RECENT POSTS

அவதூறு என்றால் என்ன?

 


அவதூறு என்றால் என்ன?


ஒரு மனிதனின் மீது கொண்டுள்ள கோபம், குரோதங்களின் காரணத்தினால் அவன் மீது களங்கம் சுமத்துவதற்காக அவனிடம் இல்லாத குறையை, தவறை பொய்யாகப் பரப்புவதே அவதூறாகும்.


அவதூறு என்றால் என்ன? என்று மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்“ என்று பதிலளித்தார்கள்.


அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால் நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.


நூல்: முஸ்லிம் 5048


ஒரு மனிதனிடம் இல்லாத குறையைப் பரப்புவதே அவதூறு என்று நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் அவதூறுக்கு வரைவிலக்கணம் சொல்லியுள்ளார்கள்.


தான் கோபம் கொண்ட மனிதனின் எதிரில் நின்று, கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகள் எடுக்கும் ஆயுதமே அவதூறு பரப்புதலாகும்.


அவதாரம் எடுக்கும் அவதூறு


ஒரு காலத்தில் அவதூறு என்பது ஒருவர் தனக்குப் பிடிக்காத மனிதனைப் பற்றி பொய்யாக இன்னொருவரிடத்தில் சொல்வதும், அவர் அதன் உண்மை நிலையறியாமல் மற்றொருவரிடத்தில் சொல்வதுமாக செவிவழியில் பரவுகின்ற செய்தியாகத்தான் இருந்தது.


ஆனால், இந்த நவீன யுகத்தில் அவதூறு வேறொரு அவதாரம் எடுத்துள்ளது.


இன்று ஒருவரின் மீது குறை சொல்ல, களங்கம் சுமத்த நினைப்பவர்கள் வெறும் வாய்வழிச் செய்தியாகப் பரப்பாமல் அதை உண்மையென நம்ப வைக்கும் விதமாகப் பலவிதமான போலி ஆதாரங்களை உருவாக்குகிறார்கள்.


உதாரணமாக, ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்தை கேள்விக்குறியாக்கி, களங்கம் சுமத்த நினைப்பவர்கள் முன்னரெல்லாம் அப்பெண்ணை வேறொரு ஆடவனோடு தொடர்புபடுத்திய பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள்.


ஆனால், இன்று கிராஃபிக்ஸ் , மார்ஃபிங் போன்ற நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு அந்த பெண்ணின் உருவத்தை வேறொரு ஆடவனோடு தவறாக இணைத்தோ அல்லது அப்பெண் வேறொரு ஆடவனோடு தொலைபேசியில் உரையாடுவதைப் போன்று அப்பெண்ணின் குரலையே போலியாகத் தயாரித்தோ தாங்கள் சுமத்திய களங்கத்திற்கு இதோ ஆதாரம் என்று காட்டுகிறார்கள்.


(இவ்வாறு உருவாக்குவதற்கு பல மென்பொருள்கள் இன்றைக்கு இருக்கிறன்றன. யாரைப் போலும் குரலை மாற்றி பேசுகின்ற (மிமிக்ரி) மனிதர்களும் இருக்கின்றனர்)


இதைப் பார்க்கும் பாமர மக்களும் அதை உண்மையென நம்பிவிடுகின்றனர். அவதூறு பரப்பியவர்களும் மக்களை மடையர்களாக்கி விட்டோம், களங்கத்தைச் சுமத்திவிட்டோம் என்ற மமதையில் திளைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.


இவ்வாறுதான் வாய்வழிச் செய்தியாக மட்டும் இருந்த இந்த அவதூறு இன்று நவீன அவதாரம் எடுத்துள்ளது.


அவதூறைப் பரப்புவதற்கு முன்னால் அவதானியுங்கள்!


முன்னர் அவதூறை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவர்களின் செவிகள் மட்டுமே சாதனமாக இருந்தது.


ஆனால் இன்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் துணை நிற்கின்றன.


இந்த வலைத்தளங்கள் வாயிலாக ஒரு செய்தியை உலகம் முழுவதும் பரப்புவது மிக எளிதான காரியமே.


இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருக்கும் சிலர் தங்களுக்கு வரும் செய்தியைப் பிறருக்குப் பரப்புவதற்கு முன்னால் அந்தச் செய்தி உண்மையா? பொய்யா? என்பதை அவதானிப்பது கிடையாது.


தனிமனிதர்கள் மீது கூறப்பட்ட பொய்யான செய்தி ஒருபுறம் இருக்கட்டும். நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் வந்தால் கூட அவை ஹதீஸ்கள் என்பதைப் போன்று வேகமெடுத்து பரப்புவதைக் காண்கிறோம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல்: முஸ்லிம் 6


எந்தச் செய்தியாயினும் நாம் பரப்புவதற்கு முன்னால் உண்மையான செய்தியா என்று அவதானித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் நாம் இறைவனிடம் பொய்யன் என்ற ஸ்தானத்தைப் பெற்றுவிடுவோம்.


அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை


கற்பொழுக்கமுள்ள பெண்கள் விஷயத்தில் அவதூறு சொல்வது பெரும்பாவமாகும்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)’’ என்று (பதில்) கூறினார்கள்.


நூல்: புகாரி 2766


அவதூறு கூறுவோருக்கு ஈருலகிலும் தண்டனை


வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.


அல்குர்ஆன் 24:19


மண்ணறையில்…


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை’’ என்று சொல்லிவிட்டு, “ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்’’ என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்‘’என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி 216 )


நன்றி ஏகத்துவம் இணையதளம் 


கருத்துகள்