கோடை வெயிலில் கல்வி தாகம்
கோடை வெயில் தனது வேலையை மிகக் கச்சிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓரிரு மணி நேரங்களுக்கு மேல் வாகனங்களில் பயணிக்க முடியவில்லை. ஒரு தர்பூசணியை உள்ளே அனுப்பினால் தான் நம்முடைய ஆற்றலை ஒருசில மணி நேரத்திற்காவது தக்க வைக்க முடியும்.
வெயில் அதிகமாவதைப் போன்றே நம் குழந்தைகளின் மீதுள்ள அக்கறையும் அதிகரிக்கிறது. கோடை விடுமுறை வேறு வந்து விட்டது. இனி இரண்டு மாதங்களுக்குக் குழந்தைகள் நம்முடன் தான் இருப்பார்கள். நம்முடன் இருப்பதை விட வெயிலுடன் தான் அதிகமாக இருப்பார்கள் என்று சொல்லலாம்.
பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற தாகத்தைத் தீர்ப்பதற்காகவும், அவர்களுடய உடல் நலத்தைப் பேணுவதற்காகவும் என்ªன்ன செய்யலாம்? எங்கே சுற்றுலா செல்லலாம் என்று பலரும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி எனும் தாகத்தை ஊட்டி, அதற்கான தீனியைப் போட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்ற பெற்றோர்கள் என்னவோ குறைவுதான்.
வருடத்தின் அனைத்து நாட்களும் நம்முடைய பிள்ளைகளுக்கு உலகக் கல்வியை கற்றுக் கொடுப்பதற்காக எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தோம்? எத்தனையோ தந்தைமார்கள் தங்களுடைய பல நாள் வேலை போனாலும் பரவாயில்லை என்றெண்ணி, பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக ஏறி, இறங்கியிருப்பார்கள். தாய்மார்கள் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லித் தருவதற்காக தங்களுடைய பல நாள் தூக்கத்தைத் தியாகம் செய்திருப்பார்கள்.
ஆனால் நம் வீட்டில் கோடைகாலப் பயிற்சிக்கான துண்டுப் பிரசுரங்கள் வந்திருக்கும். வருடம் முழுவதும் உலகக் கல்விக்காகப் பாடுபடும் பெற்றோர்களில் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்குச் சுயமாக மார்க்க அறிவு வளர வேண்டும், அவன் மார்க்கத்தில் தெளிவு பெற வேண்டும் என்று விரும்பியிருக்கிறோம்?
ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். தம்முடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தன்னுடைய மனைவி, மக்களுக்கு பொறுப்பாளி. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி. அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
நூல்: புகாரி-2409
நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறோம். குழந்தைகளுக்கு உலகக் கல்வி கற்றுக் கொடுத்தோம் தவறில்லை. அவர்களுக்கு மார்க்கம் சம்பந்தமாக நாம் எவ்வளவு கற்றுக் கொடுத்திருக்கிறோம்? அல்லது அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டால் அல்லாஹ் நம்மை விசாரிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டிருக்கிறோமா?
நம்முடைய குழந்தைகளை நோக்கி நீ டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும், இவ்வாறு சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று அவர்கள் மீது உள்ள அக்கறையில் அன்றாடம் அறிவுரை கூறுகிறோம். தவறில்லை! ஆனால் அவர்களை நோக்கி, நீ மார்க்கத்தில் விளக்கம் பெற்றவனாக மாற வேண்டும், நீ தொழுகைகளை அன்றாடம் சரிவர கடைப்பிடிக்க வேண்டும் என்று மறுமைக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிய பெற்றோரை நம்மால் அதிகம் காண முடியவில்லை.
திருமறைக் குர்ஆனை புரட்டிப் பார்க்கும்போது நமக்கு முன் வாழ்ந்த, அல்லாஹ்வால் புகழப்பட்ட ஏராளமான நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். ஒழுக்கமான குழந்தைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் விரும்பிக் கேட்டும் இருக்கிறார்கள்.
நபி நூஹ் (அலை)
11:42 وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!’’ என்று நூஹ் கூறினார்.
(அல்குர்ஆன்:11:42)
இப்ராஹிம் (அலை)
37:100 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
(அல்குர்ஆன்:37:100)
இஸ்மாயில் (அலை)
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ
19:55 وَكَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டு வீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
(அல்குர்ஆன்:19:54, 55)
இறையச்சவாதிகளின் வார்த்தை
25:74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன்:25:74)
இப்படி ஏராளமான நபிமார்கள், நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகள் சரிவர வளரவேண்டும் என்றும், ஒழுக்கமிக்கவர்களாக மாற வேண்டும் என்றும், அவர்களுடைய இம்மை வாழ்வு மற்றும் மறுமை வாழ்வு ஆகிய இரண்டும் சீராக அமைவதற்காகவும் அவர்களுக்கு அற்புதமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து இருக்கிறார்கள்.
மேற்கண்ட வசனங்களையெல்லாம் எடுத்துப் பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் நமது பிள்ளைகள் இவ்வாறு ஆகி விடக்கூடாது என்றால் அவர்களுக்கு நேரத்திற்கேற்ற சரியான அறிவுரைகளும் பயிற்சிகளும் தேவை.
இன்றைக்கு ஆண்ட்ராய்டு பிடியில் மாட்டி கொண்டிருக்கும் சமுதாயத்தில் வாழக்கூடிய சிறு வயதுக் குழந்தைகளின் கரங்களில் தான் நாம் யோசித்துப் பார்க்க முடியாத அசிங்கங்களும் அனாச்சாரங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
புளுவேல் எனும் விளையாட்டின் மூலம் முட்டாள்தனமாக உயிரை விட்ட பிள்ளைகள், சிறுவயதிலேயே பாலியல் தாக்கத்துக்கு இரையாகி அதன் மூலம் தவறிழைக்கும் குழந்தைகள், சினிமாக்களைப் பார்த்து அதில் வரக்கூடியவனைப் போன்று தானும் புகை பிடிப்பேன், மது அருந்துவேன், காதலிப்பேன் என்று தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் வாழும் குழந்தைகள் என இவர்களுடைய இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கொஞ்சம் யோசியுங்கள்! நாம் மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் மேலே கூறிய அதே வர்ணனையுடைய உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுடய பிள்ளைகள் இந்தப் பட்டியலில் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நபிகளாரின் அமுதமொழிகள் அவசியம். சிறுவர்களுக்கு நபிகளார் கொடுத்த பயிற்சிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தொழுகை பயிற்சி
நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள்.
அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்.
மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹு தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-183
இன்று நம்முடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் காலையில் ஃபஜ்ர் தொழுகைக்குக் கூட எழுப்பி விடாத பெற்றோர்களாகத் தான் நாம் இருக்கிறோம். இவ்வாறு சிறிய வயதில் நாம் கொடுக்கின்ற பயிற்சி தான் நாளைக்கு அவர்கள் சீரழியாமல் இருப்பதற்கான ஆயுதம் என்று சொல்லலாம். ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்புகளையெல்லாம் தவற விட்டுவிட்டு, கடைசியில் என்னுடய குழந்தைக்கு மறுமை சம்பந்தமாக எந்த ஒன்றையும் நான் சொல்லித் தரவில்லையே என்று புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை.
துஆ மனனப் பயிற்சி
ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வித்ரில் நான் ஓதவேண்டிய வார்த்தைகளை அவர்கள் எனக்கு கற்று தந்தார்கள்.அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லி வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு ல யதுள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)
நூல்: திர்மிதீ-464 (426)
பெரியவர்களாக வளர்ந்ததற்கு பின்னால் தவறான பாதைக்கு நம்முடைய குழந்தைகள் செல்லக்கூடாதென்றால் நபிகளாரை போன்று இறைவனை துதிக்கின்ற துஆ க்களை அதிகமாக கற்று கொடுக்கவேண்டும்.
இஸ்லாமிய ஒழுங்குகளை கற்று கொடுத்தல் :
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அறிவிப்பவர்: உமர் பின் அபீ சலமா (ரலி
நூல்: புகாரி-5376
இன்றைக்கு தவறுகளுக்கு அடிப்படை காரணம் சிறிய வயதில் குழந்தைகளுக்கு எது ஹராம் எது ஹலால் என்று பெற்றோர்கள் பிரித்து சொல்லித்தராததுதான். இதோ நபிகளாரின் வழிமுறை…
மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களை கொண்டு வந்தததும் அது ஒரு பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவார்களான )ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபிகளார் உடனே அதை வெளியே எடுத்து “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக்கூடாது என்பதை நீ அறியவில்லையா?’’ எனக்கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-1485
நமது பிள்ளைகளும் நபிகளார் காலத்துப் பிள்ளைகளும்
அப்படியானால் நாங்கள் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று கூற வருகிறீர்களா? என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் நம்முடைய நோக்கம் அதுவன்று. மாறாக நம் குழந்தைகளை நபிகளார் காலத்துச் சிறிய வயது ஸஹாபாக்களைப் போன்று சரியாகத் தான் வளர்த்து இருக்கிறோமா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பீடு.
நபிகளார் காலத்தில் சிறு வயதினர் எப்படி வார்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
குர்ஆனை அதிகம் மனனம் செய்த இப்னு அப்பாஸ் (ரலி)
நான் அல்லாஹ்வின் தூதர் (வாழ்ந்த)காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் ‘அல் முஹ்கம்’ என்றால் என்ன என்று கேட்டேன் அவர்கள் ‘அல் முஃபஸ்ஸல்’ தான் (அல் முஹ்கம்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
நூல்: புகாரி-5036
நம்முடைய குழந்தைகளிடம் கேட்டால் எனக்கு இத்தனை படத்தில் உள்ள முழுப்பாடல்களும் தெரியும் என்று வேண்டுமானால் கூறுவதற்கு வாய்ப்பதிகம். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அல்முஹ்கம் என்று பெயரிடப்பட்ட அத்தியாயங்களை மனனம் செய்துள்ளார்கள்,
ஏழு வயதில் அனைவருக்கும் இமாமத் செய்த அம்ர் பின் ஸலிமா (ரலி)
திருக்குர்ஆனை அனைவரை விடவும் அதிகமாக மனனம் செய்து இமாம் என்ற கண்ணியத்தையும் பெற்று தம்முடைய தாய், தந்தையாருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த ஒரு (சிறிய) நபித்தோழரைப் பாருங்கள்.
மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள்.
எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன்.
நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா (ரலி)
நூல்: புகாரி-4302
இறுதியாக…
போன வருடம் ஊட்டி சென்றோம், அதற்கு முந்தைய வருடம் கொடைக்கானல் சென்றோம், இந்த வருடம் எங்கே செல்லலாம் என்ற திட்டம் தான் ஒவ்வொரு பெற்றோருடைய கோடைகால யோசனைகளாக இருக்கும். ஆனால் இந்த வருடம் முதல் அந்தத் திட்டத்தில் ஒரு சிறிய மாறுதலோடு, நமது ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற கோடைகாலப் பயிற்சிக்கு அனுப்பிய பிறகு ஊட்டி போகலாமா அல்லது கொடைக்கானல் போகலாமா என்ற திட்டம் அனைத்து பெற்றோர்களின் உள்ளத்திலும் உதிக்க வேண்டும்
இன்ஷா அல்லாஹ்.
ஏனென்றால் ஒரு தந்தைக்குத் தனது மகன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான் என்பதோ அல்லது அவன் பெரிய வீடு கட்டிவிட்டான் என்பதோ மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை விட, அவனிடம் மார்க்கம் சம்பந்தமாக ஏதேனும் கேட்கப்பட்டால் அதற்குச் சரியான பதில் கூறுவான் என்பதே அவருக்கு அதிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
உமர் (ரலி) அவர்களுடய எண்ணம் இவ்வாறே இருந்தது.
‘ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறை நம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்தேன்.
அப்போது மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்’ என்றனர். ‘அது பேரீச்சை மரம் தான்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தைக் கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் ‘நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்’ என்றார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி-131
மறுமை வெற்றிக்காக வேண்டி நாம் அனுப்புகின்ற இந்தப் பயிற்சி என்பது அவர்களை மிகப் பெரிய ஆலிமாக ஆக்காது. எனினும் அவர்கள் சொர்க்கம் எனும் நிரந்தர வீட்டைக் கட்டுவதற்கான ஒரு செங்கலாக அமையலாம். அதை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!