மரணத்தின் சிந்தனைகள் .
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
இறந்தவரின் உடலை பார்க்கச் செல்லும் ...
இவ்வுலகத்தை விட்டு பிரிந்து செல்லும் அவரது முகத்தை கடைசியாக பார்ப்பது.. . அவரோடு நாம் இருந்த சந்தர்ப்பங்களை சிந்தனை மீட்டுவது. அதனால் உள்ளம் கவலை கொள்வது.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வது...
அவருடைய மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்வது..
அவரைப் பற்றிய நல்ல விஷயங்கள் இருந்தால் அதைப் பற்றி மட்டுமே சுருக்கமாக பேசுவது...
இவை அனைத்தும் அந்த இடத்தில் பிரதானமாக இருக்க வேண்டும்.
இதை விடுத்து அங்கே சற்று தள்ளி அமர்ந்து கொண்டு ஒரு Gathering கிடைத்துவிட்ட சந்தர்ப்பத்தில் தேவையில்லாத விஷயங்களை சன்னமாக பேசிக் கொண்டு, சிரிப்பது தெரியாமல் அடக்கமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பது...
இறந்துவிட்ட மனிதரைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே அவரை நைச்சியமாக விமர்சிப்பது, அவருடைய குறைகளை பேசுவது, எல்லாம் பேசி முடித்த பிறகு ரொம்ப நல்ல மனிதர் என்று சொல்வது...
மிகவும் நெருக்கமானவர்கள் வரும்போது ஓடிச் சென்று அவர்களை கட்டிப்பிடித்து மிகையாக சத்தமிட்டு அழுது புலம்புவது...
நம் இருப்பை அந்த குடும்பத்தார் உணர வேண்டும் என்பதற்காக அதிக பிரசங்கித்தனமாக அங்கே செயல்படுவது...
இவைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்ளும்போது அங்கே மௌனமே மட்டுமே பிரதானமாக இருக்கும். மெளனம் கலைத்து அவர்கள் பேச ஆரம்பித்தால் அங்கே மரணம் பற்றிய சிந்தனை மட்டுமே அந்த பேச்சில் இருக்கும்.
மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!
உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்,
*"உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்."*
(ஆதாரம்: அபூதாவூத்)
நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன், உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் து'ஆச் செய்வார். எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ?
எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் !
ஒரு ஹதீஸ்,
அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
*"நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.*
ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை து'ஆ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும்.
மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.
மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்.
"உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்."
ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் து'ஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
*மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் து'ஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!*
எனவே அந்த து'ஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.
*அல்லாஹ் மிக்க அறிந்தவன்.*
படித்ததில் பிடித்தது பதிவாளருக்கு நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!