அந்த நான்கு பொம்மைகள்

 


அந்த நான்கு பொம்மைகள்




ஒரு முறை நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தந்தார்.


அது கண்ட அரசன் கோபமாக "நான் என்ன சின்னக் குழந்தையா? "இதை வைத்து விளையாடுவதற்கு என்று கேட்டார்.


சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்றார்.


பிறகு அந்த சிற்பி மேலும் தொடர்ந்தார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்றார்.


அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்று கேட்டார்.


முதல் பொம்மையை அரசரிடம் கொடுத்தார் சிற்பி. கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொன்னார்.


சங்கிலி மறுபக்க காதின் வழியே வந்தது.


சிற்பி அப்போது விளக்கம் "மனிதர்களில் சிலர் நாம் சொன்னார் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்றார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொன்னார்.


அந்தப் பொம்மையில் சங்கிலி வாய் வழியே வந்தது.


இந்த மாதிரி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டுப் பரப்பிவிடுவார்கள் என்றார்.


பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொன்னார்.


இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


அப்போது சிற்பி, "இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும். வெளியே வராது" என்றார்.


அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்டார்.

என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொன்னார்.


அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விட்டார். மறுபக்க காதின் வழியே வெளி வந்தது. சிற்பி மீண்டும் முன் போல் செய்யச் சொன்னார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வந்தது. மூன்றாம் முறை வரவே இல்லை.


சிற்பி அப்போது "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி,


எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார்.


நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்க வேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்.

கருத்துகள்