அதிசய மோதிரம்!
முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் ஒருநாள்....
தேவதை ஒன்று அவனிடம் வந்தது.
அந்தத் தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில் அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு விடிவு காலம் வருமாறு வழிவகை செய்ய வேண்டுமென்றும், தேவதையிடம் வேண்டிக் கொண்டான்.
“நான் சொல்கிறபடி செய்.... நேராக இதோ எதிரே தெரியும் காட்டுக்குள் செல். அங்கு பல வகையான மரங்கள் உள்ளன. அவற்றில் எல்லா மரங்களையும் விட ஒரு மரம் உயரமாக வளர்ந்து நிற்கும். அந்த மரத்தின் பெயர் பைன் மரம். அதை அப்படியே வெட்டிப் போடு. அப்புறம் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும். உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்,'' என்று அந்த தேவதை ஏழை விவசாயிக்கு வழிகாட்டியது.
அடுத்த நாளே, அந்த ஏழை விவசாயி கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்த கோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தை ஓங்கி வெட்டினான். அது தரையின் மீது விழும் போது, அதன் முனைப் பகுதியில் இருந்து ஒரு பறவைக் கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.
விழுந்த வேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடி உடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒரு கழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொரு முட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்து உருண்டோடியது.
கழுகுக் குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப் பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் கழுகு தனது சிறகை அடித்துப் பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.
அடுத்த முட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமான அதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும் அது கொடுக்கும். ஆனால், அதை ஒரே ஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புத சக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர் வருத்தப்பட நேரிடும்,'' என்று கழுகு சொல்லிவிட்டு உயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.
நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?'' என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒரு புல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,'' என்று கூறினான்.
நகை வணிகர் கூறியதைக் கேட்ட விவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்த மோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது,'' என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.
விவசாயி கூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையை அறிந்து கொண்ட நகை வணிகனின் உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டம் போட்டான்.
விவசாயியிடம் வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனது வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்,'' என்று கூறினான். விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.
அன்று இரவு விவசாயிக்கு நல்ல அறுசுவை விருந்து. விருந்தின் முடிவில் திராட்சை ரசம் வேறு. அதை வாங்கிக் குடித்த விவசாயி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.
அந்த சமயம் பார்த்து விவசாயியின் கையிலிருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு, ஒரு சாதாரண மோதிரத்தை மாட்டிவிட்டான் வணிகன்.
விவசாயி நன்றாகத் தூங்கினான். "மோதிரத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பணக்காரனாக ஆகி விடலாம்' என்று எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் வணிகன்.
மறுநாள் பொழுது விடிந்தது. சிறப்பான விருந்து கொடுத்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு, நகை வணிகனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான் விவசாயி.
நகை வியாபாரியோ, அந்த மாய மோதிரத்தைக் தன் கை விரலில் அணிந்துகொண்டு, ஒய்யாரமாகத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே, மாய மோதிரத்தைப் பார்த்து, “எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் வேண்டும்,'' என்று கேட்டான்.
மோதிரம் தனக்குள்ளாக, "அடப்பாவி! ஒரு அப்பாவி ஏழையை ஏமாற்றி, அவனிடமிருந்து என்னைத் திருடி, என் மூலம் உலகப் பணக்காரன் ஆகப் பார்க்கிறாயா? இதோ, உன் கதையை இப்போதே முடித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டது.
நகை வணிகன் கேட்டுக் கொண்ட மாதிரியே, அந்த மோதிரம் தங்கக் காசுகளை அவனது தலையில் மழைபோல் பெய்து கொண்டிருந்தது.
தங்கக் காசுகள், "பட் பட்' என்று அவனது தலை மீது விழுந்தன.
“தலை வலிக்கிறது, போதும் போதும்!'' என்று கத்தினான். ஆனால், தங்க மழை நின்றபாடில்லை.
கடைசித் தங்கக் காசு அவனது தலையில் விழுந்தவுடன் தங்க மழை ஓய்ந்து போனது.
ஆனால், விழுந்து கிடந்த தங்கக் காசுகளை அந்த வணிகனால் எடுக்க முடியவில்லை. காரணம், தங்க மழை ஓய்வதற்கு முன்பே, அவனது உடலை, விட்டு அவனது உயிர் போய் விட்டது.
தங்க மழை பெய்ததால், நகை வியாபாரி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
நகை வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினர். நகை வியாபாரி மீது தங்கக் காசுகள் குவிந்து கிடந்தன.
"இப்படி மழைபோல் தங்க காசுகள் வந்தால், தீமையும் வராமலா போய் விடும்' என்று வந்தவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் ஆளுக்கு இரண்டு தங்கக் காசுகள் எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.
பின்னர் நகை வியாபாரியின் கைவிரலில் இருந்த அந்த மாயமோதிரம் தானே கழன்று, அந்த விவசாயியின் வீட்டை நோக்கி பறந்து சென்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!