RECENT POSTS

நாம் அடுத்தவர்களுக்கு எதைத் தருகிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வந்து சேருகிறது."

 


நாம் அடுத்தவர்களுக்கு எதைத் தருகிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வந்து சேருகிறது."


ஒருவேளை, நாம் மலர்களைத் தந்தால் அது மாலையாகத் திரும்பி வரும். நாம் விதைகளைத் தந்தால் அது மரமாகத் திரும்பி வரும். ஒருவேளை நாம் முட்களை கொடுத்தால் நிச்சயம் மலர்களை எதிர்பார்க்கவே இயலாது. காரணம் எட்டிக்காயை அனுப்பி விட்டு கட்டிக் கரும்பை எதிர்பார்க்க முடியுமா?


அதுவே, நீங்கள் ஒருவரை வாழ்த்துகிற போது, அந்த வாழ்த்து எங்கும் எதிரொலித்து மீண்டும் உங்களிடத்திலேயே திரும்பி வருகிறது. அது மட்டும் அல்ல, நாம் புன்னகைத்தால் எதிரே வருகிறவர்கள் புன்னகைத்துத் தானே தீர வேண்டும். அதனால் எல்லோருக்கும் எப்போதும் நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் நல்லதையே பெறுங்கள்.



இப்படித் தான் பாருங்களேன்,


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நெருக்கமாக இருப்பதே பலருக்குப் பொறாமையாக இருந்தது. பொறாமைக்காரர்களின் எதிர்மறை எண்ணம் ஒரு நாள் அந்த நண்பர்களுக்குள் சிறு மனஸ்தாபத்தை ஏற்படுத்தியே விட்டது.


அந்த மனஸ்தாபத்தை சிலர் பெரிது படுத்த நினைத்தனர். ஒரு நண்பனை பற்றி இன்னொரு நண்பனிடம் தவறாகச் சொன்னார்கள். அதேபோல, அவனிடத்தில் சென்று இவனைப் பற்றி அவதூறு பேசினார்கள்.


இப்படியாக அந்தப் பொறாமைக்காரர்கள் நண்பர்கள் இருவருக்குள்ளும் மாற்றி, மாற்றி கலகத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் நண்பர்கள் இருவரும் நாளடைவியில் எலியும், பூனையுமாக மாறினார்கள்.


பொறாமைக்காரர்களின் தீய எண்ணத்தை புரிந்து கொண்டார் அந்த ஊரில் வசிக்கும் நல்ல மனம் கொண்ட ஒரு பெரியவர். அவரைப் பொறுத்தவரையில் இந்த நண்பர்கள் இருவரும் பழைய படி சேர வேண்டும் என்பதே அவரது ஆசை. அதன் பொருட்டு, உடனே அந்தப் பெரியவர் செயலில் இறங்கினார்.


இருவரில் ஒரு நண்பரிடம் முதலில் சென்று, "நீதான் அவனைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்கிறாய். ஆனால், அவன் உன்னைப் பற்றி யாராவது குறை சொன்னால் எப்படிக் கோபம் கொள்கிறான் தெரியுமா?!" என்றார்.


"அப்படியா!. அவ்வளவு நல்லவனா?. எனது அந்தப் பழைய நண்பன்!." என்று கேட்டு வியப்படைந்தான் முதல் நண்பன்.


அப்படியே அடுத்தவனிடமும் சென்று இதையே சொன்னார் அந்தப் பெரியவர். அவனோ அது கேட்டு நெகிழ்ந்து போனான். ஒரு கட்டத்தில் அந்தப் பெரியவர் இது போல நல்ல எண்ணத்தை மாறி, மாறி விதைத்தக் காரணத்தால் அந்த முன்னாள் நண்பர்கள் மீண்டும் இணைந்தனர்.


இந்தச் சிறு கதையை இங்கு சுட்டிக் காட்டக் காரணம், நாம் நல்ல எண்ணத்தை விதைக்கும் போது, அடுத்தவர்களால் அதில் அவ்வளவு சீக்கிரத்தில் முள்ளை நட இயலாது.


அதுபோல, நம்மைச் சுற்றி நல்ல எண்ணங்களின் கதிர்கள் இருக்க, இருக்க நம்மை அழிக்க எண்ணி வரும் பகைவன் கூட அந்த நேர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு நமக்கு அவனை அறியாமல் நன்மையையே செய்து விடுவான்.


இதுவே நேர்மறை எண்ணத்தின் சக்தி. இந்த நேர்மறை எண்ணத்தையே எப்போதும் வளர்ப்போம். நாமும் அதன் மூலம் வளர்வோம்.

கருத்துகள்