அழகிய பெயர் சூட்டல்:
குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் அழகானதாக இருக்க வேண்டும். நல்ல அர்த்தம் கொண்டதாகவும், அசிங்கமான அர்த்தம் அற்றதாகவும் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக அமைந்து விட்டால் அதுவே அவர்களுக்குப் பட்டப் பெயராக மாறி விடும். தனது தரக்குறைவான பெயரைக் கூறும் போதே அவன் கூனிக் குறுகிக் குற்ற உணர்வுடன் வாழும் நிலை உருவாகும். எனவே பெயர் அழகாகவும், நல்ல அர்த்தமுடையதாகவும், எடுப்பாகவும் இருக்க வேண்டும்.
"நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள். உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது 'அப்துல்லாஹ்', 'அப்துர்ரஹ்மான்' என்பதாகும். ஹாரிஸ் உழைப்பாளி, 'ஹம்மாம்' - - முயற்சிப்பவன் என்பன மிகவும் உண்மையானவையாகும். 'ஹர்ப்' (போர்), 'முர்ரா' (கசப்பு ) என்பன மிகவும் வெறுக்கத்தக்கவையாகும்" என நபி () அவர்கள் கூறினார்கள்."
(அறிவிப்பவர்: இப்னு உமர்() ஆதாரம்: அபூதாவூத், நஸஈ)
இவ்வாறே சில பெயர்களைக் குறிப்பிட்டு அந்தப் பெயர்களை வைக்க வேண்டாம் என்றும் நபி() அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று சிலர் தமது பிள்ளைகளின் பெயர் ஆங்கில உச்சரிப்புக்கு style ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் அதன் அர்த்தம் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தது போல் நபிமார்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் அருகி வருகின்றது. அவை பழைய பெயர்களாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறே முக்கிய ஸஹாபாக்களின் பெயர்கள் கூட பழைய பெயர் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். இதனால் இஸ்லாமிய வரலாற்றை மறந்த சந்ததிகளாக எதிர்கால சந்ததியினர் மாறும் அபாயம் உள்ளது.
சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்துதல்:
நபி() அவர்கள் குழந்தை பிறந்து 7 ஆம் நாளில் அதன் தலைமுடி மழிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் குழந்தையை விட்டும் தொல்லைகள் அகற்றப்படும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையில் கைக் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது அதற்கு இராகத்தையும், சுகத்தையும் அளிக்கும்.
வளர்ந்த சிறுவர்-சிறுமியர் என்றால், "சிறுவர் தானே!” என அவர்களின் சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தாது இருக்க முடியாது. அவர்களின் தோற்றம் கோமாளித்தனமானதாகவோ, வெகுளித்தனத்தை வெளிப்படுத்துவதாகவோ அமைந்து விடக் கூடாது. இது அவர்களின் ஆளுமையைப் பாதிக்கும். தன்மானச் சிக்கலை உண்டுபண்ணும்.
'இப்னு உமர்() அவர்கள் இது குறித்துக் கூறும் போது, நபி (ஸல்) அவர்கள் "அல்கஸஃ'வைத் தடுத்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். "அல்கஸஃ' என்றால் என்ன? எனக் கேட்ட போது, 'சிறுவர்களின் தலையில் ஒரு பகுதியைச் சிரைத்து, மறுபகுதியை விட்டு விடுவதாகும்' எனக் குறிப்பிட்டார்கள்."
(புகாரி, முஸ்லிம்)
பிள்ளைகளின் பெயரால் புனைப்பெயர் சூட்டல்:
ஒருவருக்கு அப்துல்லாஹ் என்றொரு குழந்தை இருந்தால், அவர் தன்னை அபூ அப்துல்லாஹ் என அடையாளப்படுத்திக்கொள்வதை இது குறிக்கும். இது குழந்தையிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
எனது பெயரால்தான் என் தந்தை அறியப்படுகின்றார் என அறியும் போது, தான் தவறு செய்தால் தனது குடும்பத்தின் பெயர் கெட்டு விடும் என்ற உணர்வை ஏற்படுத்தும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் கூட அவரது மகன் காசிமின் பெயரால் அபுல் காசிம் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
தமது அபூ ஷுறைஹ்(ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள். "தாம் வெளியூரில் இருந்து நபி(ஸல் ) அவர்களைச் சந்திப்பதற்காகத் தூதுக்குழுவினருடன் வந்திருந்த வேளை எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் (அறிவின் தந்தை) என அழைப்பதை நபி (ஸல் ) அவர்கள் செவியுற்றார்கள். உடனே நபி (ஸல் ) அவர்கள் என்னை அழைத்து, 'அல்லாஹ்தான் ஞானம் மிக்கவன். அவனிடமே அனைத்து ஞானங்களும் மீளும். எனவே, நீ உன்னை "அபுல் ஹகம்' என்று புனைப் பெயர் சூட்டிக்கொள்ளாதே!' என்றார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! எனது கூட்டத்தினருக்கு மத்தியில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்னிடம் வருவார்கள். நான் அளிக்கும் தீர்ப்பை இரு சாராரும் திருப்தியுடன் ஏற்பார்கள்!" என்று கூறினேன். இது கேட்ட நபி (ஸல் ) அவர்கள், "இது எவ்வளவு அழகான விடயம்!' என்று கூறி விட்டு, 'உனக்குக் குழந்தைகள் இருக்கின்றார்களா? எனக் கேட்டார்கள். ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ் என்று மூவர் உள்ளனர்!' என்றேன். 'அவர்களில் மூத்தவர் யார்?' என நபி (ஸல் ) அவர்கள் கேட்டார்கள். நான், ஷுரைஹ்!' என்றேன். ‘அப்படியாயின் நீ அபூஷுரைஹ்!' என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்." (அபூதாவூத்)
எனவே, குழந்தைகளின் பெயரைக் கொண்டு தந்தை “அபூ” என்றும், தாய் “உம்மு” என்றும் அழைக்கப்படுவது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமிடையில் நெருக்கத்தை உண்டுபண்ணுவதுடன் அவர்களிடத்தில் பொறுப்புணர்ச்சி யையும் ஏற்படுத்தும்.
கத்னாச் செய்தல்:
ஆண் குழந்தைகளுக்கு "கத்னா" செய்வது குழந்தையின் ஆன்மீகத்திற்கும், ஆண்மைக்கும். ஆரோக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய ஸுன்னாவாகும். ஆண்களுக்குப் போன்று பெண் பிள்ளையின் "கத்னா” அவசியப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும் தடை என்று கூறுவதற்கும் இல்லை.
சில நாடுகளில் பெண் பிள்ளைகளுக்குக் கூடப் பத்து வயது தாண்டிய பின்னர் "கத்னா”ச் செய்யும் வழக்கமுள்ளது. இதனால் சிலபோது பாரிய பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. இந்நடைமுறைகள் நமது நாட்டில் இல்லை என்பது திருப்தி தரும் அம்சமாகும்.
முன்னைய காலங்களில் ஆண் பிள்ளைகளுக்குச் செய்யும் "கத்னா”வையும் "ஸுன்னத்துக் கலியாணம்" என்ற பெயரில் பெரும் அளவு விழாவாக எடுப்பதும், "கத்னா”வை முன்னிட்டுப் பல்வேறுபட்ட சடங்குகளை அரங்கேற்றுவதும் வழக்கமாக இருந்தது. எனினும் மார்க்க அறிவு வளர்ச்சி, பொருளாதார நெருக்கடி, மருத்துவ முன்னேற்றம் என்பன இந்நிலையை மாற்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மருத்துவர் மூலம் 'கத்னா'வை சர்வ-சாதாரணமாகச் செய்து விடும் வழிமுறை வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.
குழந்தைகளினால் ஏற்படும் சிரமங்களை சகித்தல்:
சில பெற்றோரும், பெரியவர்களும் குழந்தைகள் சிறுநீர் கழிப்பர்; அசுத்தமாக இருப்பர் என்பதால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சுவதில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருப்பதும் இல்லை. இது தவறாகும்.
"ஆயிஷா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல் ) அவர்களிடம் குழந்தைகள் அழைத்து வரப்படுவார்கள். நபியவர்கள் அக்குழந்தைகளுக்காக 'துஆ'ச் செய்வார்கள். ஒரு ஆண் குழந்தை நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நபியவர்களின் ஆடையில் அக்குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. நபியவர்கள் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை." (முஸ்லிம்)
"நபி (ஸல் ) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. நபி (ஸல் ) அவர்கள் அக்குழந்தையைத் தூக்கிய போது அது நபி (ஸல் ) அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. நபி (ஸல் ) அவர்கள் சிறுநீர் பட்ட தமது ஆடையில் நீரைத் தெளித்தார்கள். பின்னர் ஒரு பெண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தையும் நபி (ஸல் ) அவர்கள் மீது சிறுநீர் கழித்த போது நபி (ஸல் ) அவர்கள் ஆடையில் சிறுநீர் பட்ட இடத்தைக் கழுவினார்கள்." (அஹ்மத்)
நபி(ஸல் ) அவர்களின் அடிமையாக இருந்த ஸைத்(ரலி ) அவர்களது மகன் உஸாமா(ரலி ) அவர்கள் பார்ப்பதற்குக் கண்ணங்-கரேர் என்று இருப்பார். இவருடைய தாயார் ஒரு "நீக்றோ" அடிமையாவார்கள். நாம் அழகான பிள்ளைகள் மீதுதான் அன்பைச் சொரிவோம். அவர்களைத்தான் அள்ளி அணைப்போம். ஆனால் நபி(ஸல் ) அவர்கள் பார்க்கப் பிடிக்காத பிள்ளைகளுடனும் பாசத்தைப் பொழிந்து பழகுவார்கள்.
இந்த உஸாமா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
"நபி (ஸல் ) அவர்கள் என்னைத் தூக்கி அவர்களது ஒரு மடி மீதும், நபி (ஸல் ) அவர்களது பேரன் ஹஸன் (ரலி ) அவர்களைத் தூக்கி ஒரு மடியிலும் அமர்த்தி, பின்னர் எம்மிருவரையும் அணைத்துக் கொண்டு,
கருணை 'யா அல்லாஹ்! இவ்விருவர் மீதும் நீ காட்டுவாயாக! நானும் இவ்விருவர் மீதும் அன்பு காட்டுகின்றேன்' எனப் பிரார்த்தித்தார்கள்." (புகாரி)
எனவே, குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களை மடியில் அமர்த்துவது, தூக்குவது, அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது என்பன குழந்தைகளின் ஆளுமை விருத்திக்குப் பெரிதும் உதவும். நாம் பாதுகாப்பான, அன்பான சூழலில் வாழ்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளிக்கும்.
கண்ணியப்படுத்துவதும், நடத்துவதும்: கண்ணியமாக
குழந்தைகளைப் பெற்றோரும், பெரியோரும் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுடன் கண்ணியமாகப் பழக வேண்டும். இதன் மூலம் கண்ணியமான நடத்தைகளைப் பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள். அவர்களை அவர்களுக்கென்றே உள்ள பெயர்கள் கொண்டு அழைப்பதும் அவர்களுக்கு உட்சாகமூட்டும் அத்துடன் மகிழ்வளிக்கும்.
நபி (ஸல் )அவர்கள் அபூதல்ஹா(ஸல் ) அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்களது மகன் அபூஉமைரை நபி(ஸல் ) அவர்கள் மிக அன்புடன் "யா அபாஉமைர்!" என அழைப்பார்கள். இந்த அபூஉமைர் ஒரு குருவி வளர்த்து வந்தார். அது இறந்த போது பெரிதும் கவலைப்பட்டார். நபி(ஸல் ) அவர்கள் இதை அறிந்து, "யா அபா உமைர்! மா பஅலன் னுஅய்ர்?” (அபூ உமைரே! உங்கள் குருவிக் குஞ்சுக்கு என்னவானது) என இலக்கிய நயம் கொஞ்ச அவரிடம் பேசி அவரை மகிழ்வித்தார்கள்.
எனவே, சிறுவர்களைச் "சின்னப் பிள்ளைகள் தானே!" எனக் குறைத்து மதிப்பிடும் வகையில் அழைக்காமல் அவர்களை கௌரவித்தே அழைக்க வேண்டும். இது அவர்களுக்குள்ளேயே "நாம் கௌரவமானவர்கள்” என்ற உணர்வை ஊட்டும். இதன் மூலம் அவர்களது ஆளுமை வளர்வதுடன் தமது கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் பண்பாட்டுடன் நடக்க முற்படுவர்.
எனவேதான் அடிமைச் சிறுவர்களை “அடிமை” என அழைக்காமல், "குலாம்” (சிறுவனே!) என அழைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
நெருக்கமான, இறுக்கமான உறவு:
நபி (ஸல் ) அவர்கள் அனைத்துச் சிறுவர்- சிறுமியருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள். சிறுவர்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறுவார்கள். அவர்களுடன் உரையாடுவார்கள். அவர்களுக்கு "துஆ”ச் செய்வார்கள். சிறுவர்கள் உரிமையுடன் தன்னுடன் பழகுவதற்கு இடமளிப்பார்கள். இந்த உறவின் நெருக்கத்தின் காரணமாக தொழும் போது கூடக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு தொழுதுள்ளார்கள்.
"அபூகதாதா அல் அன்ஸாரி (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். உமாமா (ரலி ) அவர்களைச் சுமந்து கொண்டு தொழுபவராக நபி(ஸல் ) அவர்கள் இருந்தார்கள். (உமாமா நபியவர்களது பேத்தியாவார்கள். நபியவர்களின் மகள் ஸைனப் அவர்களது குழந்தையே உமாமாவாகும்.) ஸுஜூது செய்யும் போது பிள்ளையைக் கீழே வைப்பார்கள். எழும் போது சுமந்து கொள்வார்கள்." (புகாரி)
நபி (ஸல் ) அவர்கள் சிறுவர்-சிறுமியருடன் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகியதுடன் அவர்களுடன் விளையாடவும் செய்தார்கள். குழந்தைகளை முதுகில் ஏற்றிக் குதிரைச் சவாரி எனத் தானே தவழ்ந்து அவர்களை மகிழ்விப்பார்கள். இதனால் பழக்கப்பட்ட நபிகளாரின் பேரர் ஹஸன் அல்லது 'ஹஸைன் ஒரு முறை நபி(ஸல் ) அவர்கள் தொழுகையில் ஸுஜூதில் இருக்கும் போதே அவர் சவாரிக்கத் தயாராகின்றார் என எண்ணி அவரின் முதுகில் ஏறிய சம்பவங்களும் உள்ளன.
"நபி(ஸல் ) அவர்கள் ஒரு மஃரிப் அல்லது இஷாத் தொழுகையின் போது நீண்ட நேரம் ஸுஜூது செய்தார்கள். தொழுகை முடிந்ததும் "அல்லாஹ் வின் தூதரே! செய்தீர்கள். என்றுமில்லாதவாறு நீண்ட நேரம் ஸுஜூது உங்களுக்கு வஹீ வருகின்றதோ! என நாம் நினைத்தோம். அல்லது ஏதோ நடந்து விட்டதோ! என எண்ணினோம் எனக் காரணங்களைக் கூறினர். அதற்கு நபி (ஸல் ) அவர்கள் ‘அப்படி ஒன்றுமில்லை. எனது பேரன் என் முதுகில் ஏறி விட்டார். அவர் தானாக இறங்கும் வரை நானாக எழுந்து அவருக்கு அதிர்ச்சியூட்டுவதை நான் வெறுத்தேன்' (எனவேதான் தாமதித்தேன்) எனக் கூறினார்கள்."
- (ஹதீஸின் சுருக்கம் நஸாஈ, அஹ்மத்)
இந்த ஹதீஸ், நபி(ஸல் ) அவர்கள் குழந்தைகளுடன் எவ்வளவு நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!