ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

 


அல்லாஹ்வின் திருப்பெயரால்...


ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!


நிய்யத்தை மாற்றும் மங்கைகள்🙍‍♀️


பெண்களால் வரும் சோதனைகளும் குழப்பங்களும்👸


பெண்களால் வரும் பிரச்சனைகள்💇‍♀️


மதியை மாற்றும் மாதுக்கள்🧝‍♀️


மார்க்கப் பற்றை மறக்கடிக்கும் மங்கைகள்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.


மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண் ஈர்க்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.


பெண்கள் தொடுதல் எனும் தீண்டுதல் மூலம் உணர்வு தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் தங்களது பார்வையின் மூலம் அதாவது பெண்களைப் பார்த்தாலேயே கவரப்படுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாபைப் பேணச்சொல்கிறது. இரு சாராருக்கும் இடையே இன ரீதியாக இருக்கும் இந்த இயற்கையான இயல்பை, யதார்த்தமான தன்மையை நடைமுறை நிகழ்வுகளும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்துகின்றன.


எனவே தான் எல்லாப் படைப்பினங்களைப் பற்றியும் முற்றும் அறிந்தவனான ஏக இறைவன், இஸ்லாம் எனும் இயற்கையான, இனிமையான வாழ்க்கைத் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு பிரத்யோகமான பல்வேறு சட்டங்களைப் பிறப்பித்துள்ளான்.


பெண்கள், அவற்றை அறிந்து அதன்படி செயல்படுவது தான் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது. அதுபோன்று ஆண்களுக்கும் அவசியமான அறிவுரைகளை, எச்சரிக்கைகள் கலந்த தகவல்களை எடுத்துரைத்துள்ளான். ஆண்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அந்தச் செய்திகளைத் தொடர்ச்சியாக நாம் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.


மனதை கவரும் இன்பம்


ஏக இறைவனை வணங்குவதற்காக நாம் படைக்கப்பட்டு இருப்பினும் நமது வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கு அளவற்ற அருட்கொடைகளை அவன் அள்ளி வழங்கியிருக்கிறான். ஏராளமான இன்பம் தரும் காரணிகளை காணுமிடமெங்கும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். பரந்து விரிந்த பூமியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பல்வேறான வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறான். இவ்வாறு நமது வாழ்க்கையை அலங்கரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமானவைகளுள் முக்கியமான ஒன்றுதான் ஆணுக்குப் பெண்; பெண்ணுக்கு ஆண் என்று வாழ்க்கைத் துணையைக் கொடுத்திருப்பது ஆகும்.


பின்வரும் வசனத்தில், தங்கம், வெள்ளி என்று மனதை மயக்கும், கவனத்தைக் கொள்ளை கொள்ளும் உலக இன்பங்களின் பட்டியலில் வாழ்க்கைத் துணை என்பதும் முதன்மையாக சொல்லப்பட்டிருப்பதின் மூலம் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.



பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.


(அல்குர்ஆன்: 3:14)


கவனத்தைக் கவரும் கவர்ச்சிகரமான விஷயங்களில் பெண்கள் இடம்பெற்றிருப்பதை ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக இன்பங்களில் மயங்கி வழிகேடுகளில் விழுந்து விடக்கூடாது என்று  எச்சரிக்கையோடு இருக்கும் ஆண்கள், பெண்கள் விஷயங்களிலும் எல்லை மீறிவிடக்கூடாது.


மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறையிலே தவிர அதற்கு அப்பாற்பட்ட வகையில் எந்தவொரு அணுகுமுறையையும் அவர்களிடம் அமைத்துக் கொள்ளக்கூடாது. காரணம், மற்ற உலக இன்பங்களினால் ஏற்படும் பாதிப்பை விட இதனால் நிகழும் பாதிப்பு பாரதூரமானதாக இருக்கும். அதனால் தான் ஆண் பெண் ஒழுக்கத்தைப் பற்றி இஸ்லாம் அதிகமதிகம் பேசுகிறது.


நிய்யத்தை மாற்றும் மங்கைகள்


பெண் பித்து பொல்லாதது என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஒரு ஆண்மகன், ஒரு பெண் மீது கண்மூடித்தனமாகக் கொண்டிருக்கும் பாசம், மோகம் இரண்டும் அவனை எப்படி வேண்டுமானாலும் செயல்பட வைக்கும். பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருந்ததன் விளைவாகப் பலர் தங்களது கொள்கை கோட்பாடுகளையே மறந்து, படுமோசமான பாதையில் பயணிப்பதைப் பார்க்கவே செய்கிறோம். அந்த அளவிற்குக் குருட்டுத்தனமான பெண்ணாசை நமது நம்பிக்கையின் வேர்களைக் கரைத்துவிடும் கொடிய அமிலத்தைப் போன்றது.


எந்தவொரு வணக்கத்தையும் நற்காரியத்தையும் படைத்தவனுக்காகச் செய்து அவனிடம் நற்கூலியைப் பெற வேண்டும் என்ற மறுமை நோக்கத்தையே மறக்கடித்து, தூய எண்ணத்தை நிறம் மாற்றி, திசைமாற்றி பயணிக்க வைக்கும் வல்லமை பெண் மீதான ஈர்ப்புக்கு இருக்கிறது என்பதைப் பின்வரும் போதனை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.



எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

நூல்: புகாரி-1 


நமது இலட்சியத்தில் இருந்து விலகச் செய்யும் விஷயங்களில் மிக முக்கியமானது முதன்மையானது பெண்ணும் பொன்னும்தான் என்று சொன்னால் மிகையாது. காதல் என்ற பெயரில், ஏகஇறைவனை மறுக்கின்ற பெண்களை திருமணம் செய்வதற்காக சத்திய மார்க்கத்தைத் தூக்கி எறிந்து அசத்தியத்திற்குச் செல்பவர்கள் இதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறார்கள்.


பெண்களால் வரும் சோதனைகளும் குழப்பங்களும்


இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்கு சோதனைகள் இருக்கின்றன. செல்வம் போன்ற இன்பங்கள் சோதனையாக இருப்பது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்பாலினத்தின் மூலமும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மூலம் தாங்கள் சோதிக்கப்படுவோம் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. இதை மறந்து செயல்பட்டு சிக்கல்களில், குழப்பங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைப் பின்வரும் செய்தியில் விளங்கலாம்.



இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல்: முஸ்லிம்-5292 


பெண்களால் வரும் பிரச்சனைகள்


மோசமான சிந்தனைகள், தவறான நடத்தைகள் கொண்ட பெண்கள் மூலமும், பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருத்தல், பக்குவப்படாமல் செயல்படுதல் மூலமும் நாம் சர்ச்சைகளில் விமா்சனங்களில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைகள் நமக்கு ஏற்படலாம்.


நாம் நல்லவர்களாக இருந்தபோதும் நம்மைச் சுற்றியிருக்கும் இழிகுணமும் தீய நோக்கமும் கொண்ட பெண்களால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கும் சூழல் இன்று மட்டுல்ல! எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கும். நற்பெயர் பெற்று நல்ல முறையில் வாழ்பவர்களையும் கூட இதுபோன்ற இடையூறுகள் இடம்தேடி வரும் என்பதற்குப் பின்வரும் கடந்த கால சம்பவங்கள் சான்றுகளாக இருக்கின்றன.


யூசுஃப் (அலை) அவர்கள் வளர்ந்து ஆளான மன்னருடைய வீட்டிலேயே அந்த மன்னருடைய மனைவி மூலம் தவறான நடத்தைக்கு அழைக்கப்படுகிறார்கள். அந்த அழகிய தூதர் அவர்கள், அல்லாஹ்விற்கு அஞ்சி அவளை விட்டும் அகலும்போது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு சிறைவாசம் செல்கிறார்கள். இப்படி ஒரு பெண் மூலம் அவர்கள் அடைந்த சிரமங்களை நமது படிப்பினைக்காக வல்ல இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.



எவளது வீட்டில் (யூசுஃப் நபி) அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!‘ என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.


இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள். “இவள் தான் என்னை மயக்கலானாள்” என்று அவர் கூறினார்.


“அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்” என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது” என்றார்.


(அல்குர்ஆன்: 12:23-28)


இதுபோன்று முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்லடியாருக்கும் ஒரு நடத்தை கெட்ட பெண் மூலம் வந்த பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை “ஜுரைஜ்‘ என்று அழைத்தார். ஜுரைஜ் “இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே‘ என்று  (மனதிற்குள்) கூறினார்.  மீண்டும் அப்பெண் “ஜுரைஜ்‘ என்று அழைத்தபோது “இறைவா! நான் தொழுதுகொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!‘ என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் “இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாது‘ என்று துஆச் செய்தார்.


ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது, “ஜுரைஜுக்குத் தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்து விட்டார்” என்று  அவள் கூறினாள். “தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?” என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி “சிறுவனே! உன் தந்தை யார்?” எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை” ஆடுமேய்க்கும் இன்னார்”  என விடையளித்தது.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி-1206 


தொழில் நிறுவனம், இயக்கம், அலுவலகம், கல்விச்சாலை, கடைத்தெரு, இருப்பிடம் என்று ஆண்கள் பெண்கள் கலந்து இருக்கும் எல்லா இடங்களிலும் இதுபோன்று ஏதாவதொரு பிரச்சனைகள் வெடிப்பதற்கு, ஒழுக்கத்தில் சறுகி விடுவதற்குச் சிறிதளவேனும் வாய்ப்புகள் இருக்கவே செய்யும். சமுதாய அக்கறை கொண்டவர்கள், ஒழுக்கக் கேடுகளை எதிர்ப்பவர்கள், நன்முறையில் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் மாட்டிக் கொள்ளாத வகையில் சுதாரித்து நடந்து கொள்ள வேண்டும். 


யாரெல்லாம் சமுதாயத்தில் நற்பெயரை இழந்து மக்களின் வெறுப்பிற்கும் இழி சொல்லுக்கும் ஆளானார்களோ அவர்களில் அனேகமானவர்கள் பெண் விஷயத்தில் தவறிழைத்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடக்ககூடாது.


மதியை மாற்றும் மாதுக்கள்


வீரம், வாதத் திறமை, முற்போக்குக் குணம், முடிவெடுக்கும் மதி நுட்பம் இப்படிப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஒரு ஆண்மகனை ஒரு பெண் எளிதில் ஏமாற்றிவிடுவாள். தமது அழகின் கவர்ச்சியால் வீழ்த்திவிடுவாள். இப்படி அறிவிலும் ஆற்றலிலும் பலம் கொண்ட பல ஆண்கள், பெண் மோகத்தில் மூழ்கிப் பலியாகி, கைசேதப்பட்டுக் கிடக்கிறார்கள். இவ்வாறு ஆண்களை மயக்கும் பேராயுதமான கவர்ச்சி பெண்களிடம் இருக்கிறது. அவர்களால் ஆண்கள் மார்க்கத்தையே தொலைக்கும் தருணமும் ஏற்படலாம் என்பதைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.


நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். “மக்களே! தர்மம் செய்யுங்கள்!” என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்!” என்றார்கள்.


“அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறுசெய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்” என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர்.


“அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது. “எந்த ஸைனப்?” என நபி (ஸல்) அவா்கள் வினவ, “இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்!” என்று கூறப்பட்டது.  “அவருக்கு அனுமதி வழங்குங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது.


அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)” என்று கேட்டார். “இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புகாரி-1462 


“கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்” என்று நபிகளார் உதிர்த்த வார்த்தைகளை நாம் உதிரம் இருக்கும் வரை மறுந்து விடக்கூடாது. தாய், மனைவி, சகோதரி, தோழி என்று தங்களைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை, மதியீனமான செயல்களைச் செய்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு திருந்துவதற்கு முற்பட வேண்டும்.


மார்க்கப் பற்றை மறக்கடிக்கும் மங்கைகள்


பெரும்பாலும் பெண்களால் ஆண்கள் வழிகேட்டில் விழுந்து விடுவது, அவர்கள் தமது வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில் தான். பிரகாசமான மறுமை வாழக்கைக்காக மார்க்கத்தின் போதனைகளைப் பேணுதலுடன் கடைப்பிடிக்கும் பல இளைஞர்கள், மணமகளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தவறிழைத்து விடுகிறார்கள். மார்க்கத்தைக் காட்டிலும் இனக் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து இணை வைக்கும் பெண்களை மணமுடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம்.


மணமுடிக்கும் பெண்ணை தவ்ஹீத் சிந்தனைக்கு மாற்றி விடுவேன் என்று முழக்கமிட்டு அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்யும் பெண்களைத் திருமணம் செய்த பல இளைஞர்கள், அதற்குப் பிறகு தங்களது தவ்ஹீதையே மறந்து, துறந்து வழிகேடுகளின் பக்கம் திரும்பிய நிகழ்வுகள் ஏராளமாக நடக்கின்றன.


மார்க்கத்திற்கு மாற்றமாக இருக்கும் தமது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற இறுதியில் மார்க்கத்தையே வளைத்து, திரித்துப் பின்பற்றும் பாதகமான நிலையில் விழுந்து விடுகிறார்கள். இவ்வாறு நமது குடும்ப வாழ்க்கையின் அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் பெண்ணால் வழிகெடாமல் இருப்பதற்காகவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குப் பின்வருமாறு போதிக்கிறார்கள்.

 


இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்!


இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.


(அல்குர்ஆன்: 2:221)



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.


அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-5090 


வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


கருத்துகள்