RECENT POSTS

சிந்தனைக்கு சில நபிமொழிகள் !


 சிந்தனைக்கு சில நபிமொழிகள் !


ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்ன்னிலையில் புகழ்ந்து பேசினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, “உங்களில் எவருக்காவது தன் சகோதரரைப் புகழ்ந்து ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் “இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான்.


அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்று சொன்னார்கள்.


அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),


நூல்: புகாரி-2662


அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி)

நூல்கள் : ஷுஹஅபுல் ஈமான் -பைஹகீ (1502), ஹுக்குல் ஜார் 112


அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான் உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள். 


அறிவிப்பவர் : அபூஹுஹரைரா (ரலி)

நூல் : இப்னுமாஜா (4207)


அண்டைவீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால் எங்கே அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி (6014), முஸ்லிம் (5118)



ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192


இரு விஷயத்தில் தவிர மற்றதில் பொறாமைக் கொள்ளக்கூடாது. 1 ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி அதை அவர் நல்வழியில் செலவு செய்கிறார். 2 ஒரு மனிதருக்கு அல்லாஹ் அறிவாற்றலை வழங்கினான். அவர் அதன் மூலம் (சரியான) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி


நூல்கள்: புகாரி 73, முஸ்லிம் 1486


உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் சுய மரியாதையுடன் இருக்க விரும்புவாரோ அவரை அல்லாஹ் அவ்வாறு ஆக்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்க விரும்புவாரோ அவரைத் தன்னிறைவு உள்ளவராக அல்லாஹ் ஆக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)


நூல்: புகாரி – 1427


நல்வழியில்) செலவிடு! கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அவ்வாறு நடந்தால்) அல்லாஹ்வும் உனக்கு கணக்கிட்டே (தன் அருளைத்) தருவான் நல்வழியில் செலவழிக்காமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் (தன் அருளை) உனக்கு (தராமல்) முடிந்து வைத்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)


நூல்: புகாரி : 2591


பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர், மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


நூல்: புகாரி : 5991


நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


அறிவிப்பவர்: ஜரீர் (ரலி)


நூல்: முஸ்லிம் : 5052


ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஒர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)


நூல்: புகாரி : 6011 முஸ்லிம் : 5044


உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (கடமையான தொழுகை) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (உபரியான தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்துகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்: முஸ்லிம் : 1428


தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் : 5047


ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)


நூற்கள்: அபூதாவூத்-1488 (1490), அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்


நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-6340 .


உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 


அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்: புகாரி-6338 , 6339, 7464, 7477


இப்னு மஸ்வூத் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­)

நூல் : முஸ்­ம் (147)


சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்


நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),


நூல்: நஸயீ 256


சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்


நபி (ஸல்) அவர்கள், “(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்” என்று கூறினார்கள்


அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)


நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122


நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது


நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4115


நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்


நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி 5617


தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்..


ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.


ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74.


கருத்துகள்