RECENT POSTS

மானத்தோடு விளையாடியோருக்கு மறுமை தண்டனை

 


மானத்தோடு விளையாடியோருக்கு  மறுமை தண்டனை


அவதூறு கூறுவதன் மூலம் பிறர் மான விவகாரத்தில் விளையாடியவர்களுக்கு மறுமையில் செம்பு உலோகத்தினாலான நகத்தால் உடல் முழுவதும் கீறிக்கிழிக்கப்படும் வகையில் தண்டனை அளிக்கப்படும்.


நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும், உடம்பையும் கீறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் (புறம் பேசுவதின் மூலம்) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


நூல்: அபூதாவூத் 4235


நன்மையற்று, நரகமே பரிசாகும்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.


நூல்: முஸ்லிம் 5037


இவ்வளவு பாவச் சுமைகளையும் தண்டனை களையும் அவதூறு பரப்புவோருக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்.


இதில் அவதூறை உருவாக்கியவர்களும், அதைப் பரப்புவர்களும் ஒருவொருக்கொருவர் பாவத்தில் சளைத்தவர்கள் அல்லர். இருவரும் சமமானவர்களே.


அவதூறால் அல்லாஹ்வின் கொள்கை அழியுமா?


மேற்குறிப்பிட்டதைப் போல் அல்லாஹ்வின் எச்சரிக்கை மிகுந்த அவதூறு பரப்புதலை அல்லாஹ்வின் கொள்கைக்கு எதிராகவும், அக்கொள்கையைப் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராகவும் பயன்படுத்தி அல்லாஹ்வின் கொள்கையை அழித்துவிடலாம் என்று கற்பனைக் கனவில் மூழ்கி கிடக்கின்றனர்.


அவர்களுக்கு அல்லாஹ்வின் பதில் இதோ:


அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.


அல்குர்ஆன் 61:8 )

நன்றி ஏகத்துவம் இணையதளம் 


கருத்துகள்