Italian Trulli

வளரும் பிள்ளைகள் சர்க்கரையை போன்றவர்கள்

 


வளரும் பிள்ளைகள் சர்க்கரையை போன்றவர்கள்




ஒரு ஆசிரியர் தனது வகுப்பு பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். அவர் மிகவும் கனிவானவர். எப்படிப் பட்ட கஷ்டமான பாடத்தையும் உவமையுடம் மிக எளிதாக விளக்கி விடுவார். அதனால் அந்த வகுப்பில் இருந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் என்றால் கொண்டாட்டம் தான். பாடம் எடுத்து முடித்த பிறகு பிள்ளைகள் தன்னிடம் கேள்வி கேட்க அனுமதிப்பார்.


அப்போது ஒரு பிள்ளை எழுந்து வந்து ஆசிரியரிடம், "ஐயா, நாங்கள் இந்த சமூகத்திற்கு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது?" என்று கேட்டது.


உடனே அந்த ஆசிரியர் மூன்று கண்ணாடிக் குடுவைகள் நிறைய தண்ணீரை நிரப்பி எடுத்துவருமாறு கேட்டார்.


அதன்படி மாணவர்களும் கொண்டு வந்து கொடுத்தனர்.


மாணவர்களிடம் ஆசிரியர், "தண்ணீருடன் கூடிய இந்தக் கண்ணாடிக் குடுவை தான் நமது சமூகமும், அதில் காணப்படும் வளங்களும்" என்றார்.


பிறகு முதல் கண்ணாடிக் குடுவையில் இருந்த தண்ணீரில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினார் ஆசிரியர். உடனே அந்தக் கண்ணாடிக் குடுவையில் இருந்த தண்ணீர் கலங்கி அழுக்காக மாறியது.


உடனே ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துச் சொன்னார்," இப்படித் தான் நமது நாட்டில் ஒரு சில அரசியல் வாதிகள் உள்ளனர். அதாவது இந்த சமூகத்துக்கு பாரமாக. பிரயோஜனம் இல்லாத மண்ணாக இருக்கிறார்கள். நீங்கள் வருங்காலத்தில் அவர்களைப் போல இருந்து விடாதீர்கள் பிள்ளைகளே" என்றார்.


பிறகு இரண்டாவது குடுவையில் இருந்த தண்ணீரில் பெரிய பஞ்சை கொண்டு போய் மூழ்கடித்தார். அவ்வளவு தான் அந்த பஞ்சு நீரை எல்லாம் குடித்துவிட்டது.


உடனே அந்த ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துச் சொன்னார்," இந்தப் பஞ்சு தான் தீவிரவாதம். அது தன்னையும் அழித்துக் கொண்டு இந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் அழித்து விடும். அதனால் எப்போதுமே எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரிக்கக்  கூடாது. அதுபோல காலம் உங்களை பயமுறுத்தினாலும் ஆயுதங்களை கையில் ஏந்தி விடாதீர்கள்" என்று.


பிறகு மூன்றாவது குடுவையில் இருந்த தண்ணீரில் சுவை மிகுந்த சர்க்கரையை கொட்டினார். குடுவையில் இருந்த தண்ணீர் தித்திப்பானது.


உடனே அந்த ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துச் சொன்னார்," பிள்ளைகளே, எதிர்காலத்தில் நீங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும். உங்களால் இந்தச் சமூகம் மேம்பட வேண்டும். ஆகவே, யாருக்கும் பாரம் இல்லாமலும், உண்மையிலேயே கஷ்டப் படுபவர்களுக்கு உதவி செய்யும் குணத்துடனும், நல்ல நடத்தை கொண்டும் நீங்கள் விளங்க வேண்டும். மொத்தத்தில் இந்த சமூகத்திற்கு சர்க்கரையாக இருங்கள்" என்று


நீதி : இன்றைய பிள்ளைகள் தான் வருங்கால பாரதம். அவர்களை நாம் நல்வழிப் படுத்த வேண்டும். அது நம் மேல் விழுந்த கடமை.

கருத்துகள்