மரணப்பிடியில் மனிதன்

 


மரணப்பிடியில் மனிதன்


கண்ணியத்திற்குரிய பெரியோர்களே! சகோதரர்களே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுமாறு, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம்செய்கிறேன். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா இவ்வுலகத்தில் வாழுகிற நமக்கு ஒருமுடிவை வைத்திருக்கிறான். அதுதான் மரணம்! யாரும் அந்த மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. ஓடி ஒளிய முடியாது.


ஏதாவது விலைகொடுத்து அந்த மரணத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாமா என்றால் நிச்சயமாகமுடியாது யாராவது ஒரு மருத்துவரை அணுகி அவரிடம் மரணத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதாவது மருந்து வாங்க முடியுமா என்றால் முடியாது.


அல்லது பெரும் ராணுவங்களை யார்செய்து வைத்துக் கொண்டு அந்த மரணத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்று முயற்சிசெய்தால், அந்த முயற்சி பலனளிக்குமா? நிச்சயமாகபலனளிக்காது!


இப்படி உலகத்திலே, எங்கே ஓடினாலும், எங்கே பறந்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், எவ்வளவுதான் நம் உடலை ஆரோக்கியமாக, சுகமாக பாதுகாத்துக் கொண்டாலும் சரி, நிச்சயம் ஒரு நாள் மரணம் வந்தே தீரும். இந்த மரணத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த உலகத்தில் அவன் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் விதித்துவிட்டான்.


குர்ஆனுடைய பல இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நமக்கு நினைவூட்டிக் கொண்டே வருகிறான்.


பல முறை நாம் இந்த வசனங்களை ஓதியிருப்போம், அறிவுரைகளிலே கேட்டிருப்போம்.


‎‫كل نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ‬‎


ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். (அல்குர்ஆன் 3:185)


அல்லாஹு தஆலா மிக இலக்கிய நயத்தோடு, மிகவும் சரியாக சொல்கிறான்.


‎‫كُل نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ‬‎


ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்.


அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:


‎‫قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ‬‎


அல்குர்ஆன் 62.8


எந்த மரணத்தைப் பார்த்து நீங்கள் பயந்து ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்.


அதுவும் ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டமல்லவிரண்டோடுகிறீர்களோ, தலைதெறிக்க ஓடுகிறீர்களோ, 2 என்றால் எப்படி சிங்கத்தை பார்த்த மற்ற பிராணிகள் மான், கழுதை போன்ற பிராணிகள் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தலை தெறிக்க எந்த திசையில் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுமல்லவா? அந்த ஓட்டத்திற்குதான் அரபியிலே என்று சொல்லப்படும்.


அல்லாஹ் சொல்கிறான். எந்த மரணத்தைப் பார்த்து நீங்கள் விரண்டோடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்


‎‫فَإِنَّهُ مُلَاقِيكُمْ‬‎


அல்குர்ஆன் 62.8


எப்படி அழகிய வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். நீங்கள் அந்த மரணத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.


ஒருவர் சந்திக்க வருவார் என்றால் என்ன பொருள்? நாம் எங்கே இருக்கிறோமோ அந்த இடத்தை தேடி வருபவரைதான், சந்திக்கவருபவர். ஒருவரை தேடிசெலவதைத்தான், சந்திக்க செல்வது என்று சொல்லப்படும். அல்லாஹ் சொல்கிறான், நீங்கள் எந்த மரணத்தைப் பார்த்து விரண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களை சந்திக்கும்


‎‫فَإِنَّهُ مُلَاقِيكُمْ‬‎


அல்குர்ஆன் 62:8


கண்ணியத்திற்குரியவர்களே! இந்த மரணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அல்லாஹு தஆலா அதன் தேதியை. அதன் நேரத்தை, நமக்கு கொடுக்கவில்லை. குறிப்பிடவில்லை. ஏன்? அதைக் குறிப்பிட்டால், மனிதன் அலட்சியத்தில் வீழ்ந்துவிடுவான்.


சரி. இன்னும் நமக்கு நாட்கள் இருக்கின்றன. இன்னும் நமக்கு சில ஆண்டுகள் இருக்கின்றன.


அப்போது நாம் அல்லாஹ்வை வணங்கிகொள்ளலாம். அப்போது நாம் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம், அப்போது நாம் நம் தவறுகளை விட்டு திருந்திக்கொள்ளலாம் என்று மனிதன் அந்த குறிப்பிட்ட நாளின் மீது சார்ந்து விடுவான் என்பதற்காக அல்லாஹ் மரணத்தை நமக்கு முடிவுசெய்த அவன்- அது நிகழும் தேதியை, அது நமக்கு வரும் தேதியை மறைத்துவிட்டான்.


யாரும் சொல்ல முடியாது நாம் எப்போது மரணிப்போம் என்று இன்னும் நமக்கு மரணம் எந்த அளவு சமீபத்தில் இருக்கிறது என்றால் இந்த மஸ்ஜிதிலிருந்து ஜுமுஆ தொழுகையை முடித்துவிட்டு நாம் சலாமத்தாக வீடு சேர்வோமா? என்பதற்கு நமக்கு ஏதாவது உறுதிமானம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! இந்த நேரத் தொழுகையை நாம் தொழுது முடிப்போமா? அதற்கு ஏதாவது உறுதி இருக்கிறதா?


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக நம் பணியாளரின் சகோதரர். ரமழான் மாதத்தின் இருபத்தி ஏழாவது இரவு, தன் முஹல்லாவிலுல்ல அனைவரையும் பள்ளிக்குஅழைத்துவருகிறார். அது ஒரு கிராமம். அவர்தான் அந்த பள்ளியிலே இமாமாக இருக்கிறார். அனைவரையும் அழைத்து வந்ததற்குப் பிறகு, பள்ளியிலே பாங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அனைவரையும் ஸஃப்பிலே சரியாக நிறுத்திவைக்கிறார்.


இகாமத் சொல்லப்படுகிறது. அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு கையை உயர்த்தினார். உயர்த்திய கையை தோள் பட்டை வரை கொண்டு போகாமல், நெஞ்சு வரை கையை கொண்டு போய் நெஞ்சைப் பிடிக்கிறார். நெஞ்சிலே கைவைத்தவர் அதே நிலையில் பூமியிலே அமர்ந்து விடுகிறார். பிறகு சாய்கிறார். முன் ஸஃப்பில் இருந்தவர்கள் ஓடோடி சென்று பார்க்கும்போது கண்ணை மூடிகிறார். உயிர் பிரிந்து விடுகிறது. அவருக்கு வயது எத்தனை? முப்பத்தைந்து வயதுதான்!


கண்ணியத்திற்குரியவர்களே இந்த மரணம், இந்த மரணத்திற்காக முடிவு செய்யப்பட்ட வானவர், அவரிடத்திலே அல்லாஹு தஆலா இரக்கத்தைப் படைக்கவில்லை. குழந்தை என்று பார்க்கமாட்டார். கர்ப்பிணி என்று பார்க்கமாட்டார். ஏழை என்று பார்க்கமாட்டார். வயோதிகன் என்று பார்க்கமாட்டார். இவர் பயணத்தில் இருக்கிறாரே, இவரை கவனிப்பதற்கு இங்கு ஆளில்லையே! இவர் மரணித்து விட்டால் இவரை யார் எடுத்துச் செல்வார்கள்.


இவர் பறக்கிறாரே, இவர் தண்ணீரிலே (கப்பலில்) மிதக்கிறாரே! இவர் ஒரு தேவைக்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறாரே. இவருடைய பிள்ளைகள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கிறார்களே! இவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாரே, அல்லது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே, என்றெல்லாம் அந்த வானவர் பார்க்கமாட்டார்.


அப்படி பார்க்கும் தன்மையை அல்லாஹு தஆலா அந்த வானவருக்கு கொடுக்கவில்லை.


‎‫قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وَكُل بِكُمْ ثُمَّ إِلى رَبِّكُمْ تُرْجَعُونَ‬‎


அல்குர்ஆன் 32:11


அல்லாஹ் சொல்கிறான்: நபியே! நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்காக முடிவு செய்யப்பட்ட வானவர் உங்களை உயிர் கைப்பற்றுவார்.


அல்லாஹுத ஆலா, மலக்குல் மவ்த் என்ற பெரும் வானவரைப் படைத்திருக்கிறான் நம்மில் யாராவது அறிந்திருக்கிறாரா அவர் எப்படியிருப்பார் என்று?


கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்விடத்திலே நான்கு வானவர்கள் மிக கண்ணியத்திற்குரியவர்கள் அந்த நான்கு கண்ணியத்திற்குரிய வானவர்களிலே தலைவர் ஒருவர் இருக்கிறார் அவர்தான் ஜிப்ரீல் ஆவார். பிறகு இஸ்ராஃபீல், பிறகு மீகாயில், பிறகு மலக்குல் மவ்த் ஜிப்ரீல், இஸ்ராஃபீல், மீகாயில், மலக்குல் மவ்த் ஆகிய நான்குபேரும் மிக சிறப்பான வானவர்கள் ஆவார்கள்


ஒரு சாதாரண வானவர் வானவர்களிலே சாதாரணமானவர். ரொம்பவும் கடைசி தரத்தில்உள்ளவர். அவருடைய ஆற்றல் அவருடைய வல்லமை எப்படி என்றால் நாம் வாழுகிற இந்த பூமியைவிட நமக்கு ஒளிதருகிற சூரியனைவிட எத்தனையோ இலட்சம் மடங்கு ஒரு மடங்கல்ல இருமடங்கல்ல. எத்தனையோ இலட்சம் மடங்கு பெரிய நட்சத்திரத்தை சாதாரணமாக வானத்திலிருந்து பிடுங்கி கையிலே எடுத்துவிடுவார்.


தன் ஒரு கரத்திலே, வானத்திலே அல்லாஹ் பதித்திருக்கிற நட்சத்திரத்தை எப்படி நாம் புல்லை பிடுங்குவோமோ அல்லது ஒரு சிறிய பந்தை எடுப்போமோ, அல்லது ஒரு சிறிய பொருளை, இலேசான கனமற்ற பொருளை சாதாரணமாக எடுப்போமோ அது போன்று வானத்திலிருந்து அந்த நட்சத்திரத்தை அப்படியே பிடுங்கிவிடுவார்.


பிடுங்கியது மட்டுமல்ல அந்த பிடுங்கிய நட்சத்திரத்தை எப்படி நீங்கள் ஒரு பந்தை இலக்கை நோக்கி எறிவிர்களோ, ஒரு சிறிய பொடிக் கல்லை இலக்கை நோக்கி எறிவிர்களோ, அது போன்று அந்த நட்சத்திரத்தை அவர் எறிவார். எரிகின்ற அந்த நட்சத்திரம் பூமியில் விழுந்து விடாமல் இருப்பதற்காக இன்னொரு வானவர் அதைப் பிடித்துக் கொள்வார்.


கண்ணியத்துக்குரியவர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த வானவரின் உருவம் எப்படி இருக்கும். அந்த வானவரின் ஆற்றல், அல்லாஹ் அவருக்கு கொடுத்த வல்லமை எப்படி இருக்கும்!


இது எந்த வானவர், அல்லாஹ் படைத்த சாதாரணமான வானவருடைய ஆற்றல் இப்படி என்றால், ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல், மலக்குல் மவ்த் உடைய ஆற்றல், இன்னும் அவர்களுடைய உருவம் எப்படி இருக்கும்!


அல்லாஹு தஆலா ஜிப்ரீலுக்கு ஆறு நூறு இறக்கைகளை கொடுத்திருக்கிறான். அந்த ஆறு நூறு இறக்கைகளை அவர் விரித்தால், அதிலிருந்து ஒரு இறக்கை நமக்கு முன்னால் விரிக்கப்பட்டால், நாம் இந்த பூமியிலே எந்த கோடியில் சென்றாலும் சரி, அதற்குப் பின்னால் உள்ளதைப் நம்மால் பார்க்கமுடியாது


நம் கண் பார்வைக்கு முன்னதாக உதாரணமாக இப்படி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து வைக்கப்பட்டால், இந்த பேப்பருடைய தூரம் எவ்வளவு தூரம் இருக்கும்? அதிலிருந்து சற்று விலகிச் சென்றால் பின்னால் உள்ளதை பார்த்து விடலாம். ஆனால், ஜிப்ரீலுடைய இறக்கை விரிக்கப்பட்டால் எவ்வளவு தூரம் நீங்கள் இடது பக்கம் சென்றாலும் சரி. வலது பக்கம் சென்றாலும் சரி, நீங்கள் பின்னால் உள்ளதைப் பார்க்க முடியாது என்றால் அவருடைய உடல், அவருக்கு அல்லாஹ் கொடுத்த அந்த அமைப்பு எவ்வளவு பெரியதாக இருக்கும்!!


கண்ணியத்திற்குரியவர்களே! இஸ்ராஃபீல் என்ற மலக், அந்த வானவர் ஒரு சத்தம் போட்டால், சூரியனும் சந்திரனும் வானத்திலுள்ள அத்தனை நட்சத்திரங்களும் சின்னா பின்னமாகி விடும் பூமியிலுள்ள மலைகள் எல்லாம் பஞ்சாகப் பறந்து விடும் என்றால், அவருடைய சப்தத்திலே இவ்வளவு பெரிய ஆற்றலை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்றால், அவருடைய உடல், அவருடைய தோற்றம் எவ்வளவு பெரியதாக இருக்கும்.


கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி மலக்குல் மவ்த் நம் உயிரைக் கைப்பற்றுவதற்காக அல்லாஹ் முடிவு செய்த அந்த வானவரைப் பற்றி இப்னு அப்பாஸ் ரழியால்லாஹு அன்ஹு அவர்களும், இமாம் முஜாஹித் (1) ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சொல்கிறார்கள். நீங்கள் விருந்துக்கு செல்லும்போது தனி ஒருவராக நீங்கள் இருக்க உங்களுக்கு முன்னால் உணவு விரிப்பு வைக்கப்பட்டிருக்கும். அந்த உணவு விரிப்பிலே உங்களுக்குத் தேவையான பானங்கள், உணவுகள், பழங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும்


ஒருவருக்காக விரிக்கப்படும் உணவு விரிப்பு அதில் வைக்கப்படுகின்ற உணவின் வகை எவ்வளவு இருக்கும்? கண்ணியத்திற்குரியவர்களே! இப்னு அப்பாஸ் ரழியால்லாஹு அன்ஹு சொல்லுகின்றார்கள். 'முழு உலகமும் இந்த உலகத்தில் உள்ள படைப்பினங்கள், உயிரினங்கள் அனைத்தும் மலக்குல் மவ்த் உடைய உருவத்தை பொறுத்தவரை உங்கள் ஒருவருக்கு முன்னால் வைக்கப்படுகிற உணவு விரிப்பைப்போன்றுதான் (தாரீக் இப்னு क) (2)


எப்படி அதிலிருந்து நீங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்கிறீர்களோ, உங்களுடைய கையால் நீட்டி எடுத்துக் கொள்கிறீர்களோ, தண்ணீர் தேவை என்றால் எடுத்துக் கொள்கிறீர்கள் உணவு தேவை என்றால் எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள். ஆணம் தேவை என்றால் நீங்கள் ஊற்றிக் கொள்கிறீர்களோ! அது போன்றுதான் இந்த பூமியும் இந்த பூமியிலுள்ள படைப்பும் மலக்குல் மவ்த்தை பொருத்தவரை!


இந்த நொடியிலே. இந்த நொடியின் நொடியிலே. இங்கு ஒருவரை உயிர் வாங்குவதும். நாம் வாழுகிற இந்த இடத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருடைய உயிரை வாங்குவதும் அவருக்கு சமம்தான் ஒரு மனிதருடைய உயிரை வாங்குவதும் அவருக்கு சமம்தான், ஆயிரம் மனிதர்களுடைய கோடிக்கணக்கான உயிரினங்களுடைய உயிரை வாங்குவதும் சமம்தான்!


அவருக்கு எதுவும் சிரமமல்ல. அவருக்கு கீழ் அல்லாஹு தஆலா நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வானவர்களை பணியாளர்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இந்த வானவர்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளைக்குப் பணிந்தவர்கள். அல்லாஹ் யாருக்கு முடிவு செய்து விடுகிறானோ, அவருடைய உயிரை வாங்கி விடுவார்கள்


ஒவ்வொரு ஆண்டும் லைலத்துல் கத்ர் உடைய இரவிலே! ரமழானுடைய கடைசிப் பத்தில், ஒற்றை இரவுகளில் 'லைலத்துல் கத்ர் உடைய இரவு எப்போது ஏற்படுகிறதோ, அந்த இரவிலே அல்லாஹு தஆலா அந்த ஆண்டு மரணிக்கவேண்டியவர்களுடைய பெயர்களை அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்துவிடுகிறான். 


யாருக்கு எந்த இடத்திலே எப்படி எப்படி உயிர் வாங்க வேண்டும் என்பதை அந்த மலக்குல் மவ்த்திற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் லவ்ஹுல் மஹ்ஃபூள் உம்முல் கிதாபிலிருந்து அந்த விதியின் புத்தகத்திலிருந்து அவருக்கு குறிப்பெடுத்து கொடுக்கப்படுகிறது.


கண்ணியத்துக்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக வருகிறது. 'ஒருவருடைய பெயர், மரணிப்பவர்களிலே எழுதப்பட்டு மலக்குல் மவ்தின் கரத்திலே கொடுக்கப்பட்டு விடுகிறது. அவனோ திருமணம் முடிக்கிறான். அவனோ வியாபாரத்திற்காக பயணம் செய்கிறான். அவனோ பல எண்ணங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொண்டு இருக்கிறான். அவனோ அந்த ஆண்டு மரணிக்க வேண்டியவர்களின் பட்டியலிலே எழுதப்பட்டு இருக்கிறார்.


கண்ணியத்திற்குரியவர்களே ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களுக்கு முன்னால் சென்ற நபிமார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் வந்த ஸஹாபாக்கள், இமாம்கள், தாபியீன்கள் மரணத்தைக் குறித்து ஏராளமான அறிவுரைகளை நமக்கு சொன்னார்கள்.


காரணம் மனிதன் விரைவாகவும் அதிகமாகவும் மறந்து விடுகிற ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது என்றால், அது மரணம்தான். அதை விரைவாக மறந்துவிடுவான்! மனிதன் அதிகம் அதை மறந்து இருப்பான்! தன் வீட்டிலே தன் தந்தையோ, பாட்டனோ, தன் தாயோ, தன் பாட்டியோ மரணித்து இருப்பார்கள். அன்றைய பொழுது வரை நினைவில் வைத்திருப்பான் அடுத்த நாள். அடுத்த நாள் மறந்து விடுவான். எப்படி இவனது வாழ்க்கை தொடங்கி விடும் என்றால். ஏதோ அவருக்குத்தான் மரணம் இருந்தது. அவர் மரணித்து விட்டார். தனக்கு மரணமில்லை. தான் மரணிக்க மாட்டேன் என்பதைப் போன்ற இவரது வாழ்க்கை இருக்கும்.


தன் கண்ணுக்கு முன்னால் தந்தை மரணிப்பார் அதைப்பார்த்துக் கொண்டிருப்பான் மரணித்த தந்தை குளிப்பாட்டப்படுவார் அதையும் பார்ப்பான். அந்த மரணித்த தந்தைக்கு கஃபன் துணி அணிவிக்கப்படும். அதையும் பார்த்துக்கொண்டு இருப்பான். அந்த மரணித்த தந்தை நான்கு பேருடைய தோளிலே சுமக்கப்படுவார். கப்ரு குழியை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்.


அங்கே இறக்கி வைக்கப்படுவார். பிறகு அந்த கப்ரு குழியிலே வைக்கப் படுவார். பிறகு மண்ணை அவர் மீது போட்டு மூடப்படும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பான். தானும் இப்படித்தான் மரணிக்க வேண்டுமே என்று எண்ணிப் பார்க்க மாட்டான் விரைவாக மறந்து விடுவான். அதிகமாக மறந்து விடுவான் தன் கண்ணுக்கு முன்னால் தன் சகோதரன் அல்லது தன் நண்பன் அல்லது தன் வீட்டிலுள்ள ஒருவர் மரணிப்பதைப் பார்ப்பான் ஆனால் படிப்பினைப் பெறமாட்டான்.


கண்ணியத்திற்குரியவர்களே! ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களாகிய நமக்குச் சொன்னார்கள். மறுமையை நம்புகின்ற நமக்குச் சொன்னார்கள் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைதான் உண்மை என்பதை ஏற்றுக்கொண்ட நமக்குச் சொன்னார்கள். நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அறிவுரைப் பெறுவதற்கு நான் இரண்டைத் தருகிறேன். ஒன்று பேசாது இன்னொன்று பேசும்.


ஒரு பலவீனமான ஹதீஸின் கருத்தாவது நீங்கள் இந்த உலகத்தின் ஆசையிலிருந்து உங்களைத்தடுத்துக் கொள்வதற்கு, மறுமைக்காக தயாரிப்பதை நீங்கள் அதிகப்படுத்துவதற்கு, அல்லாஹ்வை பயந்த உண்மையான அடியார்களாக நீங்கள் வாழ்வதற்கு, அடியார்களுடைய உரிமைகளை சரியாக நீங்கள் கொடுத்து விடுவதற்கு நீங்கள் அறிவுரைப்பெறுவதற்கு உங்களுக்கு அறிவுரை செய்வதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பேசும் இன்னொன்று பேசாது பேசக் கூடியது எது? அல்குர்ஆன்! அல்குர்ஆன்! நீங்கள் அதை ஓதும்போது அல்லாஹ்வின் சட்டங்களை உங்களுக்கு அது நினைவுறுத்துகிறது. அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு பயமுறுத்துகிறது.


மறுமையை உங்களுக்கு பயமுறுத்துகிறது! சொர்க்கத்தின் மீது உங்களுக்கு ஆசையை ஊட்டுகிறது! நரகத்தைப் பற்றி உங்களுக்கு பயமூட்டுகிறது!


இரண்டாவது பேசாது! அது என்ன? அதுதான் மரணம்! அது பேசாது அது எதுவும் வாய்த்திறக்காது! அதை நீங்கள் பார்த்து படிப்பினை பெற்றுக் கொண்டால் போதுமானது (4)


கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நம்முடைய நிலைமை, நமக்கு முன்னால் சென்ற நல்லவர்களுடைய நிலைமை, இரண்டையும் எடுத்து பாருங்கள்.


இமாம் இப்ராஹிம் நகயிசொல்லுகின்றார்கள் எங்கள் பகுதியிலே யாராவது ஒருவருடைய குடும்பத்திலே மரணம் நிகழ்ந்துவிட்டால் பல நாட்களுக்கு அதன் அடையாளங்கள் இருக்கும். (ஹில்யத்துல் அவ்லியா) (5)


இன்று நம் குடும்பத்திலும் தான் மரணம் ஏற்படுகிறது. அந்த அடையாளத்தை எப்படி தெரிந்து கொள்கிறோம். அங்கே சாமியானா போடப்படும். பிறகு கல்யாண வீட்டைப் போன்று அங்கே பிரியாணி ஆக்கப்படும். மரணித்தவரின் வீட்டிலே என்ன சாப்பாடு சமைக்கப்படுகிறது பாருங்கள்!


மரணத்தை மறக்க வைக்கும்படியான உலகத்தின் ஆசையை ஊட்டும்படியான சுவையான உணவு சமைக்கப்பட்டு, வந்தவர்களுக்கெல்லாம் பரிமாறப்படுகிறது. இது நம்மவர்களுடைய மரணம் நிகழ்ந்த வீட்டின் நிலை! இதே வீட்டிலே. இன்னும் சில மக்கள் வருவார்கள் எதற்காக? இந்த மரணித்தவர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? நமக்கு அதிலே என்ன பங்கு கிடைக்கும் என்பதற்காக!


பிள்ளைகளில் சிலர் இருப்பார்கள், தந்தையின் சொத்து என்ன? தந்தையின் பேலன்ஸ் என்ன? தந்தை எதையெல்லாம் எங்கெல்லாம் மறைத்து வைத்திருக்கிறார்? என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள்


தந்தை மரணித்து விட்டாலே, அவர் என்ன வசியத் செய்திருக்கிறார், அவர் யாருக்காவது கடன்பட்டு இருக்கிறாரா. அவர் யாருக்காவது கொடுக்க வேண்டுமா, அந்த ஹக்குகளை நான் அவருடைய ஜனாஸாவை எடுப்பதற்கு முன்னால் ஒப்படைத்து விடவேண்டுமே. அதற்கு என்னிடத்திலே என்ன செல்வம் இருக்கிறது என்றெல்லாம் கணக்கு போட மாட்டார்கள்.


தந்தை யாருக்காவது கொடுத்திருக்கிறாரா என்பதைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருப்பார்கள். தந்தைக்கு என்ன சொத்து இருக்கிறது என்பதைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி சிலர் இருப்பார்கள்!


கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் சிலர் தந்தைக்குப் பின்னால் நான்தான் முழு சொத்துக்கும் உரியவன் நான் சொல்வது போன்று தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று கணக்குப் போடுவார்கள்!


இமாம் இப்ராஹிம் அன்னகியி சொல்லுகின்றார்கள். எங்கள் குடும்பத்திலே மரணம் நிகழ்ந்து விட்டால் அதனுடைய தாக்கத்தை அதனுடைய அந்தப் பாதிப்பை பல நாட்களுக்குத் தெரியலாம் என்று


அவர்களின் நிலை ஏன் அப்படி இருந்தது?


தங்கள் முழு குடும்பத்தையும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என்று அந்த அளவு அவர்கள் தர்பியா கொடுத்திருக்கிறார்கள்.


அதாவது துக்கம், துயரம் என்று சொன்னால் கவலைப்பட்டு விட்டு, ஓய்ந்து உட்கார்வது கிடையாது.


இப்படித்தானே நாமும் மரணிப்போம் என்று மரணத்தை பயந்து நன்மையில் தீவிரம் காட்டுவது. பாவங்களை விட்டு தவ்பா செய்வது, அடியார்களுடைய ஹக்குகளை திரும்பக் கொடுப்பது என்று வணக்க வழிபாடுகளில் தீவிரமாக ஈடுபடுவது, நல்லமல்களில் விரைவது. மரணத்தின் தாக்கத்தை எங்கள் குடும்பத்தில் பார்க்கலாம் என்று இதைத்தான் இப்ராஹீம் கூறினார்கள்.


ஒருவர் மரணித்து விட்டால், ஒருவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், நாங்கள் பயந்து நடுங்குவோம். நாங்கள் என்ன பேசிக்கொள்வோம் என்றால் இவருக்கு ஒரு பயங்கரமான நிகழ்வு நிகழ்ந்துவிட்டது என்று.


எப்படி எல்லாம் நல்லவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள்!


மரணித்த இவருக்கு பயங்கரமான ஒரு நிகழ்வு நிகழ்ந்துவிட்டது! ஆம், மரணம் அவ்வளவு பயங்கரமானது


அவர்கள் எதைப் பற்றி கவலைப்பட்டார்கள்? எதைப்பற்றி அழுதார்கள்?


இவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து விட்டாரே! ரஹ்மத்துடைய மலக்குகள் இவரை எடுத்துச்சென்று சொர்க்கத்திலே வைத்தார்களா, அல்லது அதாபுடைய மலக்குகள் எடுத்துச்சென்று நரகத்திலே இவரை வைத்தார்களா என்று நமக்குத் தெரியவில்லையே என்ற பயத்திலும் கவலையிலும் துக்கத்திலும் அந்த நல்லவர்கள் இருப்பார்கள்.


பயம் எப்படி இருக்க வேண்டும்? இரண்டு வகையான பயம், இரண்டு வகையான கவலை உள்ளது ஒன்று நாம் பயப்படுவது. நம்மவர்கள் கவலைப்படுவது. அது எப்படி என்றால் இவர் செத்து விட்டாரே! இவர் இறந்து விட்டாரே! என்னை விட்டுச் சென்றுவிட்டாரே! இவர் நம்மை பிரிந்துவிட்டாரே! என்று


கண்ணியத்திற்குரியவர்களே! இதுவல்ல துக்கம் இதுவல்ல பயம்.


நம்மை பிரிந்த இந்த சகோதரருடைய நிலைமை என்ன? இவருடைய இறுதி தங்குமிடம் எங்கே முடிவு செய்யப்பட்டிருக்கிறது? சொர்க்கவாசிகளில் இவர் முடிவு செய்யப்பட்டு இருக்கிறாரா? அல்லது நரகவாசிகளிலே இவர் முடிவு செய்யப்பட்டிருக்கிறாரா?


இதுவல்லவா நாம் பயப்பட வேண்டிய இன்னும் கவலைப்பட வேண்டிய பயங்கரமான விஷயம்!


ஒருவர் இங்கிருந்து கண்ணை மூடி விட்டால், அடுத்து அவருடைய மன்ஸில் தங்குமிடம் இரண்டில் ஒன்றுதான்.


ஒருவருடைய கண் மூடப்பட்டு விட்டால் அடுத்து அவருடைய மன்ஸில் தங்குமிடம் இரண்டில் ஒன்றுதான். ஒன்று சொர்க்கமாக இருக்கும். இல்லையென்றால் நரகமாக இருக்கும். அல்லாஹ் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும்.


உஸ்மான் ரழியால்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள்: (6)


ஆதமுடைய மகனே! நீ பூமியில் பிறந்த நாளிலிருந்து உனக்காக நிர்ணயிக்கப்பட்ட வானவர். உன்னை வந்து பார்த்துக் கொண்டே செல்கிறார். எங்கே இருக்கிறாய்? நம்மை ஒவ்வொரு நாளும் அவர் சந்தித்துக் கொண்டே இருக்கிறார். நீ எங்கே இருக்கிறாய்? என்று.


நமது வலது பக்கமுள்ள, இடது பக்கமுள்ள, முன்னாலுள்ள, பின்னால் உள்ள மனிதர்களைத்தான் உனது கண்ணால் நீ பார்க்க முடியும். மலக்குகளை அல்ல.


நீ நினைத்துக் கொள்ளாதே! மலக்குல் மவ்த் உன்னை தவறவிட்டு விட்டார் என்று. உன்னை மிஸ் பண்ணி விட்டார் என்று எண்ணிக் கொள்ளாதே!

கருத்துகள்