Italian Trulli

அன்புச் சகோதர சகோதரிகளே!

 


அன்புச் சகோதர சகோதரிகளே!


நான் படித்தறிந்த சில திருக்குர்ஆன் வசனங்களையும், சில திரு நபி மொழிகளையும், சில நிஜ சம்பவங்களையும் தொகுத்து இச் சிறிய புத்தகத்தினை எழுதி உங்கள் முன் சமர்ப்பித்துவிட்டேன். இறுதியாக சில வேண்டுகோள்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.


தம் கடைசிக் காலத்தில் பிள்ளைகளின் தரிசனம் கிடக்காதா என்று ஏங்கி ஏங்கிக் காத்திருந்து, அந்த ஏக்கத்துடனேயே மவுத்தாகிப் போன எத்தனையோ பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பிள்ளையாக நீங்கள் இருந்தால், உங்கள் மனைவி மக்களுடன் பார்க், பீச், சினிமா சென்று மனம் மகிழ்வதைப் போல், ஒரு முறை உங்கள் பெற்றோரையும் சென்று பார்த்து வாருங்கள். கக்கூஸ் போக செலவிடும் நேரத்தில் கொஞ்சம் மிச்சப்படுத்தி பெற்றோர்களுடன் போனிலாவது கொஞ்சம் பேசுங்கள் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், சகோதர சகோதரிகளே!


பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த பெற்றோர்களை, பிள்ளைகளே கைவிட்ட போது வாழவும், உழைக்கவும் முடியாத நிலையில், பசியை பொறுத்துக் கொள்ளவும் முடியாமல், கூச்சப்பட்டு பிச்சைக் கேட்கவும் முடியாமல் தெருத் தெருவாய் அலையும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களை கைவிட்ட பிள்ளைகளில் நீங்களும் ஒருவர் என்றால், திருந்தி விடுங்கள் பிள்ளைகளே! பாவம் உங்கள் பெற்றோர்கள். 'என் பிள்ளை டாக்டர், என் பிள்ளை இஞ்சினியர், என் பிள்ளை லாயர் என்று வாய்க்கு வாய் உங்களை பெருமையாக குறிப்பிட்டுப் பேசிய அவர்களை, "எனது பெற்றோர் பிச்சைக்காரர்கள்" என்று கூறச் செய்யாதீர்கள்! பாவம், அவர்களுக்கு பசியும் பழக்கமில்லை, பிச்சையெடுத்தும் பழக்கமில்லை! உங்களைப் பெற்ற ஒரு காரணத்திற்காக உங்கள் பெற்றோர்களை பிச்சைக்கு கையேந்தச் செய்யாதீர்கள்  உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், சகோதர சகோதரிகளே!


முதுமை மற்றும் மரண வியாதிகளால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன். தம் உழைப்பு முழுவதையும் பிள்ளைகளுக்கே செலவு செய்துவிட்டு, உழைக்கவும் முடியாமல், வருமானமும் இல்லாமல் தவிப்பதையும், தம் பிள்ளைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும், சுற்றமும் நட்பும் சூழ வாழ வேண்டிய அவர்களை, அந்நியர்கள் மத்தியில் அனாதைகளாய் விட்டு வந்த பிறகு, மன உளைச்சலுடன் மவுனமாக வாழ்ந்து மவுத்தாகிப் போனவர்களைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பிள்ளைகளில் நீங்களும் ஒருவர் என்றால், தம் வயிற்றிலும், தம் மடியிலும், தம் மார்பிலும் சுகமாய் சுமந்து ஆளாக்கி விட்ட உங்கள் பெற்றோர்களை சுமையாய் கருதாதீர்கள். நன்றி கெட்ட மனிதனாக ஆகிவிடாதீர்கள் என உங்களை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன், சகோதர சகோதரிகளே!


திருவொற்றியூரில் உள்ள எனது தங்கையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எதிர் வீட்டில் ஒரு மூதாட்டி காலை முதல் இரவு வரை வேலை செய்வதைப் பார்த்தேன். வேலையை முடித்து விட்டு, வீட்டின் எதிர் புறத்தில், படிக்கட்டுகளுக்கு கீழே இருந்த சிறிய இடத்தில் ஓய்வு கொள்வதயும் பார்த்தேன். இரவில் கூட அந்த மூதாட்டி வெளியில்தான் உறங்கினார்! நான் அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மூதாட்டிதான் வீட்டு உரிமையாளரின் அம்மாவாம்! மனைவியின் பேச்சைக் கேட்டு, தனது அன்னையை வேலைக்காரி போல நடத்துகிறாராம் பிள்ளை! கேட்டதும் மனம் பதறிப்போனேன். இப்படித்தான் பணக்கார வீட்டு பிள்ளைகளின் வீடுகளில் வயதான பெற்றோர்கள், சம்பளம் இல்லா வேலைக்காரர்களாய் இருக்கிறார்களோ? அப்படிப்பட்ட பிள்ளைகளில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் உழைத்தது போதும். நாளை மறுமைக்காகவும் அவர்கள் உழைக்க வாய்ப்பு தாருங்கள், என உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன், சகோதர சகோதரிகளே!


சிறு வயது முதலே பெற்றோர்மீது வெறுப்பும், குரோதமும் கொண்டிருக்கும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன்! அவர்கள் படிக்க மாட்டார்கள். பெற்றோர்களை மதிக்க மாட்டார்கள்! பெற்றோர் சொல்லுக்கு புறம்பாக நடப்பார்கள். பெற்றோர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை நண்பர்களுடன் சேர்ந்து முற்றிலுமாக அழிப்பார்கள்! கேட்டால், சண்டை போடுவார்கள். ஹராமான காரியங்கள் அத்தனையும் செய்வார்கள்! அதனால் பெற்றோர்கள் மனம் நொந்து, மானம் இழந்து, நோயாளிகளாய், நடைப் பிணங்களாய் ஆகிப் போவார்கள்! அதே நிலையில் ஒருநாள் மவுத்தாகிப் போவார்கள்! ஆனால், அந்த பிள்ளைகளிடம் சிறு மாற்றம் கூட ஏற்படாது! அப்படிப்பட்ட பிள்ளைகளில் நீங்களும் ஒருவர் என்றால், "ஒருவருடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும், சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதர் நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக!" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்த சொல்லைக் கொண்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்!


கருத்துகள்