RECENT POSTS

கழுகின் கைமாறு

 


கழுகின் கைமாறு




வானத்தில் மிக உயரத்தில் பறந்து வட்டமிட்டுக் கொண்டு இருந்த ஒரு கழுகு, தரையில் ஒரு பாம்பு செல்வதைக் கண்டது. அந்த நல்ல பாம்பு நெளிந்து வளைந்து ஊர்ந்து கொண்டு இருந்தது.


கழுகு வேகமாகக் கீழே அம்பு போல் பாய்ந்து பாம்பைக் கொத்தியது. பாம்பும் கழுகை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருந்தது. தன் உடலை வளைத்து கழுகின் கழுத்தைச் சுற்றி கயிறால் சுற்றுவது போலத் தன் உடலால் சுற்றி இறுக்கியது.


பாம்பு கழுத்தை நெறித்துக் கொண்டு இருந்த காரணத்தால் கழுகுக்கு மூச்சு விட முடியவில்லை. திணறித் திக்குமுக்காடியது.


தற்செயலாக அப்போது ஒரு விவசாயி அவ்வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் கழுகின் பரிதாப நிலையைக் கண்டான். அதன் மீது இரக்கம் ஏற்பட்டது அவனுக்கு. விரைந்து சென்று பாம்பை அடித்து விரட்டினான். கழுகின் உயிர் காக்கப்பட்டது. கழுகு மனதிற்குள் விவசாயிக்கு நன்றி சொல்லிக் கொண்டு பறந்து சென்றது.


அடிபட்ட பாம்பு, விவசாயியின் மீது கடும் சினம் கொண்டது. தன்னை அடித்தவனை அதனால் மறக்க முடியவில்லை. அவனை எப்படியும் கொன்று விட வேண்டும் என சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தது.


அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அவன் தன் வீட்டின் வாசலில் இருந்து உணவு உண்ண ஏற்பாடுகளைச் செய்து விட்டு அமர்ந்தான். அப்போது வீட்டிற்குள் பூனை எதையோ உருட்டித் தள்ளியது.


உண்மையில் அது என்ன என்று பார்க்க, சாப்பாட்டில் கைவைத்த அவன் எழுந்து வீட்டிற்குள் சென்றான்.


அப்போது அருகில் இருந்த செடிக்குள் மறைந்து இருந்து இதனை கவனித்துக் கொண்டு இருந்த நல்ல பாம்பு வேகமாக ஓடி வந்து, அவனது உணவில் விஷத்தைக் கக்கி விட்டு வந்து அதே இடத்தில் மீண்டும் மறைந்து கொண்டது.


நல்ல பாம்பின் விஷமத்தனத்தை ஒரு மரத்தில் இருந்தபடியே கழுகு பார்த்துக் கொண்டு இருந்தது. விவசாயி திரும்பி வந்து அந்த உணவை உண்டால் செத்துவிடுவான். தன் உயிரைக் காப்பாற்றிய விவசாயியின் உயிரை நாம் காப்பாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தது.


விவசாயி வீட்டிற்குள் இருந்து வந்து, உணவுத் தட்டின் முன் அமர்ந்தான். அப்போது திடீரெனக் கழுகு பாய்ந்து வந்து உணவுத் தட்டைக் கொத்தி எடுத்துக் கீழே கொட்டியது.


கழுகின் இந்தச் செயல் விவசாயிக்குக் கோபத்தை மூட்டியது.


அப்போது பூனை பாய்ந்து வந்து அந்த உணவைத் தின்றது, உடனே அந்தப் பூனை விழுந்து உயிரை விட்டது. அதைக் கண்ட விவசாயி திகைத்துப் போனான்.


விவசாயி நடந்தவற்றைச் சிந்தித்தான். அப்போது செடிக்குள் மறைந்து இருந்த பாம்பைக் கண்டான் அவனுக்கு அப்போது தான் எல்லாமே விளங்க ஆரம்பித்தது. திடுக்கிட்டான்.


தான் உண்ணவிருந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து இருக்கிறது. தன்னைக் காப்பாற்றவே கழுகு உணவுத் தட்டைச் சிதறடித்து உள்ளது. ஒரு பறவையிடம் இத்தனை நன்றி உணர்வா! எண்ணிப் பார்த்ததும் விவசாயியின் உள்ளம் உருகியது. கழுகின் அந்த செயற்கரிய காரியம் அவன் கண்களில் நீர் முத்துக்களை விதைத்தது.


நீதி: எல்லா உயிர் இனங்களுக்கும் இறைவன் நன்றி உணர்வைப் படைத்து உள்ளான். நன்றி மறவாதவர்களின் நட்பு என்றும் உறு துணையாகே இருக்கும்.

கருத்துகள்