மறுமை வெற்றிக்காக முயற்சிப்போம்
அற்பமான அகிலத்தின் வாழ்க்கையில் ஏதாவதொன்றை அடைவதற்கே நமக்கு அளப்பறிய ஆர்வமும் முயற்சியும் அவசியமாகத் தேவைப்படும்போது, மறுமையில் நாம் நினைத்தபடியெல்லாம் வாழ்வதற்கு வழி வகுக்கின்ற சுகமான சொகுசான சொர்க்க வாழ்வினை, எந்தவொரு கஷ்டத்தையும் இடையூறையும் சந்திக்காமல், அமல்செய்வதிலே எந்தவொரு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இல்லாமல் எளிதாகப் பெற முடியுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் கஷ்டப்படாமல் அதிலே வெற்றிக் கனியை சுவைக்கமுடியாது என்பதை அல்லாஹ் அருள்மறையில் சுட்டிக் காட்டியிருக்கின்றான். மேலும் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கின்றார்கள்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டதுபோல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன.
(அல்குர்ஆன்: 2:214)
நரகம் மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம் கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-6487
மறுமையில் மகத்தான அந்தஸ்துமிக்க ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அடைய வேண்டும்; திருப்திகரமான தித்திப்பான சுவர்க்க வாழ்க்கையின் பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்று நாம் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது. மாறாக அதற்கேற்ற வகையில் நமது அமல்களை அழகிய முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். மார்க்கக் கடைமைகளை கடுகளவும் அலட்சியப்படுத்தாமல், அன்றாடம் அவற்றை நல்ல முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய காரியங்களை அதிகமதிகமாக அக்கறையோடு செய்ய வேண்டும். இவ்வுலகில் நமது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ அதனடிப்படையில்தான் நமது மறுமை வாழ்வின் முடிவு இருக்கும். இதை பின்வரும் வசனங்களில் இருந்து விளங்க முடிகின்றது.
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ
(மறுமைநாள்) அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும். தமது உழைப்பிற்காக திருப்தி கொள்ளும்.
(அல்குர்ஆன்: 88:8,88)
اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا
அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன், தூய பானத்தை அவர்களுக்குப் பருகத்தருவான். இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.
(அல்குர்ஆன்: 76:22)
முயற்சியின் முக்கியத்துவம்
வாழ்க்கையிலே நமது சிறப்பான செயல்பாடுகளை சீர்குலைக்கின்ற வகையில் சிரமங்களும் சிக்கல்களும் வரும்போது, அவற்றைக் களைந்தெறியவும், மார்க்க கடமைகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றவும், நிச்சயமாக நம்மிடத்தில் முயற்சிக்கின்ற பண்பு இருக்க வேண்டும்.
வணக்க வழிபாட்டில் அதிக முயற்சி
நமக்கு வாழ்வியல் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மார்க்கக் கடமைகளில் முனைப்புடன் செயல்பட்டார்கள். மறுமையில் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவதாகவும், அதற்காக இரவில் நின்று வணங்குமாறும் அல்லாஹ் தனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு நாளும் இரவிலே பல நாழிகைகளைத் தியாகம் செய்து, வணக்க வழிபாட்டில் பேணுதலைக் கடைபிடித்தார்கள். இதை பின்வரும் நபி மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இரு பாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு விடும். இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன், பின் பாவங்களை மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-1380
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்.
அறி : முகீரா (ரலி)
நூல் : புகாரி-1130
தமது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் நல்லடியாராக இருக்க வேண்டும்; அருளப்பட்ட அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காக அதிகமுயற்சியை வணக்க வழிபாட்டிற்காக செலுத்தியிருக்கிறார்கள். மேலும் மறுமையில் வெற்றிபெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்று பேராவலோடு வினாதொடுத்தவர்களுக்கு இவ்வாறே அதிகமாக வணக்க வழிபாட்டில் ஈடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுரையையும் பகன்றிருக்கிறார்கள்.
அதான் பின் அபூதல்ஹா அல்யஃமரீ கூறியதாவது:
”நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்.
பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிர வணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள் என்றார்கள்.
பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்-842
இறுதி இறைவேதமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள், மற்ற நாட்களைக் காட்டிலும் மிகத்தீவிரமாக நல்லமல்களில் ஈடுபடுவார்கள். தவிர, அக்காரியங்களின் பக்கம் தமது குடும்பத்தாரையும் தூண்டுவார்கள்.
”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார் என்று கூறினார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-3220
(ரமளானின் கடைசி) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-2024
ஆனால் அறிந்தும் அறியாமலும், நாள்முழுவதும் நொடிக்கு நொடி கணக்கற்ற பாவங்களைச் செய்து கொண்டிருக்கின்ற நாம், கடமையான தொழுகைகளையாவது தவறாமல் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறோமா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மறுமையில் வெற்றியடைய வேண்டும் என விரும்பினாலும், அங்கு கேட்கப்படவிருக்கின்ற முதல் கேள்வியான தொழுகை விஷயத்தில் அதிகமான முஸ்லிம்கள் பொடுபோக்குத்தனமாகவே இருக்கின்றார்கள்.
தொழுகையை விட இவ்வுலகத்தின் பயன்களை அடைவதற்காகவே அவர்கள் அதிகமான முயற்சியையும் முக்கியத்துவத்தையும் செலுத்துகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் காண்கிறோம். இதுவல்லாமல் மற்ற மற்ற அமல்கள் விஷயத்திலும் நமது நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கின்றது.
மார்க்கத்தை அறிந்திட முயற்சித்தல்
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அபூஹுரைரா (ரலி) அவர்கள் தான் அதிகமாக அறிவித்திருக்கின்றார்கள். மற்ற நபித்தோழர்களை விட இவர்களால் மட்டும் எப்படி அதிகமான ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது? என்ற கேள்வி நமக்குள் எழுவதைப் போன்றே அன்றைய மக்களுக்கும் வந்தது. இந்த கேள்வியை கேள்விபட்டபோது இதற்கான பதிலை அபூஹுரைரா (ரலி) அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றைக் காண்போம்.
அஃரஜ் என்பவர் கூறியதாவது :
”அபூஹுரைரா அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரே என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரு வசனங்கள் மட்டும் இல்லையென்றால், நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) கூறிவிட்டு (அல்குர்ஆன்: 2:159,160) என்ற இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
மேலும் தொடர்ந்து மக்காவிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரித் தோழர்களோ தங்கள் விவசாயச் செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவாகிய நான் முழுக்க முழுக்க வேறு வேலைகளில் ஈடுபடாமல் பட்டினியாக நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகைத் தராத இடங்களுக்கெல்லாம் நான் சென்றேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.”
புகாரி-118
அபூஹுரைரா (ரலி) அவர்கள், தமக்குரிய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாதவகையில் மிகவும் வறுமையால் வாடிக்கொண்டிருந்த திண்ணைத் தோழர்களில் ஒருவராவார். ஆயினும் தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் நபிமொழிகளை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தோடு முயற்சியை மேற்கொண்டார்கள். அதன் பலனாக அவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமான ஹதீஸ்களை அறிந்து மக்களுக்கு அறிவித்தார்கள்.
பிந்தைய காலங்களில் பல்வேறான இன்னல்களுக்கு மத்தியில் இமாம்கள் நபி மொழிகளை ஒன்று திரட்டினார்கள். இவ்வாறு அவர்களால் தொகுப்பட்ட மார்க்கம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தாங்கிய ஹதீஸ் கிரந்தங்கள், இன்று நம்முடைய தாய்மொழியிலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிக்கின்றோமா?
மார்க்கத்தை ஆர்வத்தோடு அறிந்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதினால்தான், மார்க்கத்திற்கு மாற்றமான விரோதமான செயல்களெல்லாம் நமது சமுதாயத்தில் மலிந்துக்கிடக்கின்றன. மேலும் மார்க்கத்தின் பெயரால் ஆலிம்மார்கள் ஷேகுமார்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைகள் ஆதாரமற்ற செய்திகளையெல்லாம் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் இந்த அறியாமையின் கோரவிளைவாகவே மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாக வழிகேட்டிலே வீழ்ந்துக்கிடக்கின்றார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!