் நாமும் மற்றவர்களிடம் அவ்வாறு தமக்குச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம்.


ஓதி வலியேற்பட்ட இடத்தில் உமிழ்தல்


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க மறுத்து விட்டார்கள்.


பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. ஆகவே, அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எலலா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை.


உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது! என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஒரு ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.


அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…’ என்று ஓதி உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று (நபித்தோழர்) ஒருவர் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப்பார்த்தவர் கூறினார்.


நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு, நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறினார்கள்.


நூல்: புகாரி-5749


நோய், துன்பம், மற்றும் கவலைகளின் போது ஓதும் துஆக்கள்


நோய் மற்றும் கவலை துன்பம் நீங்குவதற்காக பல்வேறு துஆக்களை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.


நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் பிரார்த்தனைகள்.


நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர் தானே செய்யும் பிரார்த்தனைகள்.


மற்றவர்கள் நோயாளிகளுக்குச் செய்ய வேண்டிய துஆக்கள்


மேலே நாம் குறிப்பிட்டுள்ள அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹும்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நாம் நோயாளிகளுக்காக ஓதிக் கொள்ளலாம்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால்,


لاَ بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.


(தமது அந்த வழக்கப்படியே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்துவான் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, “நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3616


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன்னுடைய மரணத்தை நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது ஏழு தடவை 


أَسْأَلُ اللهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ


அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக”


(உனக்கு ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) என்று கூறினால் (கண்டிப்பாக) அவர் ஆரோக்கியம் வழங்கப்படுவார்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத்-2137


நபியவர்கள் நோயுற்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் துஆவைக் கொண்டு ஓதிப் பார்த்துள்ளார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது,


بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ


“பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க” என்று ஓதிப் பார்த்தார்கள்.


(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்.)


அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி)
நூல்: முஸ்லிம்-4403


நோயாளி ஓதவேண்டிய பிரார்த்தனைகள்


மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம்  நாம் சுட்டிக் காட்டியதைப் போன்று, அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹூம்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நோயாளிகள் ஓதிக் கொள்ளலாம்.


உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து,


“பிஸ்மில்லாஹ்’ என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை


أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ


“அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு’ என்று சொல்வீராக” என்றார்கள்.


(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)


நூல்: முஸ்லிம்-4430


அய்யூப் நபியவர்கள் தமக்குக் கடுமையான நோய் ஏற்பட்ட போது பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.


அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வஅன்த்த அர்ஹமுர் ராஹிமீன்.


“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனைப் பிரார்த்தித்தார்.


(அல்குர்ஆன்:21:83.)


ஒருவருக்குத் தாங்க முடியாத துன்பம் அல்லது நோய் ஏற்படும் போது பின்வருமாறு பிரார்த்திக்கலாம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,


اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي


“இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்.


இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்: புகாரி-6351


தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா?


தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.


சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.


உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன் அவருடைய குழந்தையும் இருந்தது.


அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது” என்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது.


தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.


உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்” என்று கூறினார். மேலும் (உம்மு ஜுன்துப்) கூறுகிறார்: நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதாரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினாள்.


நூல்: இப்னு மாஜா-3523


இந்த ஹதீஸைத் தான் தண்ணீரில் ஓதி ஊதும் தொழில் செய்வோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.


இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் பலமானவர் இல்லை’ என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.


அபூஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீனமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக ஆக்கக் கூடாது’ என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்’ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இவரிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன’ என்றும் விமர்சித்துள்ளனர்.


யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.


இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.


நூல்: தஹ்தீப் தஹ்தீப், (பாகம்: 11, பக்கம்: 288)


மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் “சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்” என்ற அறிவிப்பாளரும் இடம் பெற்றுள்ளார். “இவர் யாரென்றே அறியப்படாதவர்” ஆவார்.


இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.


ஒரு வாதத்திற்கு இது சரியானது என்று வைத்துக் கொண்டால் கூட இதில் எந்த ஒன்றையும் ஓதி ஊதிக் கொடுத்ததாக வரவில்லை. நபியவர்கள் எதையும் ஓதாமல் தம்முடைய கைகளைக் கழுவி வாய்கொப்பளித்து கொடுத்ததாகத் தான் வந்துள்ளது.


மேலும் நபியவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் தேடச் சொன்னதாகத் தான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ளது.


இது சரியானதாக இருந்தால் கூட நபியவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு என்று தான் கருத முடியுமே தவிர இதிலிருந்து அனைவரும் இவ்வாறு செய்யலாம் என்று சட்டம் எடுப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதில் இல்லை. ஓதி, தண்ணீரில் ஊதிக் குடிக்கலாம் என்பவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபியவர்கள் அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். “மனிதர்களின் இரட்சகனே ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோயைக் குணப்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு பத்ஹான் (என்ற இடத்தில்) இருந்து மண்ணை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டார்கள். பிறகு தண்ணீரை அதில் ஊதி அதனை அவர் மீது கொட்டினார்கள்.


நூல்: அபூதாவூத் 3387


இந்த ஹதீஸ் ஓதி, தண்ணீரில் ஊதுவதைப் பற்றிப் பேசவில்லை என்பதுடன் இது பலவீனமான ஹதீஸாகவும் உள்ளது.


இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் யூசுஃப் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யார் என்று அறியப்படாதவராவார். இவர் நம்பகமானவர் என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.


கருத்துகள்